AI is dangerous but... James Cameron discussion with Rajamouli
SS Rajamouli, James CameronAvatar: Fire & Ash

"AI அபாயகரமானதுதான், ஆனால்..." ஜேம்ஸ் கேமரூன் - ராஜமௌலி முழு உரையாடல் | Avatar: Fire & Ash

நீங்களும் நானும் தியேட்டருக்கு படம் எடுக்கிறோம். ஆனால் அதில் இருந்து வரும் வருமானம் குறைந்துகொண்டே வருகிறது. அதுவும் உலக அளவில். இதற்கான ஆரம்பமாக இருந்தது கோவிட். அது மற்ற தளங்களை நோக்கி மக்களை திசை திருப்பியது.
Published on

ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள `Avatar: Fire & Ash' டிசம்பர் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை புரமோஷன் நிகழ்வாக இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் வீடியோ கால் வாயிலாக இயக்குநர் ராஜமௌலியுடன் ஓர் உரையாடலை நிகழ்த்தி இருக்கிறார். அதில் அவதார், VFX மற்றும் AI போன்ற பல விஷயங்களை பற்றி பேசி இருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன்.

இந்த உரையாடலை துவங்கிய ராஜமௌலி, "146 கோடிக்கும் அதிகமான இந்திய மக்களில் `Avatar: Fire & Ash' படத்தை பார்த்த முதல் நபர் நான்தான், அதற்காக உங்களுக்கு நன்றி. அது என்னை மிக முக்கியமான நபராக உணர வைக்கிறது" எனச் சொல்ல, "உங்களுக்கு நன்றி, இதைச் செய்வதற்காக. இயக்குநர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல், அவர்களின் சிந்தனைகளில் இருக்கும் ஒற்றுமை, பணியாற்றும் முறைகள் பற்றி பேசுவது முக்கியமானது. மேலும் உங்களது படப்பிடிப்பு தளத்திற்கு நான் வர ஆர்வமாக இருக்கிறேன். உங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து நீங்கள் உருவாக்கும் மாயஜாலத்தை பார்க்கலாமா?" என்றார் கேமரூன். அதற்கு பதில் தந்த ராஜமௌலி  "அது என்னுடைய பாக்கியம். நீங்கள் அன்போடு வரவேற்கப்படுவீர்கள். நான் மட்டுமல்ல, படக்குழு மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகும் ஆச்சர்யத்தோடு காத்திருப்போம்"  என்றார்.

Rajamouli
Rajamouli
AI is dangerous but... James Cameron discussion with Rajamouli
ஹைதராபாத் | கூட்டத்தில் சிக்கிய நிதி அகர்வால்.. அத்துமீறிய ரசிகர்கள்..
Q

ராஜமௌலி: `Avatar: Fire & Ash' படம் பார்த்தது அற்புதமான உணர்வாக இருந்தது. கடினமான காட்சிகளை, கதாபாத்திரங்களை வடிவமைத்த உங்களுக்கு என் பாராட்டுகள். ஒரு குழந்தையின் குதூகலத்தோடு நான் படத்தின் பல காட்சிகளை கண்டுகளித்தேன். படம் முடித்து வெளியே வந்தபின்னும் படம் என்னைவிட்டு விலகவில்லை. எது என்னை அதிகம் ஈர்த்தது என்றால், ஜேக்கின் தார்மீக நிலைப்பாட்டில் ஏற்படும் தடுமாற்றம். இது அவதாரத்தின் முதல் பாகத்திலும் அழுத்தமாக இருந்தது. நவி மற்றும் தன் குழுவில் எதை தேர்வு செய்வது என்ற குழப்பம் ஜேக்கின் மனதில் எழும். இதை அவன் அடுத்த பாகங்களில் கடப்பானா என யோசித்தேன். ஆனால் இந்த பாகத்தில் அது இன்னும் அழுத்தமாக இருந்தது. இதில் என்னுடைய கேள்வி என்ன என்றால் அவதார் எண்ணிலடங்கா பல உலகங்களைக் கொண்டது, நிறைய அழுத்தமான பாத்திரங்கள், சிக்கலான பாத்திரங்கள் உள்ளன. இன்னும் சொல்வதென்றால் உங்கள் படத்தில் பார்த்ததைவிட மனதில் இன்னும் நிறைய பாத்திரங்கள் இருக்கலாம். இப்படி நிறைய தரவுகளும், கதைகளும் உங்கள் முன் இருக்கையில் எதற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். உணர்வு ரீதியான சிக்கல்களுக்கா? அல்லது கதாபாத்திரங்களுக்கா? உங்கள் எழுத்து மேசையில் எது உங்களை முன்னோக்கி நகர்த்துகிறது?

James Cameron
James Cameron
A

ஜேம்ஸ் கேமரூன்: என்னைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான பாகம், நடிகர்கள் இந்தப் பாத்திரங்களை எப்படி உள்வாங்குவார்கள் என்பது. நான் இந்தப் படத்துக்காக மற்ற எழுத்தாளர்களுடன் கதையை வடிவமைப்பதற்காக பணியாற்றினேன். ஆனால் அதன்பின் கதையை நானே எழுத ஆரம்பித்தேன். தனித்தனியான பாத்திரங்களை உருவாக்கினேன். சில பாத்திரங்கள் புதிது, சில கடந்த பாகங்களில் இருந்தவை. இதில் பல அழுத்தமான பாத்திரங்கள் உள்ளது. குறிப்பாக பெண் பாத்திரங்கள். போன ஜென்மத்தில் பெண்ணாக பிறந்தேனோ என்னவோ? பெண் பாத்திரங்கள் எழுதும்போது அழுத்தமாக வருகிறது. என் அம்மா ஓர் உறுதியான பெண்ணாக இருந்தது அதற்கு ஒரு காரணம். எனவே எனக்கு எழுத்து என்பது நடிகர்களுக்கு உதவுவதற்கான விஷயமாக பயன்படுகிறது. நீங்கள் ஜேக்கின் தார்மீக தடுமாற்றம் குறித்து கவனித்தது எனக்குப் பிடித்திருக்கிறது. அது எனக்கு மிக கடினமான ஒரு விஷயமாக இருந்தது. அதில் இன்னும்கூட சில தடுமாற்றங்கள் உள்ளன. ஒரு தலைவனாக, ஒரு தந்தையாக என பல கோணங்கள் அவன் தடுமாற்றங்களுக்கு உண்டு. நான் மிகவும் கவனமாக செய்த ஒன்றை நீங்கள் கவனித்ததற்கு நன்றி

Jake Sully
Jake Sully
Q

ராஜமௌலி: Avatar முதல் பாகத்தில் நான் மைல்ஸை வெறுத்தேன். ஆனால் Fire & Ashல் அவரை நான் வெறுக்க நினைக்கிறேன், ஆனால் முடியவில்லை. மேலும் ஜேக் - மைல்ஸ் இடையேயான உரையாடல்களும் பல உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. ஒருவேளை நீங்கள் மைல்ஸ் பாத்திரத்தின்மீது அதிகமாக காதல் கொள்ள ஆரம்பித்துவிட்டீர்களா?

Rajamouli
Rajamouli
A

ஜேம்ஸ் கேமரூன்: நான் எப்போதும் அவரை காதலித்துக் கொண்டேதான் இருந்திருக்கிறேன். முதல் பாகத்தில் அந்த பாத்திரம் மிக எளிமையானது. இரண்டாம் பாகத்தில் சில தடைகளை கொடுத்து, புது பிறப்பு எடுக்க வைத்தேன். ஆனால் இப்போது நான் பழைய நபரா அல்லது எதிரியின் உடலில் நான் இருப்பதால் யார் பக்கம் இருப்பது என தடுமாற்றம். ஆனால் அவன் ஒரு தந்தையாக இருக்கும் பாதையை தேர்வு செய்கிறான். ஸ்பைடர் பாத்திரத்தின் மறைவு, பாதிக்கப்பட்ட தந்தை. ஒரு வகையில் ஸ்பைடர்தான் இக்கதையின் பாத்திரங்கள் அனைத்தையும் ஒரு வலைப்பின்னலுக்குள் கொண்டு வருகிறது. இல்லை என்றால் இரண்டு நபர்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்வது மட்டுமே என்ற சோர்வு தரும் கதையாக இருந்திருக்கும்.

AI is dangerous but... James Cameron discussion with Rajamouli
இது டிஜிட்டல் ஆள்மாறாட்டம்! | AI அத்துமீறலை எச்சரித்த ஸ்ரீலீலா, நிவேதா தாமஸ்
Q

ராஜமௌலி: நாம் படம் முடித்து எடிட் செய்யும்போது, ஆரம்பத்தில் நமக்கு இருந்த யோசனைகளை புது வடிவங்கள் எடுக்க துவங்கும். எனவே, அசல் யோசனையை தொடருவதா, புதிய யோசனையை கையில் எடுப்பதா என குழப்பம் வரும். இதை நீங்கள் எப்படி கையாள்கிறீர்கள்?

Miles Quaritch
Miles Quaritch
A

ஜேம்ஸ் கேமரூன்: இங்குதான் உங்கள் உணர்வுகளுக்கு மத்தியில் ஒரு வடிகட்டியை வைக்க வேண்டும். உங்களுக்குள் இருந்துவரும் யோசனை, உங்களைச் சுற்றி உள்ளவர்களிடமிருந்து வரும் யோசனைகளில் எவை பொருந்துகின்றன என்பதைக் காண வேண்டும். நாம் எதை நோக்கிப் போக நினைக்கிறோமோ, அதை நோக்கி நகர்த்துகிறதா எனப் பார்க்க வேண்டும். அது கண்டிப்பாக ஓர் உள்ளுணர்வுதான்.

Q

ராஜமௌலி: VFX பற்றி வருகையில், இதை உங்களிடம் நான் கேட்க வேண்டும். இதனால் என்னை தவறாக நினைக்க வேண்டாம், அக்கலைஞர்கள் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. ஆனால் VFX க்கு நாம் கொடுக்கும் விலை, வானளவில் செல்கிறது. சில நிறுவனங்கள் இந்தச் செலவுக்கு பயந்து பின்வாங்கிறார்கள். இந்தப் பிரச்சனைக்கு ஏதாவது தீர்வு உண்டா?

VFX
VFX
A

ஜேம்ஸ் கேமரூன்: இதற்கான சந்தையை நாம் முதலில் தேட வேண்டும். நீங்களும் நானும் தியேட்டருக்கு படம் எடுக்கிறோம். ஆனால், அதில் இருந்துவரும் வருமானம் குறைந்துகொண்டே வருகிறது. அதுவும் உலக அளவில். இதற்கான ஆரம்பமாக இருந்தது கோவிட். அது மற்ற தளங்களை நோக்கி மக்களை திசை திருப்பியது. வீட்டிலிருந்தே வசதியாக படங்களைப் பார்க்க மக்களைப் பழக்கப்படுத்தியது. எனவே உலக அளவில் 30 - 35 சதவீத மக்கள் தியேட்டருக்கு வருவதை குறைத்துக் கொண்டனர். அதேநேரம், சினிமாவின் தயாரிப்பு செலவு அதிகரித்துக் கொண்டே சென்றது. குறிப்பாக VFX. நிறைய நிறுவனங்கள் இதனால் வேறு தொழிலை நோக்கிச் சென்றுவிட்டன. எனவே இப்போது சைன்ஸ் ஃபிக்ஷன், ஹிஸ்டரிகல், ஃபேண்டஸி படங்களை எடுப்பதோ, டைட்டானிக் போல ஒரு படத்தை எடுக்க இனி எந்த தயாரிப்பு நிறுவனமும்  சம்மதிக்காது என்பது வருத்தமளிக்கக்கூடிய ஒன்று. எனவே இதற்கான விடைகள் சுலபமானது அல்ல. ஆனால் நாம் தொடர்ந்து போராட வேண்டும். சினிமா அனுபவம் என்பது புனிதமானதாக நான் கருதுகிறேன். ஸ்ட்ரீமிங் தளங்கள் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் திரையரங்க அனுபவம் ஒருநாளும் வீட்டில் கிடைக்காது.

Q

ராஜமௌலி: இதில் நான் பாண்டோரா உடன் உள்ள ஒற்றுமையை கவனிக்கிறேன். எப்படி அங்கு மக்கள் அனைவரும் ஒன்றாக ஒரு விஷயத்தை உணர்வார்களா, அப்படிதான் திரையங்கமும். உங்களுக்கு தெரியுமா, தெரியாதா என தெரியவில்லை. அவதார் முதல் பாகம் என்னுடைய ஊரில்தான் அதிகம் வசூலித்தது. பிரசாத் ஐமேக்ஸில் ஓர் ஆண்டுக்கு மேல் ஓடியது. இப்போது அது ஐமேக்ஸ் இல்லை. இப்போது கேள்விக்கு வருகிறேன். சினிமா அனுபவம் பற்றி பேசினீர்கள். பெரிய படங்கள் பார்வையாளர்களை  தியேட்டருக்கு அழைத்து வருகின்றன. ஆனால் அப்படியான படங்கள் மிகக் குறைவு. எனவே பார்வையாளர்களை திரையரங்கிற்கு தொடர்ச்சியாக அழைத்து வர என்ன வழி என நினைக்கிறீர்கள்?

Theater
Theater
A

ஜேம்ஸ் கேமரூன்: நாம் பிரம்மாண்ட படங்களை மிக கஷ்டப்பட்டுத்தான் எடுக்கிறோம். அதற்கு மேல் செய்ய முடியாது. AI பயன்படுத்தி இளைஞர்கள் இதனைவிட சிறப்பாக செய்ய முடியும்கூட. ஆனால் நீங்கள் தியேட்டர் தவிர எந்த சாதனத்தில் படத்தை பார்த்தாலும் அதில் 2D தான். தியேட்டர் மட்டும்தான் 3D. மேலும் புது தொழிநுட்பங்கள் வருகிறது. ஆனால் அவை சரியாக சென்றுசேர திரையரங்குகள் முன்வர வேண்டும். மேலும் 3Dயில் படம் எடுப்பது பற்றி நீங்களும் நானும் உரையாட வேண்டும். உங்களின் புலி ஸ்லோமோஷனில் வருவதை 3Dயில் பார்க்க விரும்புகிறேன்.

AI is dangerous but... James Cameron discussion with Rajamouli
"அரசன் பத்தி எதுவுமே தெரியாது..." VJS தந்த ஆச்சர்ய பதில் | Arasan | Vetrimaaran
Q

ராஜமௌலி: கடைசியாக ஒன்று கேட்க விரும்புகிறேன். இது என்னைப்போல பலரது மனதிலும் இருக்கும் யோசனைதான். விரைவாகவோ அல்லது மெதுவாகவோ எதிர்காலத்தில் AI நாம் பேப்பரில் எழுதும் விஷயங்களை அப்படியே காட்சிகளாக சில ப்ராம்ப்ட் கொடுப்பதன் மூலமாக உருவாக்கிவிடுமா? அப்படி ஆனால் படைப்பாற்றல் மூலம் இயங்கும் நம் நிலை என்ன?

James Cameron
James Cameron
A

ஜேம்ஸ் கேமரூன்: இதுவரை அவதார் படத்தில் AI பயன்படுத்தியதில்லை. எழுத்து, நடிப்பு, படமாக்குதல், படத்தின் உலகில் அதனைப் பொருத்துவது என இயல்பான நடைமுறைதான். நடிகர்கள் கொண்டு ஒரு புனிதமான தன்மையில் உருவாகும் சினிமாவை, AI நீக்கும் என்றால் அது அபாயகரமானது என நம்புகிறேன். நான் இளம் இயக்குநர்களுக்கு சொல்வதெல்லாம், உங்கள் சிந்தனையை இந்தக் கருவி கொண்டு எளிதில் மற்றும் செலவு குறைவாக அடையலாம் என நினைக்கிறீர்கள். அதை நிறுத்துங்கள், நடிகர்களுடன் பணியாற்றுங்கள். அதை எளிமையாக கடக்க நினைக்கிறார்கள். அப்படியான படங்களைப் பார்க்க ஒருபோதும் நான் விரும்ப மாட்டேன். ஏனென்றால் இதுவரை செய்த விஷயங்களில் இருந்து ஒன்றை எடுத்துத்தான் AI உருவாக்குமே தவிர, இதுவரை செய்யாத ஒன்றை அதனால் செய்ய முடியாது. அவதார் போல ஒன்றை கொடு என்றால் இப்போது AI கொடுக்கும். ஆனால் 2009க்கு முன்பு அதனால் கொடுத்திருக்க முடியாது. மனிதர்கள் போல சிந்தனையோ, கற்பனையோ AIயால் செய்ய முடியாது. அதனால் தனித்தன்மை உள்ள ஒன்றை கொடுக்கவே முடியாது. எனவே அது வரையறைக்குட்பட்டுத்தான் இயங்கும். எனவே உங்களால் மனதில் பார்க்க முடிந்த ஒன்றை, அதனால் உருவாக்க முடியாது. மாறாக, நம் VFX தொழில்நுட்பங்களின் பணிகளை எளிமையாக்க அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். 90 சதவீத VFX செலவு என்பது மனிதர்களின் வேலைகளுக்கு வழங்கப்படுவது. நான் அவற்றை நீக்க வேண்டும் எனச் சொல்லவில்லை. மாறாக, இந்த தொழில்நுட்பம் கொண்டு பணி நேரத்தைக் குறைக்க முடியும். கற்பனையான உலகத்தை உருவாக்குவதற்கு எப்போதும் பல தேவைகள் உருவாகிக் கொண்டே இருக்கும். எனவே இவற்றை நாம் விரைவாக செய்வதன் மூலம் செலவுகளை குறைக்க முடியும். மேலும் நான் அவதார் படத்தை 4 வருடங்கள் எடுப்பதற்கு பதிலாக 2 வருடங்களில் முடிக்க முடியும்.

உரையாடலின் இறுதியாக "நான் கண்டிப்பாக உங்கள் படப்பிடிப்புத் தளத்திற்கு வருவேன். எனக்கு ஒரு கேமரா கொடுங்கள். நான் சில காட்சிகளை படம்பிடித்து தருகிறேன்" என கேமரூன் கேட்க, "நிச்சயமாக உங்களை என் படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துச் செல்வேன்" என்றார் ராஜமௌலி.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com