Diesel | மக்கள் போராட்டம், ஈழப் பிரச்னை, துப்பாக்கிச்சூடு ரெபரென்ஸுகள்.. பிக்கப் ஆனதா டீசல்?
Diesel(2 / 5)
சென்னையில் இருக்கும் பெட்ரோல் பங்குகளில் கடத்தல் ஆயில் தொழில் செய்பவர் 'டீசல்'. டீசலின் ‘ அப்பா’ போட்ட ரோட்டில் தான் டீசல் இதுவரை கோடு போட்டு வருகிறார். மக்களுக்கான பிரச்னைகளுக்கு உதவி செய்யும் குழுவாக இவர்கள் சுற்றினாலும், இவர்கள் யார் என்பதை அறியாத மக்கள் இவர்களை வெறுக்கிறார்கள். இதற்கிடையே கடத்தலில் போட்டி வருகிறது; காவல்துறை பிரச்னையும் இணைந்துகொள்கிறது; காதலும் வருகிறது; கார்ப்பரேட்டும் வருகிறது; கடல் கன்னியும் வருகிறார்; தண்ணீர் பிரச்னையும் வருகிறது; ஈகோவும் வருகிறது; தலைமறைவு வாழ்க்கையும் வருகிறது; அநியாயமாக சிலர் கொல்லப்படுகிறார்கள்; மீடியா, சோஷியல் மீடியா பிரச்னையை கையில் எடுக்கிறது; மக்கள் போராட்டம் வருகிறது; ஈழப் பிரச்னை வருகிறது; துப்பாக்கிச்சூடு ரெபரென்ஸுகள் வருகிறது; வெற்றிமாறன் வாய்ஸ் ஓவரும் வருகிறது; உலகமே திரும்பிப் பார்க்கும் சம்பவங்கள் எட்டிப்பார்க்கின்றன. இப்படி பல்வேறு கமாக்களை கொண்ட திரைப்படமே இந்த டீசல்.
டீசலாக ஹரிஷ் கல்யாண். பேசி சரி செய்யும் விஷயங்களைக்கூட கோபப்பட்டு வன்முறைக்கு கொண்டு செல்லும் இளைஞராக பக்காவாக பொருந்திப் போகிறார். அவரின் ஈகோதான் கதையின் முக்கிய புள்ளி. அது சரியாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. டீசலின் அப்பாவாக, ஊரைக் காக்கும் கெட்ட தாதாவாக சாய். அவருக்கான கதாபாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார். வில்லனாக வினய். முடிந்தளவு முறைத்திருக்கிறார். இன்னொரு வில்லனாக விவேக் பிரசன்னா. இன்னொரு வில்லனாக சச்சின் கெடக்கர். இதில் கதைக்கு ஓரளவு செட் ஆவது வினய் மட்டும் தான். விவேக் பிரசன்னா வெர்சஸ் வினய் FACE OFF காட்சி மிரட்டும் தொனியில் இருக்கும் என எதிர்பார்த்தால் சிரிப்புக் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
படத்தில் வரும் எல்லோரும் விக் மாட்டிக்கொண்டு வருகிறார்கள். எதற்கு என்றுதான் தெரியவில்லை. காளி வெங்கட், ரமேஷ் திலக், விவேக் பிரசன்னா எல்லோருக்கும் பொருந்தாத வகையில் விக்கை மாட்டி வலம் வர வைத்திருக்கிறார்கள். இதுபோதாதென பிளாஷ்பேக்கில் எல்லோருக்கும் விக். பேன்டஸி கலந்த கடல்கன்னி காதலில் விழுந்து ஹரிஷ் கல்யாணை பின் தொடர்கிறார் அதுல்யா ரவி. ஏனோதானோ அவர் நடித்திருப்பது, அந்தக் காட்சிகளை மேலும் செயற்கையாக்குகிறது. கார்ப்பரேட் வில்லனான சச்சின் கடெக்கர் தன் 15 ஆண்டுகால திட்டத்தை ஸ்லோ மோடில் சொல்லும் போது, 'என்ன சார் வட சென்னை சந்திராவ விட ரொம்ப வருசமா பிளான் பண்றீங்க' என சொல்லத் தோன்றுகிறது.
படத்தின் பாடல்கள் ஏற்கெனவே இணையத்தில் ஹிட். திபு இசையில் தில்லுபரு ஆஜாவும், பீர் சாங்கும் தாளம் போட வைக்கின்றன . படத்தின் ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் ரொம்பவே சுமார்.
சமூகப் பிரச்னையை பிரதானமாக வைத்து, அதற்குள் கேங்ஸ்டர் மோதல், காதல் போன்றவற்றை கலந்து கமர்ஷியல் சினிமா கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் ஷண்முகம் முத்துசாமி . ஆனால், எல்லாமே அதீதமாக சென்றுவிட்டது. அதிலும் முதல் பாதியில் நிறைய இடங்களில் வரும் வாய்ஸ் ஓவரைக் குறைத்திருக்கலாம். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை நினைவுபடுத்தும் விதமாக வரும் க்ளைமேக்ஸ் காட்சி உண்மையில் எமோசனலாக வந்திருக்க வேண்டியது. ஆனால், அதற்கு முன்பு நீண்டுகொண்டே சென்ற காட்சிகளால், அது மற்றுமொரு சம்பிரதாய காட்சியாக மாறிவிட்டது.
டீசல் என்பதற்காக பிக்கப் மெதுவாக இருக்கலாம். பிக்கப்பவே இல்லாமல் இருந்தால் எப்படி.