’வாக் ஆஃப் ஃபேம்' பட்டியல் | முதல் இந்திய நடிகை தீபிகா படுகோன்!
ஹாலிவுட் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில், 2026ஆம் ஆண்டுக்கான வாக் ஆஃப் ஃபேம் ஹாலிவுட் பிரபலங்கள் பட்டியலில் தீபிகா படுகோன் இடம்பிடித்துள்ளார். அவருடன் பிரிட்டன் நடிகை எமிலி பிளன்ட், பிரெஞ்ச் நடிகர் டிமோதி சால்மெட், இத்தாலிய நடிகர் பிராங்கோ நீரோ மற்றும் ஹாலிவுட் நடிகர் ராமி மலெக் உள்ளிட்டோரும் இந்த பிரிவில் தேர்வாகி உள்ளனர்.
இதற்கு முன்பாக 2011ஆம் ஆண்டு இந்திய வயலின் இசைக் கலைஞர் ஜூபின் மேத்தா இந்த `வாக் ஆஃப் ஃபேம்' பட்டியலில் இடம்பெற்றிருந்தார். உலக அளவில் சினிமா, நாடகம், இசை, எழுத்து என பொழுதுபோக்கு துறையில் சிறந்த பங்களிப்புகளைச் செய்த திறமையான நபர்கள் இந்த `வாக் ஆஃப் ஃபேம்' பட்டியலுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
அப்படி, தேர்ந்தெடுக்கப்படும் பிரபலங்களுக்கு கலிபோர்னியாவின் பிரபலமான ஹாலிவுட் நகரிலுள்ள ஹாலிவுட் பவுல்வர்டு மற்றும் வைன் ஸ்ட்ரீட் நடைபாதையில் நட்சத்திரம் வடிவிலான பதக்கம் பொறிக்கப்பட்டு கௌரவிக்கப்படும். இந்த புதிய அறிவிப்பு குறித்து பேசியுள்ள, வாக் ஆஃப் ஃபேம் தேர்வுக் குழுவின் தலைவர் பீட்டர் ரோத், `2026ஆம் ஆண்டில், வாக் ஆஃப் ஃபேமில் பொறிக்கப்படவுள்ள 35 மதிப்புமிக்க நபர்களை கௌரவிப்பதில் மகிழ்ச்சியடைவ’தாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தீபிகா படுகோன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ``GRATITUDE" என்று பதிவிட்டு, எளிமையாக நன்றி தெரிவித்துள்ளார்.