ரெண்டே குழுவுக்கு தான் போட்டியே... சாம்பல் மனிதர்கள் vs ராணுவ வீரர்கள் | Avatar Fire and Ash Review
ரெண்டே குழுவுக்கு தான் போட்டியே... சாம்பல் மனிதர்கள் vs ராணுவ வீரர்கள்(3 / 5)
சாம்பல் மனிதர்கள் - ராணுவ குழு... எதிர்த்து போராடும் நவி, இதுவே Avatar: Fire and Ash பட ஒன்லைன் கதை.
பண்டோராவில் இருக்கும் தனிமத்தை எடுக்க அங்கு வசிக்கும் மக்களை அப்புறப்படுத்த வேண்டும். அதற்காக ராணுவத்தால் ஜேக் பண்டோரா அனுப்பப்பட்டது, பின்பு தன் மக்களை எதிர்த்து, ஜேக் நவி இனத்தில் ஒருவனாக ஆனது வரை அவதார் முதல் பாகம். பிள்ளை குட்டி என வாழ்க்கை துவங்கி அவர்களின் பாதுகாப்பு காரணமாக அமைதியாய் வாழ்வதும், பின்பு வரும் ஒரு போராட்டத்தில் தன் மூத்த மகனை ஜேக் குடும்பத்தார் இழப்பது வரை இரண்டாம் பாகம். இந்த மூன்றாம் பாகத்திலும் அதே மோதல் தொடர்கிறது. ஒரு பக்கம் நவி மக்களை எப்படி அழிப்பது என இராணுவம் திட்டம் தீட்டுகிறது. அதன் ஒரு பாகமாக மைல்ஸ் தன் வேலைகளை செய்கிறார். இன்னொரு பக்கம் நவி இனத்தை சேர்ந்த சாம்பல் மனிதர்கள், ஜேக் குடும்பம் மீது தாக்குதல் நடத்துகிறது. தன் மக்களே ஜேக்கிற்காக தன் குழுவை எதிர்க்கிறார்கள் என சாம்பல் குழுவின் தலைவி வராங், ஜேக்கை கொலை செய்ய நினைக்கிறாள். இதோடு ராணுவ வீரர் மைல்ஸ் மகன் ஸ்பைடர் உடலில் ஏற்படும் மாற்றங்ககளை ஆராய்ச்சி செய்கிறது ராணுவ குழு. மேலும் தனிமைங்களை வேட்டையாட ஒரு திட்டமும் போடுகிறது. இதனால் என்ன ஆகிறது? ராணுவத்தை எதிர்த்து ஜேக் குழு ஜெயித்ததா? இதற்கிடையே வரும் மனத்தடைகள் என்ன? இதெல்லாம் தான் Avatar: Fire and Ash
அவதார் படங்களின் முதல் பலமே ஜேம்ஸ் கேமரூனின் அபாரமான கற்பனைகளும், சாத்தியத்திற்கு அப்பாற்பட்ட விஷுவல்ஸும் தான். அது இந்த பாகத்திலும் மிக பிரம்மாண்டமாக ஒளிர்கிறது. எந்த ஒரு காட்சியிலும் சாதாரண ஒன்றை வைக்க முடியாத களம் அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு சாதித்திருக்கிறார் கேமரூன்.
அவதார் முதல் பாகம் வந்த போது அதை பற்றி நமக்கு எந்த அறிமுகமும் கிடையாது. எனவே அதில் குண்டூசியை காட்டினால் கூட ஆச்சர்யம் ஏற்படும்தான். ஆனால் அதனை அடுத்த பாகங்களில் கேமரூன் எப்படி தக்க வைப்பார் என கேள்விகள் இருந்தன. அதனை கடந்த பாகத்தில் தவறவிட்டிருந்தாலும், இந்த பாகத்தில் கைக்கொண்டு இருக்கிறார் கேமரூன். உண்மையில் புதிய விஷயம் என்பது பிரம்மாண்டம் அல்ல, உணர்ச்சிப்பூர்வமாக பார்வையாளர்களுடன் இணைவது என்பதை அவர் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார். சைன்ஸ் ஃபிக்ஷன் என்பது சிக்கலான விஷயங்களை விளக்குவது என்பதாக அல்லாமல், எளிமையான ஒரு கதையை சுவாரஸ்யப்படுத்த உதவும் கருவியாக பயன்படுத்தி மீண்டும் ஆச்சர்யப்படுத்துகிறார்.
முன்பு சொன்னது போல இந்த பாகத்தில் நவி இனத்துக்கு உள்ளேயே ஒரு மோதல், பிறகு நவி இனத்துக்கும் மனித இனத்துக்குமான மோதல் ஆகியவை இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் ஜேக் குழுவை யார் முதலில் அழிப்பது என சாம்பல் மனிதர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் நடுவே போட்டியே நடக்கிறது. ஆனால், படம் அந்த மோதல்களை தாண்டி, கதாபாத்திரங்களின் மனங்களில் ஏற்படும் தார்மீகமான தடுமாற்றங்களை மையப்படுத்தி செல்கிறது. படத்தின் முக்கியமான ஒவ்வொரு பாத்திரங்களுக்குள்ளும் அந்த தடுமாற்றங்கள் எழுகின்றன. உதாரணமாக நைட்திரிக்கு ஸ்பைடர் குறித்து வரும் தடுமாற்றம், க்ரிக்கு தான் யார் என்பதில் வரும் தடுமாற்றம், கர்னல் மைல்ஸ் ஒரு தந்தையாக இருப்பதா, ராணுவ வீரனாக நடப்பதா என்பதில் தடுமாற்றம், லோக்கிற்கு தன்னுடைய அண்ணனின் இறப்புக்கு தானே காரணமா என்ற தடுமாற்றம், இறுதியாக ஹீரோ ஜேக் சல்லி கூட முக்கியமான விஷயத்தில் தடுமாறுவது என பல வித தடுமாற்றங்களின் உணர்ச்சிக் குவியலாக இருக்கிறது படம்.
அவதாரின் அடிநாதமே ஒற்றுமையை போதிப்பதுதான். இந்த பாகத்திலும் அது தொடர்கிறது. இனம் என்ற பெயரில் பிரிந்து பிரிந்து நின்றால் பேராசை பிடித்தவர்களால் அழிவது நிச்சயம். எனவே ஒன்றிணைந்து போராடுவது ஒன்றே வழி என்பதையும் , சக உயிரை தன் குடும்பமாக நினைக்க வேண்டும் என்பதையும் அழகாக சொல்கிறது படம்.
Sam (சாம்), Zoe (ஸோயி), Sigourney (சிகோர்னே), Stephen Lang (ஸ்டீஃபன் லேங்), Oona Chaplin (ஓனா சாப்ளின்), Kate Winslet (கேத் வின்ஸ்லெட்), Jack Champion (ஜேக் சாம்பியன்) என முதன்மை நடிகர்கள் அத்தனை பேரின் நடிப்பும் சிறப்பு. படத்தின் VFX உலகத்தரம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. க்ளைமாக்சில் வரும் போர் காட்சியை வடிவமைத்திருந்த விதமும் அட்டகாசம். உறுதியாக ஒரு ஐமாக்ஸ் திரையில் பார்த்து ரசிக்க அத்தனை விஷயங்களும் படத்தில் உண்டு. சைமனின் பின்னணி இசை படத்தின் எமோஷனலான காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. ஒரு சண்டைக்கு தயாராகி கூட்டம் சேரும் போது வரும் இசை காட்சியை மாஸ் ஆக்குகிறது.
இந்தப் படத்தின் குறைகள் என்றால், படத்தின் நீளம் தான். 3 மணிநேரம் 16 நிமிடங்கள் என்ற இந்த நேரம் கூட ஓகே தான். ஆனால் படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் அதன் தேவை முடிந்த பின்னும் நீட்டி முழக்கி சொல்லப்படுவது சோர்வூட்டுகிறது. எல்லா காட்சிகளுக்கும் அதிகப்படியான விவரணைகளை வழங்குவது, இழுத்துக் கொண்டே போவது எல்லாம் நம் பொறுமையை சோதிக்கிறது. முதல் பாதியில் தள்ளாடி தள்ளாடி, இரண்டாம் பாதியில் இருந்து பிக் அப் ஆகும் படம், க்ளைமாக்ஸ் சண்டைகளின் போது மீண்டும் டல்லாக ஆரம்பிக்கிறது.
ஒட்டு மொத்தமாக பார்க்கையில் ஆங்காங்கே கொஞ்சம் போர் அடிப்பதை தாங்கிக் கொண்டால் ஒரு சிறப்பான திரை அனுபவம் உங்களுக்கு தரும் இந்த Avatar: Fire and Ash. அடுத்த பாகத்தில் என்ன வைத்திருக்கிறார் என்பதை பார்க்கும் ஆவல் எழுகிறது என்பதும் உண்மை.

