`கல்கி'யில் இருந்து தீபிகா படுகோனே திடீர் நீக்கம்.. பிரபாஸுடன் மோதலா.. காரணம் என்ன?
நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, கமல்ஹாசன், அமிதாப் பச்சன், திஷா பதானி எனப் பலரும் நடித்து 2024இல் வெளியான தெலுங்குப் படம் `கல்கி 2898 AD'. மிகப்பெரிய ஹிட்டாக அமைந்த இந்தப் படம், பெரிய வரவேற்பையும் பெற்றது. இப்படத்தின் அடுத்த பாகத்தின் ஷூட்டிங், பிரபாஸின் தேதி கிடைக்காத நிலையில் தாமதமாகி வருகிறது. இதில் கமல்ஹாசனின் ஆய்வுக்கூடத்தில் சிக்கிக்கொண்ட கர்ப்பிணிப் பெண் சுமதி என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார் தீபிகா படுகோனே. படத்தின் கதையே, தீபிகாவைக் காப்பாற்ற நடக்கும் போராட்டம்தான். முதல் பாகத்தில் மிக முக்கியமான ரோலில் நடித்து வரவேற்பைப் பெற்ற தீபிகா, இனி இந்தப் படத்தில் இல்லை என அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ்.
இதுபற்றி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில், " ‘Kalki2898AD’ படத்தின் அடுத்த பாகத்தில் தீபிகா படுகோனே நடிக்கமாட்டார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம். மிகக் கவனமாகப் பரிசீலித்த பிறகு, நாங்கள் பிரிந்துசெல்ல முடிவு செய்துள்ளோம். முதல் படத்தை உருவாக்கியபோது நீண்ட பயணம் இருந்தபோதிலும், எங்களால் ஒரு கூட்டணியாய் இணைய முடியவில்லை. மேலும், ’Kalki2898AD’ போன்ற ஒரு படம் அர்ப்பணிப்புக்கும் இன்னும் பலவற்றிற்கும் தகுதியானது. நாங்கள் அவரது எதிர்காலப் பணிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.
தீபிகா - பிரபாஸ் இடையே வெளிப்படையான மோதல் இல்லை என்றாலும், மறைமுகமாக இவர்களுக்குள் கடந்த சில மாதங்களாக ஒரு உரசல் இருந்து கொண்டுதான் உள்ளது எனச் சொல்லப்படுகிறது. இதற்கு முன்பு பிரபாஸ் - சந்தீப் வங்கா இணையவுள்ள `ஸ்பிரிட்' படத்தில் தீபிகா நடிப்பதாக இருந்தது. ஆனால் சம்பளம், வேலை நேரம் உட்பட பல விஷயங்களில் உடன்பாடு இல்லாததால், அப்படத்தில் இருந்து தீபிகா நீக்கப்பட்டார் எனச் சொல்லப்பட்டது. அதன் பின்னர், படத்தின் நாயகியாக த்ரிப்தி டிம்ரி நடிக்கிறார் என கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் சந்தீப் வங்கா, தீபிகா பெயரை குறிப்பிடாமல், "ஒரு படத்தின் கதையை நடிகருக்குச் சொல்கிறோம் என்றால், 100 சதவீத நம்பிக்கையுடன் சொல்வோம். ஒரு சொல்லப்படாத ஒப்பந்தம் நமக்குள் இருக்கும். ஆனால், இதனை செய்ததன் மூலம் நீங்கள் எப்படியான நபர் என்பதை வெளிக்காட்டி உள்ளீர்கள். ஓர் இளம் நடிகரை தாழ்த்திப் பேசுவதும், என் கதையை வெளியே கூறுவதும்தான் உங்கள் பெண்ணியமா? உங்களுக்கு இது ஒருபோதும் புரியப்போவதில்லை" என்ற பதிவை வெளியிட்டார்.
அதன்பின்பு கலந்துரையாடல் ஒன்றில் பேசிய தீபிகா, "சமீபத்தில் ஓர் இயக்குநரை அவரது படத்தில் நடிப்பதற்காகப் பேச சந்தித்தேன். கிரியேட்டிவாக அந்தக் கதை பிடித்தது. ஆனால், சம்பளம் பற்றி வரும்போது தொகையைக் கூறினேன். அவர் என்னிடம் 'எங்களால் இவ்வளவு தொகை கொடுக்க முடியாது. ஏனென்றால் படத்தின் ஹீரோவுக்கு பெரிய தொகை கொடுக்க வேண்டி இருக்கிறது' என்றார். எனவே நீங்கள் சென்று வாருங்கள். என்னுடைய வெற்றிகள் பற்றியும், திறமை பற்றியும் எனக்கு தெரியும். அந்த ஹீரோவுடைய படத்தை விட என் படம் நன்றாக ஓடுகிறது" என்ற விஷயங்களை சந்தீப் மற்றும் பிரபாஸ் பெயரை குறிப்பிடாமல் பேசி இருந்தார் தீபிகா.
இப்படியாகச் சென்றுகொண்டிருந்த இந்த மோதல்தான், இப்போது ’கல்கி’ படத்தின் அடுத்த பாகத்தில் தீபிகா நடிக்காமல் விலகுவதற்கு காரணமா என கேள்விகள் எழுந்துள்ளன. ’கல்கி’ படத்தில் தீபிகா இல்லை என தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டாலும், தீபிகா தரப்பு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.