“நம்ம ஊர் எழுத்தாளர் மிகவும் கீழிறங்கி...” - மஞ்ஞுமல் பாய்ஸ் விமர்சனம் குறித்து பாக்யராஜ் வருத்தம்!

“கேரள மக்களை குறிப்பிட்டு பேசியது என்பது தமிழரின் நாகரீகமும் அல்ல, பண்பாடும் அல்ல. நாம் எல்லோரையும் பாராட்டித்தான் சொல்லியிருக்கிறோம்” - இயக்குநர் பாக்யராஜ்
பாக்யராஜ், மஞ்ஞுமல் பாய்ஸ்
பாக்யராஜ், மஞ்ஞுமல் பாய்ஸ்pt web

பெரிய கதாநாயகர்கள், இயக்குநர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது இருக்கும் வரவேற்பு, அத்திரைப்படத்தின் வசூலின் மீதும் இருக்கும். குறிப்பாக படம் வெளியான பின் படத்தின் வசூல் குறித்த பேச்சுவார்த்தைகள் அனல்பறக்கும். அதிலும் எத்தனை கோடிகள் வசூல், அதையொட்டி தயாரிப்பாளர் படத்தின் ஹீரோவுக்கும் இயக்குநருக்கும் கொடுத்த பரிசுகள் என்னென்ன? என்பது குறித்தான பேச்சுகளே அதிகளவில் இருக்கும்.

ஆனால், பெரிய கதாநாயகர்கள், பெரிய இயக்குநர், தமிழ் திரைப்படம் என அனைத்தையும் உடைத்தது மஞ்ஞுமல் பாய்ஸ். கேரளத்தில் மிகப்பெரிய கொண்டாட்டங்கள் ஏதும் இல்லை என்றாலும், தமிழக மக்கள் ஆராவாரத்துடன் கொண்டாடித் தீர்த்தனர்.

படத்தின் வசூல் அனைத்து மலையாளப்படங்களின் சாதனைகளையும் முறியடித்துள்ளது. இன்றைய தினம் வரை ரூ.200 கோடிகளை வசூலித்துக் குவித்துள்ளது இப்படம். இதன்மூலம் மலையாள சினிமாவில் புதியதொரு வரலாற்றை மஞ்ஞுமல் பாய்ஸ் உருவாக்கியுள்ளனர்.

மஞ்ஞுமல் பாய்ஸ் வெற்றி - எழுந்த விமர்சனம்

பாராட்டுக்கள் மட்டும் இருந்தால் எப்படி....? விமர்சனங்களும் இருக்கத்தானே செய்யும்... அப்படி மூத்த தமிழ் எழுத்தாளர் ஒருவர் தனது இணையதளத்தில் மலையாளிகளை குறிப்பிட்டு மோசமாக விமர்சித்திருந்தார். அவர் எழுதிய விதம், பயன்படுத்திய வார்த்தைகள் என அனைத்துமே பெரும் விவாதத்தைக் கிளப்பியிருந்தது.

பலரும் அக்கருத்துக்கு எதிர்வினைகளையும் கண்டனங்களையும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இயக்குநரும் நடிகருமான பாக்யராஜும் தனது வருத்தத்தை நேற்று பதிவு செய்துள்ளார்.

பாக்யராஜ், மஞ்ஞுமல் பாய்ஸ்
குணா குகையில் REAL ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ குழு! செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்!

’கா‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் ‘கா’ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் பேசிய பாக்யராஜ், “மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் கேரளாவில் வசூலித்ததை விட இங்குதான் அதிகளவில் வசூலித்தது. வெளிமாநிலங்களில் வேறுமொழிகளில் எடுத்த பல திரைப்படங்கள் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றுள்ளன.

கேரள மக்களைக் குறிப்பிட்டது தமிழர் நாகரீகம் அல்ல...

நமது ஊர் எழுத்தாளர் ஒருவர் மிகவும் கீழே இறங்கி அதை விமர்சனம் செய்தது மிகவும் கஷ்டமாக இருந்தது. அவர் மிகப்பெரிய எழுத்தாளர், மிகப்பெரும் பெயர் பெற்றவர், நல்ல எழுத்தாளரும்கூட. அது ஏன் என் மனதுக்கு இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்றால், அவர் படத்தை மட்டும் விமர்சனம் செய்திருந்தால் பரவாயில்லை. கேரள மக்களை குறிப்பிட்டு பேசியிருந்தார். அது தமிழரின் நாகரீகமும் அல்ல, பண்பாடும் கிடையாது. நாம் எல்லோரையும் பாராட்டித்தான் சொல்லியிருக்கிறோம்.

ஓர் எழுத்தாளர் இப்படி விமர்சனம் செய்தது என்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. சினிமாவை எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால் அம்மக்களை அல்ல. தமிழ்நாட்டில் யாரும் அவர் பேசியதை கண்டிக்கவில்லையா என கேரள மக்கள் நினைக்கக்கூடாது. அதற்காகத்தான் நான் இதை பதிவு செய்கிறேன்” என தெரிவித்துள்ளார். இருப்பினும் தான் குறிப்பிடும் எழுத்தாளர் யார் என்பதை அவர் எந்த இடத்திலும் நேரடியாக தெரிவிக்கவில்லை.

முன்னதாக எழுத்தாளர் ஜெயமோகன் மஞ்ஞுமல் பாய்ஸ் மீதான காட்டமான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். அது சமூக ஊடகங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. தன் விமர்சனத்தில் அவர், ‘ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் பகுதிகளில் மலையாள மக்கள் மது அருந்திவிட்டு செல்வது வழக்கம்’ என்பதுபோல கடுமையான வார்த்தைகளால் சாடியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com