பகவந்த் கேசரி + அரசியல் பன்ச்... எப்படி இருக்கிறது ஜனநாயகன் ட்ரெய்லர்? | Vijay | Jana Nayagan
விஜயின் கடைசி படம் ஜனநாயகன். அதனாலேயே அப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஜனவரி 9ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் இன்று படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஒரு பக்கம் விஜயின் படம் என்பதால் இந்த ட்ரெய்லரை பார்க்க பலருக்கும் ஆர்வம் இருக்கும் அதேவேளையில், இந்தப் படம் தெலுங்கில் அனில் ரவிப்புடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்த `பகவத்கேசரி' பட ரீமேக்கா என தெரிந்து கொள்ளும் ஆர்வத்திலும் காத்திருந்தனர். இது ரீமேக் தானா? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் ப்ளாஸ்ட்டா என்பதை பார்ப்போம்...
ஹீரோ ஒரு முன்னாள் சிறைக்கைதி, இப்போது ஒரு குழந்தையை வளர்க்க வேண்டிய பொறுப்பு அவருக்கு வருகிறது. அந்தக் குழந்தையை தன் மகள் போல வளர்க்கிறார். ஒருகட்டத்தில் அந்த மகளின் உயிருக்கு ஆபத்து வர, அவரை எப்படி ஹீரோ காப்பாற்றுகிறார்? எதனால் அவர் சிறைக்கு சென்றார்? மகளை கொலை செய்ய நினைப்பது யார்? என்பதெல்லாம் தான்,`ஜனநாயகன்' படத்தின் ஒரிஜினலாக `பகவந்த்கேசரி'யின் கதை. இந்தக் கதையமைப்பை பகவந்த் கேசரி ட்ரெய்லரிலேயே சொல்லி இருப்பார்கள். அதேபோல ஜனநாயகன் ட்ரெய்லரிலும் படத்தின் கதை என்ன என்பதை சொல்லிவிட்டார்கள். என்னதான் படத்தின் இயக்குநர் ஹெச் வினோத் ரீமேக் என்பதை உடைத்து சொல்லவில்லை என்றாலும், இதுவரை வந்த டீசர், படத்தின் ஸ்டில்ஸ், இப்போது இந்த ட்ரெய்லர் எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கையில் இது `ஜனநாயக கேசரி' தான் என்பது தெளிவாக தெரிகிறது.`ஜனநாயகன்' ட்ரெய்லரையும் அருகருகே வைத்துப் பார்த்தால் எவ்வளவு ஒற்றுமை இருக்கிறது எனத் தெரியும், காஸ்ட்யூம், செட், இவ்வளவு ஏன் அதில் ஸ்ரீலீலா பெயர் விஜி, இதில் மமிதா பைஜூ பெயரும் விஜிதான். அவ்வளவு விஷயங்களில் ஒற்றுமை இருக்கிறது.
கதாபாத்திரங்களாக பாலகிருஷ்ணா ரோலில் விஜய், ஸ்ரீலீலா ரோலில் மமிதா பைஜூ, காஜல் ரோலில் பூஜா ஹெக்டே, அர்ஜுன் ராம்பால் ரோலில் பாபி தியோல் இவ்வளவு தான் `பகவந்த் கேசரி' படத்தில் மைய பாத்திரங்கள். மீதமுள்ளவர்களுக்கு சின்ன சின்ன வேடங்களே இருக்கும். ஆனால் அதே சமயம் ஜனநாயகனில் நிறைய மாற்றங்கள், நிறைய பாத்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. உதாரணமாக `பகவந்த்கேசரி'யில் துளியும் அரசியல் இருக்காது. ஆனால் இதில் அரசியல் ஏகத்துக்கும் தூக்கலாக இருக்கிறது. பாத்திரங்கள் பொறுத்தவரையிலும் `பகவந்த்கேசரி' படத்தில் காஜல் அகர்வால் ஒரு Phycologist ஆக வந்திருப்பார். ஆனால் இதில் பூஜா ஹெக்டே பத்திரிகையாளராக வருகிறார்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது, ஒரு கமர்ஷியல் படத்தை பேஸ்மெண்ட் ஆக வைத்துக் கொண்டு அதன் மேல் தன்னுடைய அரசியல் கோட்டையை கட்டி எழுப்பி இருக்கிறார் விஜய். மெய்ன் வில்லன் பாபி தியோல் `மக்களுக்கு நல்லது பண்றேன்னு இதுக்குள்ள வராத, உன்ன காப்பாத்திக்கிட்டு ஓடி போயிடு' என சொல்வதும், சைடு வில்லன் பிரகாஷ்ராஜ் `உன்னால ஒன்னும் பண்ண முடியாது விலகிப்போ' என சொல்வதும் என தனது அரசியல் வருகையை பலர் எதிர்க்கிறார்கள் என பதிவு செய்திருக்கிறார் விஜய். அதற்கு பதிலடியை திரையில், "மொத்த அயோக்கியங்களும் ஒண்ணா நிக்கிறாங்க, அவங்க ஜெயிக்க கூடாது" என்கிறார், "உன்ன காலி பண்ணிடுவேன், அசிங்கப்படுத்திடுவேன்னு சொல்ற எவனா இருந்தாலும் சரி, திரும்பி போற ஐடியாவே இல்ல" என சொல்லி எப்போதும் ஐம் வெயிட்டிங் சொல்பவர் இம்முறை "ஐம் கம்மிங்" சொல்கிறார். இறுதி பன்ச்சாக சாட்டை சுழற்றி "மக்களுக்கு நல்லது பண்றதுக்கு அரசியலுக்கு வாங்கடான்னா, கொள்ளையடிக்கவும், கொல பண்றதுக்குமாடா அரசியலுக்கு வரீங்க? எனக் கேட்டு தன் கொள்கை எதிரிக்கு கேள்வியை வைக்கிறார்.
இது போதாது என தன் அரசியல் அடையாளங்களை படத்தின் மூலம் பதிவு செய்யும் விதமாக, அவரது கட்சிக் கொடியில் இருக்கும் இரட்டை யானை வருவது, TVK என்ற பெயரை தனது கதாபாத்திரத்தின் பெயராக தளபதி வெற்றி கொண்டான் என வைத்திருக்கிறார். மாற்றம் வேண்டும் என மேடைக்கு மேடை பேசியவர், மாற்றம் என்ற கொடி பறக்க மக்கள் படையுடன் வருகிறார். ஒரிஜினல் படமான `பகவந்த் கேசரியில்' வில்லன் செய்ய இருக்கும் மருத்துவ முறைகேடை முறியடிப்பார் ஹீரோ. ஆனால் இதில் ஹீரோ நாட்டை காப்பாற்ற வேண்டும் என்கிறார், மக்கள் திரளுடன் படை எடுத்து வருகிறார். முழுக்க முழுக்க இது விஜயின் அரசியல் இமேஜை ஏற்ற செய்திருக்கும் படம் என்பது பளிச் என தெரிகிறது.
சரி ஒட்டு மொத்தமாக பார்த்தால் `ஜனநாயகன்' ட்ரெய்லர் எப்படி? விஜயின் கடைசி படம் என்பதை மனதில் வைத்து பல மாஸ் காட்சிகள் கொண்ட கேசரியும் உள்ளே இருக்கிறது, விஜயின் அரசியல் வருகையை காட்டும் கோஷங்களும் உள்ளே இருக்கிறது. ரசிகர்களுக்கு கொண்டாட்டம் நிச்சயம் உறுதி. அது ஜனவரி 9ல் தெரிந்துவிடும். ஆனால் இவை விஜய்க்கு வெற்றியாக மாறுமா என்பது கேள்விக்குறியே.

