திரௌபதி 2| ’மங்காத்தா படத்திற்கு முன் நிற்க முடியவில்லை..’ - மோகன் ஜி வேதனை
மோகன் ஜி இயக்கிய திரௌபதி 2 திரைப்படம், 14ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், அஜித் நடித்த மங்காத்தா ரீ-ரிலீஸால், திரௌபதி 2 படம் மக்கள் மத்தியில் சரியாக நிலைநிறுத்த முடியவில்லை என இயக்குநர் வேதனை தெரிவித்துள்ளார்.
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் முதலிய திரைப்படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவரின் இயக்கத்தில் தற்போது வெளியாகியிருக்கும் திரைப்படம் ’திரௌபதி 2’. கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான திரௌபதி படம் மோகன் ஜி-ன் இயக்கத்தில் அதிகம் பேசப்பட்ட படமாக இருந்த நிலையில், அதே தலைப்பில் பாகம் இரண்டையும் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.
ஆனால் முதல் பாகம் நாடகக் காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் திரௌபதி 2 திரைப்படம் 14ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் மோகன் ஜி இயக்கியிருக்கும் திரௌபதி 2 படத்தில் நடிகர்கள் ரிச்சர்ட் ரிஷி, நட்டி, ரக்ஷ்னா இந்தூச்சன் முதலியோர் நடித்துள்ளனர். ஜனவரி 23ஆம் தேதி திரையரங்கில் வெளியான திரௌபதி திரைப்படம், நடிகர் அஜித்தின் மங்காத்தா படத்தின் ரீ-ரிலீஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் மோகன் ஜி வேதனை தெரிவித்துள்ளார்.
மங்காத்தா திரைப்படத்திற்கு முன் நிற்க முடியவில்லை..
திரௌபதி 2 திரைப்படம் வெளியான ஜனவரி 23ஆம் தேதியன்று நடிகர் விஜயின் தெறி திரைப்படமும், நடிகர் அஜித்தின் மங்காத்தா திரைப்படமும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் சமூகவலைதளத்தில் தெறி படத்தின் தயாரிப்பாளர் தாணுவிடம் கோரிக்கை வைத்த மோகன் ஜி, ”கலைப்புலி தாணு சார், எங்களைப் போன்ற படக்குழுவிற்கு ஆதரவளித்து, ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகும் தளபதியின் தெறி படத்தை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஐயா, புதிய தயாரிப்பாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் இயக்குநர்களுக்கு நீங்கள் நிறைய நலத்திட்டங்களைச் செய்தீர்கள். எனவே எங்கள் திரௌபதி 2 படத்தை பிரதான திரைகளில் வெளியிட ஆதரவளித்து எங்களுக்கு உதவுங்கள்” என பதிவிட்டிருந்தார்.
திரௌபதி 2 திரைப்படக்குழுவின் கோரிக்கையை ஏற்று நடிகர் விஜயின் தெறி திரைப்படம் ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் தாணு அறிவித்திருந்தார். ஆனால் நடிகர் அஜித்தின் மங்காத்தா படம் சொன்ன நாளில் திரௌபதி 2 படத்துடன் தியேட்டரில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
இந்தசூழலில் தான் நடிகர் அஜித்தின் மங்காத்தா ரீ-ரிலீஸால் திரௌபதி 2 திரைப்படம் நிற்க முடியவில்லை என மோகன் ஜி வேதனை தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “திரௌபதி 2 திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல கருத்து இருந்தும், மங்காத்தா திரைப்பட வெளியீட்டால் அதற்கு முன் நிற்க முடியவில்லை.. பொங்கல் அன்று திரையரங்க பற்றாக்குறையால், வராமல் அடுத்த வாரம் தள்ளி வந்தது மிகப்பெரிய தவறு.. மக்களிடம் திரைப்படம் ஜனவரி 23 வெளியாகிறது என்ற செய்தியை கொண்டு சேர்க்க முடியவில்லை..
மங்காத்தா திரைப்பட கூட்டத்தால், எங்கள் திரைப்படத்தின் ஆடியன்ஸ் கருத்து பதிவு செய்ய முடியவில்லை.. மக்களிடம் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை கொண்டு சேர்க்க முடியவில்லை.. இந்த சூழலை பயன்படுத்தி, பலர் என் மீது தப்பான கருத்தை பதிவு செய்தும், படம் பார்க்காமல் தவறான கருத்துக்களையும் பரப்பி வருகிறார்கள்.. திரைப்பட துறையில் எந்த பலமும் இல்லாமல் தனியாக இந்த 10 வருடங்களை கடந்து வந்துள்ளேன்.. மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.. எனக்கு மக்களே துணை.. மக்களே முடிவு செய்யட்டும்.. என்றும் உங்களை மட்டுமே நம்பி இருக்கும் உங்கள் மோகன் G..” என பதிவிட்டுள்ளார்.

