ஒரே பாகமாக சேர்த்து வெளியாகும் ’பாகுபலி’.. படத்தின் டீசர் + ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் ராணா டகுபதியின் மிரட்டலான நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் 'பாகுபலி'. இரண்டு பாகங்களாக வெளியான இத்திரைப்படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா ரம்யாகிருஷ்ணன், தமன்னா, நாசர், சத்யராஜ் மற்றும் பல நட்சத்திர நடிகர்கள் நடித்திருந்தனர்.
பாக்ஸ் ஆஃபிஸில் ரூ.1800 கோடிக்கும் மேல் வசூல் செய்த பாகுபலி திரைப்படம் இந்திய சினிமாவையே தலைகீழாக திருப்பி போட்டது. அதுமட்டுமில்லாமல் பிரம்மாண்ட திரைப்படம் என்றால் என்ன என்பதற்கு எடுத்துக்காட்டாய் இந்திய சினிமாவில் புதிய டிரெண்ட் செட்டிங்கை உருவாக்கியது.
ஒரே பாகமாக வெளியாகும் பாகுபலி..
இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதன் வெற்றியை படக்குழு சமீபத்தில் கொண்டாடியது. அதுமட்டுமில்லாமல் 'பாகுபாலி' படத்தை ரி-ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.
அதாவது, பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் தனித்தனியாக ரீரிலீஸ் செய்யாமல் இரண்டையும் இணைத்து ஒரே பாகமாக ரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்றும் சொல்லப்பட்டது.
இந்நிலையில், ’BAAHUBALI THE EPIC’ என்ற பெயரில் இரண்டு பாகங்களும் இணைக்கப்பட்டு ஒரே திரைப்படமாக வெளியிடப்படவிருக்கிறது. இதற்கான டீசரை வெளியிட்டிருக்கும் படக்குழு, படம் வரும் அக்டோபர் 31-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
’பாகுபலி’ வெளியாகி 10 ஆண்டுகள் முடிந்தபிறகும் அதன்மீதான ஈர்ப்பு ரசிகர்களுக்கு இன்னும் குறைந்தபாடில்லை. அதற்கு தீணி போடும் வகையில் ’BAAHUBALI THE EPIC’ என்ற பெயரில் வெளியாகவிருப்பது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. நல்ல திரைப்படத்திற்காக ஏங்கியிருக்கும் இந்திய சினிமா ரசிகர்கள், இத்திரைப்படத்திற்கும் நல்ல வசூலை ஈட்டித்தருவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.