"அவர் நிறைய கேலிக்கு ஆளாகி இருக்கிறார்" - விஜய் தேவரகொண்டா பேச பேச எமோஷனல் ஆன ராஷ்மிகா!
ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ராகுல் ரவீந்திரா இயக்கிய படம் `தி கேர்ள்ஃபிரெண்ட்'. நவம்பர் 7ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு பெண் டாக்சிக் உறவில் இருப்பது பற்றியும், அவளது உலகம் பற்றியும் பேசியுள்ள படமாக பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் வெற்றி விழா நேற்று மாலை ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டார்.
இதில் பேசிய விஜய் தேவரகொண்டா "இப்போதுதான் படம் பார்த்தேன், பல இடங்களில் கண்ணீரை கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. மனம் பாரமாக இருப்பதை போன்ற உணர்வு ஏற்பட்டது. இறுதியில் நம்பிக்கையையும் கொண்டாட்ட உணர்வையும் கொடுத்தது. இந்தப் படம் வெளியானது முதல் அதற்கு கிடைக்கும் வரவேற்புகளை பார்த்து வருகிறேன். பார்வையாளர்கள் பகிரும் கதைகளை பார்க்கிறேன். படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது இப்படியான உறவில் இருக்கும் ஒவ்வொருவருக்காகவும் நான் வருத்தப்பட்டேன். அது திருமணமோ, காதலோ, அலுவலக உறவோ இப்படியான விஷயத்தை நீங்கள் அனுபவித்தால் அதற்கு வருந்துகிறேன். இது வழக்கமான விஷயம் கிடையாது என்பதை நீங்கள் உணர வேண்டும்.
இப்படித்தான் இருக்கும் என சகித்துக் கொள்ள தேவை இல்லை. அதே சமயம் அதிலிருந்து வெளியேற வேண்டும் எனவும் நான் கூறவில்லை. உறவுகள் நம்மை வளர்த்தெடுக்க வேண்டும். வாழ்க்கை முழுக்க உங்கள் உயர்வு, தாழ்வுகளில் நண்பர் போல் உடன் வரும் ஒரு நபராக இருக்க வேண்டும். அதை நீங்கள் உணரவில்லை என்றால், உங்கள் துணையோடு நீங்கள் உரையாட வேண்டும், தெளிவைப் பெற வேண்டும்.
அப்படி பேசிய பின்னும் கூட உங்கள் துணை, புரிந்து கொள்ளவில்லை என்றால், அவர் உங்களை மதிக்கவில்லை என அர்த்தம். அவருக்கு உங்கள் உணர்வுகளின் மீது அக்கறை இல்லை என அர்த்தம். அதன் பின் உங்களுடைய தேர்வை நீங்கள் முடிவு செய்வதே சிறந்தது. இந்தப் படத்தின் வெற்றி பெரியது. இப்படத்தின் மூலம் கிடைக்கும் வசூலை விட, இப்படத்தின் மூலம் துவங்கும் உரையாடல்கள் முக்கியம் என நினைக்கிறேன்.
இப்படியான விஷயங்களை பெண்கள் வெளியே சொல்வதில்லை. ஆனால் அவர்கள் இவற்றை பகிரும் வெளியை இப்படம் திறந்திருக்கிறது. இப்படத்தை எடுத்ததன் மூலம் வாழ்க்கையில் ஒரு முக்கியமான விஷயத்தை செய்துள்ளது இப்படக்குழு. நான் இப்படியான சில சூழல்களை கேட்டிருப்பேன், அதை முக்கியமாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டேன். ஆனால் அதனை அனுபவித்தது இல்லை. ஆனால் எனக்கே இவ்வளவு உணர்வுபூர்வமாகவும் தொந்தரவாகவும் இருக்கிறது என்றால், இப்படியானவற்றை கடந்தவர்களுக்கு எவ்வளவு உணர்வுப்பூர்வமாக இருக்குமோ?
ராஷ்மிகாவை அவருடன் நான் கீதா கோவிந்தம் நடித்த போதிருந்து பார்த்து வருகிறேன். அப்போது ஒரு வெகுளித்தனம் நிறைந்த பெண்ணாக பார்த்தேன். தன்னைப் பற்றி கவலைப்படாமல், தன்னை சுற்றி உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நினைப்பவர். வேலையாக இருந்தாலும் சரி, வேலைக்கு அப்பாற்பட்டும் சரி ஒரே மாதிரி இருப்பார். அப்படி இருந்த ஒரு பெண் இன்று தன் காரியரின் உச்சத்தில் இருக்கும் போது, இப்படியான ஒரு கதையை தேர்வு செய்து நடித்துள்ளார். இதை பார்க்க யார் வருவார்கள் என எனக்கு தெரியாது. ஆனால் இதை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் முக்கியமான படமாக மாறும் என நினைத்தார்.
ராஷ்மிகா நடித்துள்ள பூமா பாத்திரம் போல, அவரும் நிறைய கேலிக்கு ஆளாகி இருக்கிறார். என்னை யாராவது ஏதாவது சொன்னால் நான் பின் தங்கிவிடுவேன். ஆனால் ராஷ்மிகா, யார் என்ன சொன்னாலும், ஒரு அடி முன்னோக்கித்தான் கால் வைப்பார். எல்லா நாளும் மிகக் கருணையானவராகவே இருப்பார். இந்த உலகம் அவரை மாற்றிவிட அனுமதித்ததே இல்லை. நான் அவருக்கு அடிக்கடி `நீ எங்கும் செல்லப்போவதில்லை, இங்கு நீண்டகாலம் இருப்பாய். ஒரு நாள் இந்த உலகம் உன்னை யார் எனப் பார்க்கும். உன் வேலைகளை செய்து கொண்டே இரு' என சொல்வேன். ரஷி... அது இன்று நடக்கலாம், நாளை நடக்கலாம் ஆனால் நாங்கள் உன்னை பாதுகாத்துக் கொண்டே இருப்போம்" எனக் கூறினார்.

