`திரௌபதி 2' சர்ச்சை... மன்னிப்பு கேட்ட சின்மயி.. மோகன் ஜி போட்ட பதிவு! | Draupathi 2 |Mohan G
மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷணா, நட்டி, வேலராம மூர்த்தி எனப் பலரும் நடித்துள்ள படம் `திரௌபதி 2'. ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து `எம் கோனே' என்ற பாடல் இன்று வெளியாகிறது. அந்தப் பாடலின் புரோமோ நேற்று வெளியானது. இப்பாடலை சின்மயி பாடியுள்ளார். நேற்றிலிருந்து மோகன் ஜி படத்தின் பாடலை சின்மயி பாடியது தவறு என்ற ரீதியிலான விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வந்தனர்.
இன்று இப்பாடலை பாடியது குறித்து எக்ஸ் தளத்தில் தன் விளக்கத்தை பதிவு செய்துள்ளார். அதில் " `எம்கோனே'வுக்காக மனமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இசையமைப்பாளர் ஜிப்ரானை, 18 வருடங்களாக எனக்குத் தெரியும். இந்தப் பாடலைப் பாட அவரது அலுவகத்திலிருந்து அழைத்தபோது, நான் வழக்கம் போல சென்று பாடினேன். அப்போது ஜிப்ரான் அங்கு இல்லை. பாடல் எப்படி வேண்டும் என கூறினார்கள், நான் பாடி முடித்துவிட்டு வெளியேறினேன். இப்போதுதான் எனக்கு சூழல் புரிகிறது. முன்பே தெரிந்திருந்தால், என்னுடைய சித்தாந்தங்களுக்கு முற்றிலும் முரணாக உள்ள, ஒரு கூட்டணியில் நான் இணைந்திருக்க மாட்டேன். இதுவே முழுமையான உண்மை" எனப் பதிவிட்டிருந்தார்.
அதன் கீழே ஒருவர் "எனவே இசையமைப்பாளர் என்ன படம், யார் நடிகர் போன்ற கூடுதல் தகவல்களை சொல்லமாட்டார்களா?" எனக் கேள்வி கேட்க "பெரும்பாலான நேரங்களில் படத்தின் தலைப்பு நமக்குத் தெரியாது, யார் வேலை செய்கிறார்கள் என்றோ உட்கார்ந்து படத்தின் கதையையோ சொல்வதில்லை, அது தேவையற்றது. இது விசித்திரமாக இருந்தாலும், அப்படித்தான், பல யுகங்களாக இருந்து வருகிறது" என பதிலளித்தார் சின்மயி.
இதன் தொடர்ச்சியாக இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் "`திரௌபதி 2' படத்தில் என்னுடன் பணிபுரிந்த எந்த தொழில்நுட்ப கலைஞர்களையும், நடிகர்களையும், நடிகைகளையும் குறிவைக்காதீர்கள். என்னுடைய படம் எதைப் பேசினாலும் அது என்னுடைய சொந்த படைப்பு மற்றும் கருத்தியல். உங்கள் இலக்கு நான்தான். என்னுடனும் என் படங்களுடனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையவர்களை குறிவைக்காதீர்கள். இது ஒருவித கோழைத்தனம்" என பதிவிட்டுள்ளார்.
ஒருபுறம் சின்மயிக்கு ஆதரவாக பலரும் பேசி, தனது கொள்கைக்காக தானாக முன்வந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார் என பாராட்டி வருகின்றனர். அதேவேளையில் அது எப்படி உங்களுக்கு தெரியாமல் இருக்க முடியும்? இதில் கொள்கை எல்லாம் பார்க்க வேண்டுமா? என்ற கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர்.

