தொட்டு தொட்டு பேசினார்.. சர்ச்சைக்கு காட்டமாக பதிலளித்த கீர்த்தி சுரேஷ்.. மன்னிப்பு கேட்ட நபர்!
சமூக வலைதளங்களில் வைரலான மிஷ்கின்-கீர்த்தி சுரேஷ் வீடியோ குறித்து கீர்த்தி சுரேஷ் காட்டமாக பதிலளித்தார். நிஜ வாழ்க்கை மற்றும் திரைப்பட காட்சிகளை ஒன்றாகக் கலக்க முடியாது என அவர் தெளிவுபடுத்தினார். இதனால், வீடியோவை வெளியிட்ட நபர் மன்னிப்பு கேட்டார்.
கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'சத்தியவான் சாவித்திரி'. பிரவீன் எஸ் விஜய் இயக்கிய இப்படம் நவம்பர் 20ம் தேதி வெளியானது. இப்படம் தொடர்பாக புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், கீர்த்தி சுரேஷின் நடிப்பைப் பாராட்டியதுடன், அவருக்கு 'நடிகையர் திலகம்' என்ற பட்டத்தையும் வழங்கினார். அந்தப் பட்டத்திற்கு கீர்த்தி சுரேஷ் முழுமையாகத் தகுதியானவர் என்றும் பெருமையாகப் பேசினார்.
அப்போது கீர்த்தியின் அருகில் அமர்ந்திருந்த மிஷ்கின், அவரைப் பாராட்டும் விதமாக அவரது முழங்கால் அருகே கையை வைத்துப் பேசினார். மேலும், கீர்த்திக்கு தங்க மோதிரம் ஒன்றையும் பரிசாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இருவரும் தங்களுக்குள் தந்தை - மகள் போன்ற பாசப்பிணைப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
இதற்கிடையே, மிஷ்கின் கீர்த்தியைத் தொட்டுப் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவைப் பார்த்த சிலர், கீர்த்தி சுரேஷ் அப்போது அசௌகரியமாக உணர்ந்ததாகக் கருத்து தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, திரைப்படங்களில் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் நடிகைகள், நிஜ வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு தொடுதலுக்கு ஏன் தயங்க வேண்டும் என்றும் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது போன்ற பதிவுகளுக்கு எதிர்வினை எதுவும் கொடுக்காமல் இருந்த கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பதிலளித்தார். அதில் கீர்த்தி, "முதலில், என்னுடைய முகத்தில் உங்களுக்கு எங்கே அசௌகரியம் தெரிகிறது? நாங்கள் இருவரும் தந்தை - மகள் போன்ற உறவைப் பகிர்ந்துகொள்கிறோம் என்று அவரோ அல்லது நானோ கூறியதைக் கேட்கவில்லையா?
இரண்டாவதாக, நான் அசௌகரியமாக உணர்ந்ததாகவே வைத்துக்கொண்டாலும், திரைப்படங்களில் எங்களைத் தொடுகிறார்கள் என்பதற்காகப் பொது இடங்களிலும் எங்களைத் தொடும்போது அதை இயல்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறீர்களா? நீங்கள் சில விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும், சகோதரரே" என்று காட்டமாகப் பதிலளித்தார்.
கீர்த்தியின் பதிலுக்குப் பிறகு அந்தப் பதிவை வெளியிட்ட நபர் தனது பதிவை நீக்கியதுடன், கீர்த்தியிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். தனக்கு எந்தத் தவறான நோக்கமும் இல்லை என்றும், வீடியோ வைரலானதால் பதிவிட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். திரைப்படங்களில் நடிப்பதையும், நிஜ வாழ்க்கையில் ஒருவருடன் பழகுவதையும் ஒன்றாகப் பார்க்க முடியாது என்பதைத் தனது பதிலின் மூலம் கீர்த்தி சுரேஷ் தெளிவுபடுத்தியுள்ளார்.

