மொத்த ஏலத்தொகையே ரூ.50 லட்சம் தான்.. அதில் ரூ.26.8 லட்சம் ஏலம்போன சஞ்சு சாம்சன்!
இந்தியாவிலிருக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளூர் டி20 கிரிக்கெட் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கேரளாவில் கேரளா கிரிக்கெட் லீக் தொடர் நடத்தப்படுகிறது.
கடந்த 2024-ம் தொடங்கப்பட்ட தொடரின் முதல் சீசனில் ஏரிஸ் கொல்லம் சைலர்ஸ், காலிகட் குளோப்ஸ்டார்ஸ், திருவனந்தபுரம் ராயல்ஸ், திருச்சூர் டைட்டன்ஸ், கொச்சி ப்ளூ டைகர்ஸ் மற்றும் ஆலப்பே ரிப்பிள்ஸ் முதலிய 6 அணிகள் பங்கேற்றன.
பரபரப்பாக நடைபெற்ற முதல் சீசனின் இறுதிப்போட்டியில் காலிகட் குளோப்ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது ஏரிஸ் கொல்லம் சைலர்ஸ் அணி.
இந்நிலையில் இரண்டாவது சீசனுக்கான ஏலம் இன்று நடைபெற்றது.
26.8 லட்சத்திற்கு ஏலம்போன சஞ்சு சாம்சன்!
2025 கேரளா கிரிக்கெட் லீக்கிற்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெற்ற நிலையில், 26.8 லட்ச ரூபாய்க்கு ஏலம்போன சஞ்சு சாம்சன் தலைப்பு செய்தியாக மாறியுள்ளார்.
ஒவ்வொரு அணிக்கும் மொத்த ஏலத்தொகையாக 50 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கொச்சி ப்ளூ டைக்ர்ஸ் அணி சஞ்சு சாம்சனுக்கு மட்டும் 26.8 லட்ச ரூபாய் செலவிட்டுள்ளது.
இதன்மூலம் கேரளா கிரிக்கெட் லீக் ஏலத்தில் அதிகபட்ச விலைக்கு ஏலம்போன வீரராக சாதனை படைத்துள்ளார் சஞ்சு சாம்சன்.