க்யூட்டான காதல் கதையாக ஈர்க்கிறதா `ஆரோமலே'? | Aaromaley | Kishen Das | Harshath Khan | Shivathmika
க்யூட்டான காதல் கதையாக ஈர்க்கிறதா `ஆரோமலே'?(2 / 5)
ஆரோமலே திரைப்படம் காதலை வெறுக்கும் ஹீரோயின் மற்றும் காதலை தேடும் ஹீரோ இடையே நடக்கும் கதை. கிஷன் தாஸ் மற்றும் ஷிவாத்மிகா ராஜசேகர் நடிப்பில், காதல் மற்றும் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகிறது. படத்தின் காமெடி மற்றும் காதல் காட்சிகள் பார்வையாளர்களை ஈர்க்கின்றன, ஆனால் கதை மையம் தெளிவாக இல்லாததால் சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்துகிறது.
காதலை வெறுக்கும் ஹீரோயின் - காதலை தேடும் ஹீரோ இணைந்தார்களா? என்பதே ஆரோமலே
அஜித் (கிஷன் தாஸ்) பள்ளியில் இருந்து கல்லூரி வரை காதலில் சொதப்பி தடுமாறும் இளைஞன். பெற்றோரின் வற்புறுத்தலால், மேட்ரிமோனியால் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்கிறார். அங்கு அவருடைய டீம் லீட் அஞ்சலி (ஷிவாத்மிகா ராஜசேகர்). அஞ்சலியை பார்த்ததும் அஜித்துக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டாலும், இந்த கடலமுத்து ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு என ஒவ்வொரு முறையும் அஜித்தை வெளுத்து வாங்குகிறார் அஞ்சலி. ஒரு கட்டத்தில் நடுவர் அவர்களே வாழ்க்கைக்கு தேவை காதலே என அஜித்தும், வசதியான பின்னணி உள்ள குடும்பமே என அஞ்சலியும் பட்டிமன்றம் இல்லாமலே வாதாட, அதை ப்ராக்டிகலாக செய்து பார்க்க வசமாக சிக்குகிறார் சீனியர் கேண்டிடேட் நரசிம்மன் (விடிவி கணேஷ்). அவரை காதலிக்கும் ஒரு பெண்ணை அஜித்தும், அரேன்ஜ் மேரேஜ் செய்ய ஒரு பெண்ணை அஞ்சலியும் தேடுகிறார்கள். இந்த போட்டியில் தோற்பவர் அலுவலகத்தை விட்டு வெளியேறுவதாக சவால் விடுகிறார்கள். ஜெயிப்பது யார்? அஞ்சலி மீதான அஜித்தின் காதல் என்ன ஆகிறது? என்பதெல்லாம்தான் மீதிக் கதை.
ஜாலியான படத்திற்குள் ஒரு மென்மையான காதலை சேர்த்து சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் சாரங் தியாகு.
நடிகர்களின் நடிப்பைப் பொறுத்தவரையில் லீட் ரோலில் நடித்துள்ள கிஷன் தாஸ் முடிந்த வரை சிறப்பான நடிப்பை வழங்க முயற்சிக்கிறார். ஜாலியான காட்சிகள், எமோஷனலான காட்சிகள் போன்றவற்றில் கவனிக்க வைக்கிறார். படத்தில் அதிகம் கவர்வது அஞ்சலியாக வரும் ஷிவாத்மிகா தான். இறுக்கமான முகத்துடன் அஜித்தை டீல் செய்வது, கடந்த காலத்தை நினைத்து தடுமாறுவது, அஜித்தின் நட்பினால் மெல்ல மெல்ல இயல்பாவது என அவரது கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
துளசிக்கு வழக்கமான அம்மா வேடம் என்றாலும், தன் நடிப்பால் தனித்துவத்தை காட்டுகிறார். ஹர்ஷத் கானின் கேக் காமெடி உட்பட சில கவுண்டர்கள் சிரிக்க வைக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த படத்தின் ஹூமரையும் ஒற்றை ஆளாக சுமக்க முடியாமல் திணறுகிறார். ராஜா ராணி பாண்டியன், சந்தான பாரதி ஆகியோர் வந்து போகிறார்கள்.
சினிமாவை பார்த்துவிட்டு காதல் என்றால் இப்படி இருக்க வேண்டும் என நினைக்கும் ஹீரோ, தன் கடந்த கால காதலால், இனிமேல் தன் வாழ்வில் காதலே வேண்டாம் என நினைக்கும் ஹீரோயின் இருவர் இடையே நடக்கும் கதை என சுவாரஸ்யமான ஒன்லைன் பிடித்திருக்கிறார் சாரங் தியாகு. பொருத்தம், வசதி எல்லாவற்றையும் தாண்டி, அன்புதான் பிரதானம் என்ற கருத்தை க்யூட்டாக முன்வைக்கிறது படம்.
கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு படத்திற்கு தேவையான விதத்தில் செம கலர்ஃபுல் உணர்வை கொடுக்கிறது. சித்துகுமார் இசையில் பின்னணி இசை சிறப்பு, ஆனால் பாடல்கள் எதுவும் பெரிதாக மனதில் நிற்கவில்லை.
இப்படத்தின் குறைகள் எனப் பார்த்தால், புதிதாக எதுவும் இல்லை என்பதை தாண்டி, இருப்பது இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கலாம் என்பதே. அஜித் என்ற பாத்திரத்தின் கதையாக துவங்கி, அஜித் அஞ்சலி காதலாக நகர்ந்து, அதன் பின் எங்கெங்கோ அலைபாய்கிறது படம். சொல்ல வந்த கதையை இன்னும் கோர்வையாக சொல்லி இருக்கலாம். திடீரென ஒரு இளம் காதல் ஜோடி கதை, வயதான ஒருவரின் திருமணம், அம்மாவின் காதல் கதை, அப்பா செண்டிமெண்ட் என எங்கெங்கோ கதை நகர்வது அவ்வளவு ஏற்புடையதாக இல்லை. அஜித் பாத்திரத்திற்கு அஞ்சலி மேல் ஏற்படும் காதல் பற்றியும், அஞ்சலி பாத்திரம் காதல் வேண்டாம் என நினைப்பது பற்றியும் படத்தில் இன்னும் தெளிவும் இருந்திருக்கலாம். படம் துவங்கி மையக்கதைக்கு வர எடுத்துக் கொள்ளும் 30 நிமிடங்கள், மையக்கதையில் இருந்து விலகி ஓடும் இறுதி 30 நிமிடங்கள் கண்டிப்பாக பொறுமையை சோதிக்கவே செய்கிறது. இவற்றை இன்னும் சிறப்பாக கவனித்திருந்தால் படம் ஒரு ஜாலியான ரொமான்டிக் ரெய்டாக அமைந்திருக்கும்.
மொத்தத்தில் புதிதாக எதுவும் இல்லாத, அதே சமயம் பெரியதாக போர் அடிக்காத படமாக வந்திருக்கிறது இந்த `ஆரோமலே'.

