”டோரதி பல விருதுகள் மேடைக்கு செல்லவேண்டும்..” கன்னட நடிகர் உபேந்திரா பாராட்டு!
'டோரதி' திரைப்படம் திருநங்கைகளின் வாழ்க்கையை உண்மைக்கு நெருக்கமாக சித்தரித்து, சர்வதேச அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது. கன்னட நடிகர் உபேந்திரா படத்தை பாராட்டியதோடு பல திரைப்பட விருதுகள் விழாவில் பங்கேற்க வேண்டும் என கூறியுள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ‘டோரதி (Dorothy). கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, இளையராஜா இசையமைத்துள்ளார்.
படம் வெளியாவதற்கு முன்பே டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா (TIFF)-வில் திரையிடப்பட்ட டோரதி, அங்கு பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டும் அளவிற்கு வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் அப்போது படத்தை பார்த்த பலரிடமிருந்து பாராட்டையும் பெற்றது. இதற்கிடையில் இளையராஜா இசையில் வெளிவந்த கல்யாண விருந்து, முத்துமணி பாடலும் ரசிகர்களை கவர்ந்ததால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு எகிறியது.
இந்தசூழலில் வெளியாகியிருக்கும் டோரதி திரைப்படம் ஆண் திருநங்கையாக மாறும் போது குடும்ப சூழல், சமூகத்தால் எப்படி பாதிப்பிற்குள்ளாகிறாள், இச்சமூகம் எப்படி பார்க்கிறது என்பதை உண்மைக்கு நெருக்கமாக பேசுகிறது. முடிவில் தனக்கும் இருக்கும் பெண்மையை சமூகத்திற்காக அடக்கிவைக்காமல் சுதந்திர பறவையாக ‘திருநங்கையாக’ மாறுவதும், சிறுவயது நண்பனை இறுதியில் காதலனாக கைக்கோர்ப்பதுமாக படம் முடிகிறது.
இப்படத்தில் நடித்திருந்த அனைத்து கலைஞர்களின் நடிப்பும், படம் உருவாக்கப்பட்ட விதம், படத்தொகுப்பு, கேமரா ஒர்க், பின்னணி இசை என அனைத்தும் பாராட்டப்பட்டுவருகிறது.
இந்நிலையில் தான் டோரதி படத்தை பார்த்திருக்கும் கன்னட நடிகர் உபேந்திராவும் புகழ்ந்து பாராட்டியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் உபேந்திராவுடன் சந்தித்த போட்டோ வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் பேசியிருக்கும் உபேந்திரா, “கார்த்தி சுப்புராஜை பற்றி கேள்வி படும் போது கல்ட் ரசிகர்கள் அவருக்கு இருப்பதாக சொன்னார்கள். ஆனால் இப்போதுதான் அது எந்தளவு உண்மை என புரிந்தது. அவருக்கு ஹாட்ஸ் ஆஃப். இது மாதிரி ஒரு கதையை நம்பகத்தன்மையுடனும் கலைநயமிக்க படமாகவும், அதேநேரத்தில் கமர்ஷியல் படமாகவும் கொடுத்திருக்கிறார். படத்தில் நடித்திருக்கும் ரிஷிகாந்த் மாஸ் கமர்ஷியல் நடிகருக்கான தோற்றத்தில் இருக்கிறார். சனந்த் அற்புதமாக நடித்து இருக்கிறார். இந்தப் படம் ஏற்கனவே நிறைய திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறது. அது இன்னும் அதிகரிக்க வேண்டும் என நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.

