Dulquer Salmaan, Samuthirakani, Bhagyashri Borse, Rana Daggubati
Dulquer Salmaan, Samuthirakani, Bhagyashri Borse, Rana DaggubatiKaantha

இயக்குநருக்கும் ஹீரோவுக்குமான மோதல்... சுவாரஸ்யமாக இருக்கிறதா `காந்தா'? | Kaantha Review

சினிமா பின்னணியில் இரு கலைஞர்களுக்கு இடையேயான மோதலை மையமாக வைத்து கதை சொன்ன விதத்திலேயே நிமிர்ந்து அமர வைக்கிறார் அறிமுக இயக்குநர் செல்வமணி செல்வராஜ்.
Published on
இயக்குநருக்கும் ஹீரோவுக்குமான மோதல்... சுவாரஸ்யமாக இருக்கிறதா `காந்தா'?(2.5 / 5)

ஒரு இயக்குநருக்கும் - நடிகருக்குமான ஈகோ மோதலே `காந்தா'

1950 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநர் அய்யா என்ற ஏ பி கோதண்டராமன் (சமுத்திரக்கனி). அய்யாவின் பரிந்துரையின் பேரில் மார்டன் ஸ்டுடியோசில் அவர் இயக்கிய படத்தில் நடிகனாக அறிமுகமானவர் டி கே மகாதேவன் (துல்கர் சல்மான்). ஒருகட்டத்தில் மகாதேவனின் சினிமா வளர்ச்சி மிகப்பெரியதாக ஆகிறது. அவரை ஒரு சூப்பர்ஸ்டாராக மக்கள் கொண்டாடுகின்றனர். அந்த சமயத்தில், `சாந்தா' என்ற தன் கடைசி படத்தை மகாதேவனின் நடிப்பில் துவங்குகிறார் அய்யா. ஒரு பக்கம் நட்சத்திரமாக மாறிவிட்ட மகாதேவன், படத்தில் பல மாற்றங்கள் சொல்கிறார். ஆனால் துளி மாற்றத்திற்கு கூட சம்மதிக்க மறுக்கிறார் அய்யா. மோதல் ஒருகட்டத்தில் முற்ற, படம் பாதியில் நிறுத்தப்படுகிறது. மீண்டும் இப்படத்தை எடுத்து தர சொல்லி தயாரிப்பாளரின் மகன் மார்ட்டின் (ரவீந்திர விஜய்) வேண்டுகோள் வைக்க, குமாரி (பாக்யஸ்ரீ) என்ற புது முக நடிகையை ஹீரோயினாக வைத்து துவங்கப்படுகிறது. ஆனால் இம்முறை சாந்தாவாக அல்ல, ஹீரோ சொன்ன மாற்றங்களுடன் `காந்தா'வாக. இதன் பின் அய்யா - மகாதேவன் மோதல் என்னாகிறது? நினைத்தபடி படம் எடுக்க முடிந்ததா? மோதலில் ஜெயித்தது யார்? அப்படி அய்யாவுக்கு மகாதேவனுக்குமான சண்டை என்ன? இதற்கிடையில் ஒரு கொலை கேஸ் ஒன்றும் விசாரிக்கப்படுகிறது, அதன் பின்னணி என்ன? இவற்றை எல்லாம் சொல்லும் படமே `காந்தா'

Kaantha
Kaantha
Dulquer Salmaan, Samuthirakani, Bhagyashri Borse, Rana Daggubati
"அவர் நிறைய கேலிக்கு ஆளாகி இருக்கிறார்" - விஜய் தேவரகொண்டா பேச பேச எமோஷனல் ஆன ராஷ்மிகா!

சினிமா பின்னணியில் இரு கலைஞர்களுக்கு இடையேயான மோதலை மையமாக வைத்து கதை சொன்ன விதத்திலேயே நிமிர்ந்து அமர வைக்கிறார் அறிமுக இயக்குநர் செல்வமணி செல்வராஜ். கதையால் வாழ்க்கையை சொல்ல நினைக்கும் இரு கலைஞர்களின் வாழ்க்கை, ஒரு கதையால் எப்படி எல்லாம் மாறுகிறது என்ற அந்த விஷயத்தை பேசிய விதமும் வெகு சிறப்பு.

இப்படத்தின் மிகப்பெரிய பலம் அட்டகாசமான நடிப்பு மற்றும் பிரமாதமான தொழில்நுட்ப பங்களிப்பு. டி கே மகாதேவனாக துல்கர் சல்மான் ஒவ்வொரு காட்சியிலும் ஆச்சர்யம் செய்கிறார். பணிவாக நடிக்க துவங்குவது, மெல்ல மெல்ல புகழ் போதையில் மிதப்பது, தன் குருவையே அவமதிப்பது என ஒவ்வொரு உணர்வுகளையும் பிரதிபலிக்கும் விதம் நிறைவு. அய்யா பாத்திரத்தில் சமுத்திரக்கனி ஒரு நேர்த்தியான நடிப்பை வழங்கி இருக்கிறார். குறிப்பாக விரக்தியாக எதுவும் செய்ய முடியாத கையறுநிலையில் இருப்பது, தான் நினைத்ததை முடிப்பேன் என சவால் விடுவது, தன் மாணவனிடம் தோற்பதை தாளாமல் தவிப்பது என ஒவ்வொரு காட்சியும் அழகாக நடித்திருக்கிறார். பாக்யஸ்ரீ சினிமா சார்ந்த காட்சிகளில் அந்த காலகட்ட நடிகைகளின் நடிப்பை பிரபலிக்கிறார். இயல்பான காட்சிகளில் மிக வெள்ளந்தியான பெண்ணாக கவர்கிறார். ராணா ஒரு துறுதுறு போலீஸ் ரோலில் வந்து படத்திற்கு சற்று தெம்பூட்டுகிறார். இவர்கள் இல்லாமல், ரவீந்திர விஜய், பிஜேஷ் நாகேஷ், வையாபுரி, பகவதி பெருமாள், காயத்ரி, நிழல்கள் ரவி என ஒவ்வொருவரும் மிக சிறப்பாக தங்கள் பாத்திரங்களை புரிந்து நடித்திருக்கிறார்கள்.

Kaantha
Kaantha

"கேமராவ ஆப் பண்ணதுக்கு அப்பறம் நடிக்காத டா", "டேய் உன்கிட்ட சாவி தான் இருக்கு, ஆனா எனக்குதான் இந்த கேஸோட பூட்டு எங்கன்னு தெரியும்" என பல இடங்களில் செல்வமணி செல்வராஜ் - தமிழ்பிரபா கூட்டணியில் உருவான வசனங்கள் கவனிக்க வைக்கிறது. திரைக்கதையாகவும் அய்யா பாத்திரம் செய்யும் ஒரு விஷயத்தை, இரண்டாம் பாதியில் மகாதேவன் செய்யும் இடம் போன்ற பல Pay off ரசிக்க வைத்தது. துப்பாக்கி சூடு, நடிகர் நடிகை இடையே மலரும் காதல் என  கடந்த காலகட்டங்களில் சினிமாவில் நடந்த பல நிஜ சம்பவங்களை, இக்கதைக்கு ஏற்ற விதத்தில் மாற்றி பதிவு செய்திருக்கிறார்கள். நிஜத்துக்கு அருகே சென்று புனைவை நிற்க வைத்து கதையை நகர்த்திய விதம் சுவாரஸ்யமாக இருக்கிறது.


முன்பு சொன்னது போல இப்படத்தின் தொழில்நுட்ப பங்களிப்பு அளப்பரியது. டேனியின் ஒளிப்பதிவு, ஒவ்வொரு காட்சிகளையும் ரசித்துப் பார்க்கும் படி அமைந்திருக்கிறது. குறிப்பாக அந்த காலகட்டத்தை நம்மை உணர வைப்பதில் பெரும் பங்கு கலை இயக்குநர் தா ராமலிங்கம் சின்ன குறை கூட இல்லாமல் செய்திருக்கிறார். சில கிராபிக்ஸ் காட்சிகள் சற்றே துருத்துகிறது. ஆனாலும் அவை பெரிய குறையாக இல்லை. ஜானு சந்தரின் பாடல்கள் மற்றும் ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை மிக கச்சிதமாக இருந்தது. படத்தில் டென்சன் அதிகரிக்கும் காட்சிகள் அனைத்தையும் பின்னணி இசை கூடுதலாக உயர்த்துகிறது.

Dulquer Salmaan, Samuthirakani, Bhagyashri Borse, Rana Daggubati
க்யூட்டான காதல் கதையாக ஈர்க்கிறதா `ஆரோமலே'? | Aaromaley | Kishen Das | Harshath Khan | Shivathmika
Kaantha
Kaantha

இப்படத்தின் குறைகள் கண்டிப்பாக இரண்டம் பாதி இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்பதுதான். முதல் பாதி ஈகோ மோதல் என்றால், இரண்டாம் பாதி அப்படியே டிராக் மாறி வேறு Genreல் இன்வஸ்டிகேஷன் த்ரில்லராக செல்கிறது. அதனாலேயே முதல் பாதியில் இருந்த டிராமா மொத்தமும் வடிந்து படத்தின் பிற்பகுதி மிக பலவீனமாக மாறுகிறது. அய்யா - மகாதேவன் மோதல் தான் படத்தின் மையம் என்றால், அது எப்படி நடந்தது என்பதில் இன்னும் அழுத்தம் சேர்த்திருக்கலாம், அதை நோக்கியே கதையை நகர்த்தி இருக்கலாம். அதிலிருந்து விலகி காதல் காட்சிகள் வந்ததே சின்ன சறுக்கல் போல் தோன்றிய நிலையில், இரண்டாம் பாதி அதை மேலும் கீழ் இறக்கி அந்நியப்படுத்துகிறது. மேலும் படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஒன்று எடுக்கும் அதிர்ச்சியான முடிவும் அத்தனை இயல்பாக இல்லை. இவற்றை இன்னும் மெருகேற்றி இருந்தால் இப்படம் தவிர்க்கவே முடியாத ஒரு சினிமாவாக மாறி இருக்கும். ஆனாலும் ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும் சினிமா என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நிச்சயம் பார்த்து ரசிக்கலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com