இந்திய சினிமாவை திரும்பி பார்க்கவைத்த ’டோரதி‘.. சிரஞ்சீவியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்?
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘டோரதி’ திரைப்படம், சமூகத்தின் பார்வையில் திருநங்கைகளின் வாழ்க்கையை உண்மைக்கு நெருக்கமாக வெளிப்படுத்தி விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றுள்ளது. அடுத்ததாக மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைந்து புதிய படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ‘டோரதி (Dorothy). கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் திரையரங்கில் வெளியானதிலிருந்து விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த 25ஆம் தேதி வெளியான டோரதி திரைப்படம், ஆண் திருநங்கையாக மாறும் போது குடும்ப சூழல், சமூகத்தால் எப்படி பாதிப்பிற்குள்ளாகிறாள், இச்சமூகம் எப்படி பார்க்கிறது என்பதை உண்மைக்கு நெருக்கமாக பேசுகிறது. முடிவில் தனக்கும் இருக்கும் பெண்மையை சமூகத்திற்காக அடக்கிவைக்காமல் சுதந்திர பறவையாக ‘திருநங்கையாக’ மாறுவதும், சிறுவயது நண்பனை இறுதியில் காதலனாக கைக்கோர்ப்பதுமாக படம் முடிகிறது. கதை படமாக்கப்பட்ட விதமும், திரைக்கதை, படத்தொகுப்பு, எடிட்டிங், இசை என அனைத்து துறையை சேர்ந்தவர்களுக்கும் பாராட்டு கிடைத்துவருகிறது.
கடந்தாண்டு வெளிவந்த ரெட்ரோ திரைப்படத்தின் மிகப்பெரிய தோல்விக்கு பிறகு டோரதி ஹிட்டடித்திருக்கும் நிலையில், அடுத்த படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் கார்த்திக் சுப்பராஜ் இணையவிருப்பதாக சொல்லப்படுகிறது.
வெளியாகியிருக்கும் தகவலின் படி, சிரஞ்சீவியை நேரில் சந்தித்த கார்த்திக் சுப்பராஜ் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஒரு கதையை விவரித்துள்ளார். சிரஞ்சீவி ‘காக, விஸ்வம்பரா’ என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருப்பதால், இதுகுறித்த முடிவை இன்னும் அவர் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. தமிழில் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட பல படங்களை இயக்கியுள்ள கார்த்திக் சுப்புராஜ், மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் பணியாற்ற ஆர்வமாக உள்ளார். அதேநேரத்தில் திறமை வாய்ந்த இளம் இயக்குநர்களிடம் பணியாற்ற ஆர்வத்துடன் இருக்கும் சிரஞ்சீ்வி, கார்த்திக் சுப்புராஜுடன் இணைவாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

