`திரௌபதி 2' படத்தால் இந்து - இஸ்லாமிய சகோதரத்துவம் அதிகரிக்கும்! - மோகன் ஜி | Mohan G | Draupathi 2
மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, நட்டி, ரக்ஷ்னா இந்தூச்சன் நடித்துள்ள படம் `திரௌபதி 2'. இப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரமோஷனுக்கு முன் பேட்டி கொடுத்துள்ளார் இயக்குநர் மோகன் ஜி. இப்பேட்டியில் குறுகிய காலகட்டத்தில் படப்பிடிப்பை முடித்தது பற்றி கேட்டதும், "`அவதார்' படத்தின் படப்பிடிப்பு மொத்தமே 31 நாட்கள்தான். உலகத்தையே கலக்கிய `அவதார்' படத்தின் ஷூட் 31 நாட்கள் தான். போஸ்ட் புரொடக்ஷன் 1 வருடத்திற்கு மேலாக செய்தார்கள். நடிகர்களின் ஒத்துழைப்பு இருந்ததால் என்னால் இந்தப் படத்தை (திரௌபதி 2) 31 நாட்களில் எடுக்க முடிந்தது" என்றார்.
”இயக்குநர் பா இரஞ்சித்க்கு கிடைத்த வாய்ப்புகள் உங்களுக்கு அமையவில்லை என்று யோசித்தது உண்டா” என கேட்கையில், "அவருக்கு கிடைத்த வாய்ப்புகள் எனக்கு கிடைக்கவில்லை என்று நான் நினைத்ததில்லை. எனக்குக் கிடைத்த வாய்ப்புகள் பல அவருக்குக் கிடைப்பதில்லை. எதைச் சொல்கிறேன் என்றால், நிறைய இயக்குநர்களை நடிகர்களாக மாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. பொதுவாழ்வில், நான் ஒரு கோவிலுக்குள் செல்கிறேன் என்றால், கையைப் பிடித்து அழைத்துச் சென்று VIP தரிசனத்துக்கு கூட்டிப் போவார்கள். ’வாடா தமிழ்நாட்டில் என் சமூக மக்கள் நிறைய இருக்கிறார்கள்’. அதுவே தென் தமிழ்நாடு செல்லும்போதும், அந்த மக்கள் எல்லோரும் அவர்களின் வீட்டுப் பிள்ளைபோல வீட்டுக்கு அழைத்துச் சென்று சாப்பிட வைப்பார்கள். இதெல்லாம் இரஞ்சித்துக்கு கிடைத்திருக்குமா என தெரியவில்லை. அவர்களுக்கு சினிமா ரீதியில் பெரிய சம்பளம், பெரிய ஹீரோக்களின் தொடர்பு கிடைக்கலாம். அவர்கள் அதனைக் கொண்டாடுகிறார்கள், நான் இதனை கொண்டாடுகிறேன்" என்றார்.
`திரௌபதி' படத்தால் Anti SC என்ற பெயர் உங்களுக்கு கிடைத்தது, `திரௌபதி 2'வால் Anti Muslim என்ற பெயரும் தரப்படுகிறது, அதை எப்படி பார்க்கிறீர்கள்? என்றதும் "`திரௌபதி' படத்தினால்தான் எனக்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக படம் எடுக்கிறான் என்ற பெயர் கிடைத்தது. ஆனால் நான் அந்த மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் முயன்றேன். உங்களைப் பகடைக்காயாக பயன்படுத்தி, சில குடும்பங்களுக்குள் உங்களை ஊடுருவ வைத்து தப்பு செய்ய வைக்கிறார்கள் எனச் சொன்னேன்.
அதுவும் நான் அனைவரையும் சொல்லவில்லை. ஒரு குறிப்பிட்ட அமைப்பைத் தான் சொன்னேன். இப்போது `திரௌபதி 2' ட்ரெய்லர் பார்த்துவிட்டு Anti Muslim எனச் சொல்கிறீர்கள். ஆனால் படம் பார்த்தபின்பு இஸ்லாமியர்களுக்காகவே நான் படம் எடுத்திருக்கிறேன் எனச் சொல்வீர்கள். நார்த் இந்தியாவில் இப்படம் வெளியானால், இந்து - இஸ்லாமிய சகோதரத்துவம் இன்னும் அதிகமாக வாய்ப்பு உள்ளது" என பதில் அளித்தார் மோகன் ஜி.

