'அயன்' படத்தின் பெயருக்குப் பின்னால் இப்படி ஒரு கதையா? கே.வி. ஆனந்த் சொன்ன விஷயம்
ஒரு படம் வெளியாகி பல ஆண்டுகள் கடந்த பிறகும், அந்தப் படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகிறது என்றால், அந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு இருந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அப்படித்தான் இப்போது சூர்யா நடிப்பில் வெளியான அயன் திரைப்படம் மீண்டும் கவனம் பெற்றிருக்கிறது. 2009 ஏப்ரல் 3-ம் தேதி வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் கே.வி. ஆனந்த். ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக மாறிய கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தை ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்தது.
சூர்யாவுடன் தமன்னா, பிரபு, ஜெகன், கருணாஸ், ஆகாஷ்தீப் சைகல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். ஒளிப்பதிவை கே.வி. ஆனந்த் மற்றும் எம்.எஸ். பிரபு கவனித்திருந்தனர். 2009-ல் வெளியான ‘அயன்’ படத்தின் தொடக்க விழா தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தப் படத்துக்கு ‘அயன்’ என்று ஏன் பெயர் வந்தது? அந்தப் பெயருக்கு என்ன அர்த்தம்? இதைப் பற்றி அப்போது இயக்குநர் கே.வி. ஆனந்த் விளக்கம் கொடுத்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
இந்த வீடியோவில் அயன் படத்தின் பெயருக்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்யம் பற்றி பேசியிருக்கிறார் இயக்குநர் கே.வி. ஆனந்த். இந்தப் படத்துக்கு ஆரம்பத்தில் வைக்கப்பட்ட பெயர் 'பூமத்திய ரேகை'. அதாவது ஆங்கிலத்தில் Equator. ஆனால் அந்தப் பெயரை மாற்றி 'அயன்' என்று வைத்திருக்கிறார்கள். அயன் என்பது படைப்புக் கடவுளான பிரம்மாவின் மற்றொரு பெயர். படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் வாழ்க்கையின் நான்கு வெவ்வேறு நிலைகளைக் கடந்து செல்வதையும், நான்கு விதமான தோற்றங்களில் வருவதையும் பிரம்மாவின் நான்கு முகங்களோடு ஒப்பிட்டுப் பெயரைத் தேர்வு செய்ததாக அவர் விளக்கியிருக்கிறார். அயன் என்றால் ஈடு இணையற்றவர், தோற்கடிக்க முடியாதவர், குறையற்றவர் என்று பல அர்த்தங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
சமஸ்கிருதத்தில் ‘அயன் என்றால் பாதை, பயணம், முன்னேற்றம் போன்ற அர்த்தங்கள் இருக்கின்றன. சோமாலி மொழியில் ‘அயன்’ என்றால் அதிர்ஷ்டம், நல்வாய்ப்பு என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தில் ‘கடவுள் கருணையுள்ளவர்’ என்பது பொருள் என்று கூறினார். அதுமட்டுமில்லாமல், இந்தப் படத்தின் கதையை கே.வி. ஆனந்த் சூர்யாவை மனதில் வைத்தே எழுதியிருக்கிறார். ஏ.வி.எம் நிறுவனத்திடம் கதையைச் சொன்னபோது, வெளிநாடுகளிலும் வித்தியாசமான இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்திருக்கிறது.
அதன் காரணமாக ஆப்பிரிக்கா, நமீபியா, மலேசியா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. குறிப்பாக 'நெஞ்சே நெஞ்சே' பாடலின் காட்சிகள் படமாக்கப்பட்ட இடங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.
மேலும் இந்தப் படத்தில் சூர்யா பல சண்டைக் காட்சிகளை டூப் இல்லாமல் தானே செய்திருக்கிறார். இதை இயக்குநர் கே.வி. ஆனந்தே பாராட்டியிருக்கிறார். இப்படி படத்தின் பெயர், கதாநாயகன் தேர்வு, படப்பிடிப்பு இடங்கள், சண்டைக் காட்சிகள் என ஒவ்வொன்றுக்கும் பின்னால் பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன.
ஒரு சாதாரண ஆக்ஷன் படமாக மட்டும் இல்லாமல், வித்தியாசமான கதைக்களம், இசை, ஒளிப்பதிவு என அனைத்திலும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற அயன் திரைப்படம், இன்றைக்கும் சூர்யாவின் முக்கியமான வெற்றிப் படங்களில் ஒன்றாக இருக்கிறது. அதனால்தான் 17 ஆண்டுகளைக் கடந்தும் அயன் பற்றிய பழைய நிகழ்ச்சிகளும், சூர்யாவின் பேச்சுகளும் மீண்டும் ரசிகர்களால் பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
