‘தமிழ் சினிமா ஆபத்தில் இருக்கிறது..’ ஜனநாயகனுக்கு ஆதரவாக குதித்த திரைப்பிரபலங்கள்!
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் சென்சார் சான்றிதழ் சிக்கலால் வெளியீடு தள்ளிப்போனது. தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்த நிலையில், திரைப்பிரபலங்கள் ஆதரவாக குதித்துள்ளனர். சிபி சத்யராஜ், ரத்னகுமார் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்துள்ளனர். படம் வெளியீடு குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள படம் `ஜனநாயகன்'. விஜயின் கடைசிப் படமான இது ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் இப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்திற்கு சான்றிதழ் வழங்குவதில் இழுபறி நடக்கிறது எனவும், படம் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி சென்சாருக்கு அனுப்பப்பட்டது. அதற்கு U/A சான்றிதழை பரிந்துரைத்த நிலையில், தற்போது வரை தணிக்கைச் சான்று தரப்படவில்லை எனவும் பிரச்னை எழுந்தது.
இது சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது தயாரிப்பு நிறுவனம். இந்த மனு நேற்று நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில், சில காட்சிகளை நீக்கினால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்படும் என மத்திய தணிக்கை வாரியம் கூறியதாகவும் அதனைப் படக்குழு செய்ததாகவும், ஆனால் அதன்பின்பும் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டது. மேலும் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி இருப்பதாக கண்காணிப்பு அதிகாரியும் இதனை உறுதி செய்த நிலையில், யாரோ புகாரளித்துள்ளதாக கூறி சான்றிதழ் வழங்கமால் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக தணிக்கை வாரியத்தின் தரப்பிலிருந்தும் வாதங்கள் வைக்கப்பட்ட நிலையில், ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதியான ஜனவரி 9 அன்று காலை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தசூழலில் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கவலை அதிகரித்துள்ளது..
ஜனநாயகனுக்கு ஆதரவாக குதித்த திரைப்பிரபலங்கள்..
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், நடிகர் சிபி சத்யராஜ், இயக்குநர் ரத்னகுமார் போன்றவர்கள் ஜனநாயகனுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளனர்.
ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஆதரவாக சிபி சத்யராஜ் பதிவிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “ஜனநாயகன் வெளியீட்டைச் சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் ஒரு மாபெரும் வெற்றிக்கான சரியான களத்தை அமைத்துக் கொண்டிருக்கின்றன.. கான்ஃபிடண்ட்டா இருங்க, நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்!” என பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் ரத்ன குமார் பதிவிட்டிருக்கும் பதிவில், ”கடந்த சில மாதங்களாக பெரிய படங்கள் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதைப் பார்ப்பது வேதனையாக இருக்கிறது. தமிழ் சினிமா பெரிய ஆபத்தில் உள்ளது. விஜய் சார் மற்றும் ஜனநாயகன் படக்குழுவினர் வலுவாக இருக்கவேண்டும்.. கொரோனா காலத்தில் நீங்கள் தமிழ் சினிமாவை மீட்டெடுத்தீர்கள். மீண்டும் ஒருமுறை அதைச் செய்வீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். படம் என்னைக்கு வெளியாகிறதோ அன்னைக்குத் தான் திருவிழா” என பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் அஜய் ஞானமுத்து, ”எந்தவொரு படமும் ஒரு நபர் சார்ந்தது அல்ல. ஒரு படம் திரைக்கு வருவதற்கு நூற்றுக்கணக்கான மக்களின் முயற்சிகளும், பணமும் தேவைப்படுகிறது. இது தளபதியின் படம் மற்றும் அவரது கடைசி படம், இது எப்போது வெளியானாலும் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கொண்டாடுவோம். தலைவன் படம் எப்போ ரிலீஸோ அப்போ தியேட்டர் பக்கம் போறேன்” என கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன், ”ஜனநாயகன் பட ஒத்திவைப்பு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது, இது தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பாகும், பட பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைக்கவிருந்தது” என பதிவிட்டுள்ளார்.
அதேப்போல நடிகை ஷனம் செட்டியும் ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

