Kantara: Chapter 1 : பேரனுபவத்தில் திளைக்க வைக்கும் மாயாஜாலம் | Rishab Shetty | Review
காந்தாராவின் ஆதி கதை நோக்கி நம்மை இட்டுச் செல்கிறது இந்தப் பாகத்தின் கதைக்களம்.
மனிதன் vs இயற்கை மோதல், நில உரிமை போன்றவற்றை தெய்வீகம், நாட்டுப்புறக் கதைகள், புராணம் மற்றும் நம்பிக்கையுடன் கலந்து இந்த பாகம் வழங்குகிறது.
எழுத வார்த்தைகள் இன்றி உங்களை ஒரு காட்சி நம்மை மயக்குமெனில் அது அதன் அரசியல்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு போற்றுதலுக்குரியது அந்தப் பேரனுபவத்தில் நம்மை திளைத்திருக்க வைக்க வல்லது அப்படியான ஒரு மாயாஜாலம் தான் காந்தாரா.
கடம்பா வம்சத்து கொடுங்கோல் அரசரின் அளவில்லா ஆசை, காணும் அனைத்தையும் சொந்தம் கொள்ளச் சொல்கிறது. அத்தகைய ஒரு வெற்றியின்போது, கடலருகே மீன் பிடிக்கும் ஒரு வினோதமான முதியவரை அவர் காண்கிறார். அவரைப் பிடித்துக் கொல்ல உத்தரவிடுகிறார். அவரது பையிலிருந்து விலைமதிப்பில்லா பொருட்கள் விழ அரசர் அவற்றின் மூலத்தைத் தேடத் தொடங்குகிறார். இந்தத் தேடல் அவரை காந்தாராவுக்கு இட்டுச் செல்கிறது, அங்கு பழங்குடியினர் இயற்கையுடன் இணக்கமாக வாழ்கின்றனர்.
கடம்ப அரசரின் அதீத ஆசை, ஈஸ்வர பூந்தோட்டம் எனும் தெய்வீக சக்தியால் பாதுகாக்கப்படும் மர்மமான பகுதியை நோக்கி திரும்புகிறது. கருணை அடிப்படையில் அரசரின் வாரிசை மன்னிக்கிறார் காந்தாரா. பல தசாப்தங்களுக்குப் பிறகு, அரசர் விஜயேந்திரன் (ஜெயராம்) பாங்க்ராவை ஆண்டு வருகிறார். காலம் கனிந்து வர, அவரது மகன் குலசேகரன் (குல்ஷன் தேவய்யா) அரசனாக முடிசூட்டப்படுகிறான், அதேசமயம் அவரது மகள் கனகவதி (ருக்மினி வசந்த்) கருவூலத்தை கையாளுகிறாள். இதற்கிடையில், காந்தாராவின் தலைவரான பெர்மே (ரிஷப் ஷெட்டி) தனது கிராமத்தை வளர்த்து, கிராமவாசிகளின் வாழ்க்கையை மேம்படுத்த முயல்கிறான். காந்தாரா மக்கள் பாங்க்ராவுக்கு வரும்போது, நில உரிமை, பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் முழு மோதலாக வெடிக்கின்றன.
ஒரு படத்தின் அடுத்த பாகத்தை அதே அளவு வீரியத்துடன் எடுப்பது சவாலான காரியம். ஆனால்,அதை திறம்பட செய்திருக்கிறார் ரிஷப் ஷெட்டி. கடம்பா மற்றும் பாங்க்ரா வம்சங்கள், பழங்குடிகள் குறித்த விவரணைகள் என Brand Buildingஐ அட்டகாசமாய் விரிவுபடுத்தியிருக்கிறார். அடக்குமுறை, சமத்துவம், சுரண்டல் என படம் பலவற்றை ஆழமான உணர்ச்சியுடன் கையாள்கிறது. தொட்டால் தீட்டு என்னும் அரசியலை அசுரத்தனமாய் உடைத்திருக்கிறார் ரிஷப் ஷெட்டி.
இந்த காந்தாராவின் சூப்பர் ஹீரோ குலிகா. ஒவ்வொரு விதமான குலிகாவுக்கும் ரிஷப் ஷெட்டி அநாயசமாக நடித்திருக்கிறார். ரிஷப் ஷெட்டியின் பெர்மே பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கூச்சல் வகைகளை காட்டுகிறார். உடல் சிலிர்க்க வைக்கும் தருணங்கள் தொடர்ந்து வருகின்றன. இதுதான் உச்சம் என நாம் நினைக்கும் போது, அதைவிட பிரதமாய் அடுத்த மாயாஜாலத்தை திரையில் காட்டுகிறார் இந்த மாயாஜாலக்காரர்.
ருக்மினிக்கு இந்தப் படத்தில் மிக முக்கியமான பாத்திரம், அதை சிறப்பாக கையாண்டிருக்கிறார். குல்ஷன் தேவய்யா, திறமையற்ற அரசனாக சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது தோற்றமே உங்களை எரிச்சலடையச் செய்கிறது . அதுதான் நோக்கம் என்பதால் அதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றிருக்கிறார்.
அரவிந்த் எஸ் காஷ்யப்பின் ஒளிப்பதிவு, அஜனீஷ் லோக்நாத்தின் ஆன்மாவைத் தொடும் இசை, ஈர்க்கும் விஷுவல் எஃபெக்ட்ஸ் அனைத்தும் சரியானவை. இந்திய சினிமாவின் மிகச்சிறந்த VFX என குலிகா காட்சிகளை நிச்சயமாய் சொல்லலாம். அதே சமயம், க்ளைமேக்ஸில் வரும் ஒரு VFX அவ்வளவு சிறப்பாக இல்லை. படத்தில் அரசியல் ரீதியாகவும் சில பிரச்னைகள் உண்டு. ஆனால், அது குறித்தெல்லாம் பிறகொரு சமயம் பேசிக்கொள்ளலாம்.
'காந்தாரா: அத்தியாயம் 1' அதன் காட்சி அனுபவத்திற்காக, இது ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படும்.