100% தரமான சம்பவம்.. அட்லீ-அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்தார் தீபிகா படுகோனே! மாஸ் வீடியோ வெளியீடு!
தமிழில் ராஜாராணி திரைப்படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான அட்லீ, நடிகர் விஜயுடன் தெறி, மெர்சல், பிகில் முதலிய பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து கவனிக்கும் படியான இயக்குநராக மாறினார்.
அதற்குபிறகு தன்னுடைய 5வது படத்திலேயே ஷாருக்கானை இயக்கிய அட்லீ ‘ஜவான்’ என்ற 1000 கோடி வசூல் திரைப்படத்தை கொடுத்து இந்தியாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குநராக உருவாகியுள்ளார். ஷாருக்கான்-அட்லீ கூட்டணியில் உருவான ஜவான், இந்தி திரைப்படங்களில் அதிக வசூல் செய்த இரண்டாவது படமாக சாதனை படைத்தது.
இந்நிலையில் அட்லீ அவருடைய அடுத்த படத்தை எந்த ஹீரோவை வைத்து இயக்கப்போகிறார் என்ற கேள்விக்கு சல்மான் கான் பெயரெல்லாம் அடிபட்ட நிலையில், கடந்த மாதம் அல்லு அர்ஜுன் பிறந்தநாளில் அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி புதிய படத்தில் இணைவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
புஷ்பா 2 என்ற இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுனின் 22வது படமாகவும், ஜவான் என்ற 1000 கோடி வசூல் திரைப்படத்திற்கு பிறகு அட்லீக்கு 6வது படமாகவும் உருவாகவிருக்கும் AA22xA6 என்ற புதிய படம், ஹாலிவுட் திரைக்கலைஞர்களை கொண்டு கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் பிரமாண்டமாக உருவாகவிருக்கிறது.
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணியில் தீபிகா படுகோனே!
இந்திய திரையுலகில் சமீபத்திய பேசுபொருளாக இருந்துவருவது தீபிகா படுகோனே, அனிமல் பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இருவருக்கும் இடையேயான மோதல்தான்.
சந்தீப் ரெட்டி வங்கா - பிரபாஸ் இணைந்திருக்கும் ’ஸ்பிரிட்’ படத்தில் முதலில் தீபிகா படுகோனே நடிக்கவிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், இயக்குநருக்கும்-தீபிகாவிற்கும் இடையேயான மோதலால் ஸ்பிரிட் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதனைத்தொடர்ந்து பிரபாஸின் மற்றொரு படமான ’கல்கி 2’ படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகலாம் என்ற தகவலும் கசிந்துள்ளது.
இந்நிலையில் சர்ச்சைக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அட்லீ-அல்லு அர்ஜூன் இணைந்திருக்கும் மெகா கூட்டணியில் தீபிகா படுகோனேவும் தற்போது இணைந்துள்ளார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வீடியோவாக வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் அட்லீ, தீபிகாவிடம் கதையை விவரிப்பதை போலவும் அதற்கு அவர் சம்மதிப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
கட் செய்தால் தீபிகா படுகோனே தன்னுடைய கதாபத்திரத்திரம் எப்படி இருக்கும் என்ற ஒத்திகையில் ஈடுபட்டிருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அக்காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் ’வாவ்’ என வாய்பிளக்கும் வகையில் இடம்பெற்றுள்ளது. இதையெல்லாம் பார்த்தால் விஜய், ஷாருக்கான் என பெரிய ஹீரோக்களை வைத்து இரண்டு இண்டஸ்ட்ரிகளில் சம்பவம் செய்த அட்லீ, தெலுங்கு இண்டஸ்ட்ரீயிலும் மிகப்பெரிய சம்பவம் செய்யவிருப்பதாக ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் வீடியோவில் இடம்பெற்றுள்ள பிஜிஎம்மை பாராட்டிவருகின்றனர் ரசிகர்கள்.