‘Mufasa: The Lion King’ Review: இருப்பிடத்தை தொலைத்த முஃபாசா, பேரரசனாக உயர்ந்தானா?
‘Mufasa: The Lion King’ Review(3.5 / 5)
Mufasa : The Lion King
தாய் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வரும் முஃபாசா ஒரு பெரும் துயரால், அவன் மண்ணை விட்டு பிரியும் சூழல் உருவாகிறது. நீரில் தத்தளிப்பவனுக்கு ஆபத்பாந்தவனாய் உதவுகிறான் இளவரசன் டாக்கா. தனக்குப் பின் இந்தக் காட்டை ஆளும் தலைவன் டாக்காதான் என்பதால், முஃபாசாவை பார்த்த கணம் முதல் வெறுக்கிறான் டாக்காவின் தந்தை ஒபாஸி.
இன்னும் தன் கடந்த காலத்திலிருந்து முழுமையாய் வெளியே வராத முஃபாசா, டாக்காவின் தாய் ஈஷேவின் அரவணைப்பில் வளர்கிறான். வெள்ளை சிங்கக் கூட்டத்தின் தலைவனான கீரோஸிற்கு ஆறா வடுவை ஏற்படுத்துகிறான் முஃபாசா. அதற்குப் பழிவாங்க ஒபாஸியின் கூட்டத்திற்கு குறி வைக்கிறான் கீரோஸ். கீரோஸின் கண்களில் மண்ணைத் தூவி, தான் தொலைத்த இடத்தை மீண்டும் கண்டடைந்தானா முஃபாசா என்பதே Mufasa : The Lion King படத்தின் மீதிக்கதை.
சம்பிரதாயமான இரண்டாம் பாகம் என இழுக்காமல், அதற்கென சுவாரஸ்யமான ஒன்லைன் பிடித்த டிஸ்னி குழுவுக்கு முதல் வாழ்த்துகள். ராஜ பரம்பரையில் இல்லாதவன் அரசு ஆளலாமா என்னும் கேள்வி முதல் பாகத்தில் வேறு மாதிரியான தொனியில் வெளிப்பட்டிருக்கும். அந்தவகையில் இந்த பாகத்தில், ஒருவன் அரசாள அவனின் மேன்மைகளே உதவும் என்பதை அழுத்தமாகச் சொல்லி அசத்தி உள்ளார்கள். முதல் பாகத்தை ஜான் ஃபேவ்ரி இயக்க, இந்தப் பாகத்ததை இயக்கியிருக்கிறார் மூன்லைட் புகழ் பேரி ஜென்கின்ஸ். முஃபாசாவின் முன்கதையுடன், டாக்காவின் முன்கதையும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. circle of life, அரசாளும் தகுதி குறித்த வசனங்களும் அருமை.
அசத்தும் டப்பிங்
இந்தியில் ஷாருக் கான், தெலுங்கில் மகேஷ் பாபு என லயன் கிங் படங்களில் டப்பிங் என்பதே படத்துக்கு மிகப்பெரிய USP-தான். தமிழில் முதல் பாகத்திற்கும் பெரிய வாய்ஸ் காஸ்ட்டிங் எல்லாம் இல்லைதான். தமிழில் முதல் பாகத்திற்கு ஸ்காருக்கு குரலுதவி செய்திருப்பார் அரவிந்த் சுவாமி. இந்தப் பாகத்தில் முஃபாசாவிற்கு அர்ஜுன் தாஸும், டாக்காவுக்கு அசோக் செல்வனும் குரலுதவி செய்திருக்கிறார்கள். ரோபோ ஷங்கர், சிங்கம்புலி, விடிவி கணேஷ் என நிறைய பழகிய குரல்கள்.
வழக்கமாக தமிழ் டப்பிங்கில் கதையைவிட காமெடிக்கே முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள். ஆனால், முஃபாசாவில் தமிழ் டப்பிங் மிகச்சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. ஆங்கில மூலத்துக்கு முடிந்தவரை நியாயம் சேர்த்திருக்கிறார்கள். ரோபோ ஷங்கரும், சிங்கம்புலியும் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்கள். அர்ஜுன் தாஸிற்கு இயல்பாகவே கர்ஜிக்கும் குரல்தான் இருப்பதால், அவருக்கு அது சுலபமாக பொருந்திப்போகிறது. தமிழ் டப்பிங்கின் பெரும்பலம் அசோக் செல்வனின் குரல். காதலை வெளிப்படுத்தும் போது குரலில் ஒரு அசட்டுத்தன்மையை கொண்டு வந்திருக்கிறார். பல இடங்களில் அசோக் செல்வனின் குரல் நம்மை டாக்காவின் கதாபாத்திரத்துடன் ஒன்றிணைய வைக்கிறது.
நல்லதொரு படைப்பு
photorealistic Animation என்பதால் நாம் அனிமல் பிளேனட்டில்தான் இந்தக் கதையைப் பார்க்கிறோம் என்கிற உணர்வைக் கொடுத்துவிடுகிறார்கள். AIயின் அசுர வளர்ச்சியில் வரும் ஆண்டுகளில் டப்பிங்கிற்கு ஏற்ப அனிமேசன் கதாபாத்திரங்களின் வாயசைவும் வந்துவிடும் என்றே நம்பலாம்.
முதல் பாகத்தின் கதாபாத்திரங்களின் தொடர்ச்சிதான் என்பதால், இடைவேளைக்குப் பிறகு படம் முழுக்க முழுக்க டெம்ப்ளேட்டுக்குள் சிக்கிவிடுகிறது. எப்படியும் கதையில் வரும் கதாபாத்திரங்களின் முடிவு எப்படி இருக்கும் என்பதை நம்மால் எளிதாக யூகிக்க முடியும் என்பதால் சுவாரஸ்யம் கொஞ்சம் மிஸ்ஸிங். முதல் பாகம் பார்க்காவிட்டாலும் யாதொரு குறையுமில்லை. மியூசிக்கல் படம் என்பதால் ஆங்காங்கே வரும் பாடல்கள் ஆங்கிலத்தில் சிறப்பாக இருக்கும். தமிழில் அது அவ்வளவு சிறப்பாக கைக்கூடவில்லை. பாடல் வரிகளில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.