22 ஆண்டுக்கு பிறகு மீண்டும் சர்ச்சை.. சண்டியர் படத் தலைப்பிற்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு!
22 ஆண்டுகளுக்கு பிறகு 'சண்டியர்' தலைப்பை மீண்டும் பயன்படுத்திய கமல்ஹாசனின் புதிய படத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. 2004-ல் 'விருமாண்டி' படத்தின் தலைப்பாக இருந்த 'சண்டியர்' சமூக பிரச்சனைகளை உருவாக்கும் என கூறி மாற்றப்பட்டது. தற்போது புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மீண்டும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்தியன் 2, தக் லைஃப் போன்ற அடுத்தடுத்த 2 பிளாப் படங்களுக்கு பிறகு கடந்த ஒரு வருடமாக எந்தப்பட அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தார் கமல்ஹாசன். இந்தசூழலில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் கூட்டணியில் உருவாகவுள்ள புதிய திரைப்படம் செப்டம்பர் 3ம் தேதி அறிவிக்கப்பட்டது. கையில் அரிவாளுடன் டெரர் லுக்கில் 'தோ வாரேன்' என பதிவிடப்பட்ட அந்தப்படத்திற்கு சண்டியர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7-ம் தேதி இந்த அறிவிப்பு வெளியான நிலையில், இதற்கு கடந்த 2004ஆம் ஆண்டு எழுந்த எதிர்ப்பு 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எழுந்துள்ளது.
2004-ல் எழுந்த எதிர்ப்பால் பெயர் மாற்றம்!
கடந்த 2004-ஆம் ஆண்டு கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்து மாபெரும் வெற்றி பெற்ற விருமாண்டி படத்திற்கு முதலில் சண்டியர் என்றுதான் பெயரிடப்பட்டிருந்தது. மதுரையை பின்னணியாக கொண்டு உருவான அந்த படத்திற்கு 'சண்டியர்' எனப் பெயர் வைத்தால் தென்மாவட்டங்களில் பதற்றமும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி எதிர்ப்பு கிளம்பியது.
சண்டியர் என்ற வார்த்தை குறிப்பிட்ட சமூகத்தினருடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுவதாகவும், அது சாதிய ஆதிக்கத்தையும் வன்முறையையும் பெருமைப்படுத்தும் விதமாக இருப்பதாகவும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது தேனி மாவட்டத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பைத் தடுத்து நிறுத்தப் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. இதனால் படப்பிடிப்புப் பணிகளிலும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவானது.
இந்த விவகாரத்தில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவும் தலையிட்டதை தொடர்ந்து, படத்தின் தலைப்பை மாற்றிக்கொள்வதாக கமல்ஹாசன் அறிவித்தார். பின்னர் அப்படத்திற்கு பெயர் விருமாண்டி என மாற்றப்பட்டது.
இந்தசூழலில் மீண்டும் 'சண்டியர்' என்ற தலைப்பு கமலின் புதிய படத்திற்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், 22 ஆண்டுகளுக்கு முன்பு எழுந்த அந்த சர்ச்சையி மீண்டும் எழுந்துள்ளது.
மீண்டும் எதிர்ப்பு தெரிவித்த கிருஷ்ணசாமி!
மீண்டும் சண்டியர் என்ற தலைப்பு வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி, ”ரத்தம் சொட்ட சொட்ட ஒரு படத்தை வெளியிட்டு சண்டியர் குறித்து கமல் அறிவித்துள்ளார்.
பிறந்தநாளில் பழிக்கு பழி என்று கமல் ஆரம்பித்துள்ளார்; 23 ஆண்டுக்கு பிறகு அதே பெயரை வைத்துள்ளார்.
கமல்ஹாசன் தற்போது அரசியல் கட்சித் தலைவர்: நாடாளுமன்ற உறுப்பினர். எம்பியாக உள்ள கமல் சாதி. மதம் சார்ந்து செயல்படக்கூடாது. எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு மாறாக செயல்படுகிறார்” என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

