’கட்டப்பா பாகுபலியைக் கொல்லவில்லை என்றால்..?’ 10 ஆண்டுக்கு பின் இணையத்தை கலக்கிய ராணா டகுபதி!
இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் ராணா டகுபதியின் மிரட்டலான நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் 'பாகுபலி'. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா ரம்யாகிருஷ்ணன், நாசர், சத்யராஜ் மற்றும் பல நட்சத்திர நடிகர்கள் நடித்திருந்த இத்திரைப்படம், பாக்ஸ் ஆஃபிஸில் ரூ.1800 கோடிக்கும் மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றித்திரைப்படமாக மாறியது.
இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதன் வெற்றியை படக்குழு சமீபத்தில் கொண்டாடியது. அதுமட்டுமில்லாமல் 'பாகுபாலி' படத்தை ரி-ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. அதாவது, பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் தனித்தனியாக ரீரிலீஸ் செய்யாமல் இரண்டையும் இணைத்து ஒரே பாகமாக ரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் பாகுபலியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ‘கட்டப்பா பாகுபலியை கொல்லவில்லை என்றால்? என்ன நடந்திருக்கும் என கேட்கப்பட்டிருக்கும் பதிவு மீண்டும் பாகுபலியை பேசுபொருளாக மாற்றியுள்ளது.
கட்டப்பா பாகுபலியை கொல்லவில்லை என்றால்?
பாகுபலியின் முதல் பாகத்தின் முடிவில் ’கட்டாப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?’ என்ற டிவிஸ்ட்டோடு முடியும் படம், இரண்டாவது பாகத்திற்கான ஹைப்பை பல மடங்கு உயர்த்தியது. ’என்னவா இருக்கும், ஏன் கட்டப்பா கொன்னு இருப்பாரு’ என வடிவேலு பாணியில் முதல் பாகத்தை பார்த்தபிறகு யோசிக்காதவர்கள் யாரும் இருந்திருக்க மாட்டார்கள்.
இந்த சூழலில் ‘கட்டப்பா பாகுபலியை கொல்லவில்லை என்றால்? என்ன நடந்திருக்கும்’ என மீண்டும் ஒரு பதிவை போட்டு பாகுபலியின் கொலையை பேசுபொருளாக மாற்றியுள்ளனர். அந்தப்பதிவை தாண்டி, அப்பதிவிற்கு பல்வாழ் தேவனான ராணா டகுபதி போட்டிருக்கும் பதிவுதான் மீண்டும் இணையத்தை ஆட்கொண்டுள்ளது.
‘கட்டப்பா பாகுபலியை கொல்லவில்லை என்றால்?’ என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கும் பல்வாழ் தேவன் ‘நான் அவனை கொன்றிருப்பேன்’ என்று பதிவிட்டு இணையத்தில் பாகுபாலி குறித்த பேச்சை தூண்டிவிட்டுள்ளார்.
படத்தின் மீதான ஈர்ப்புடன் இன்றளவும் இருந்து வரும் ரசிகர்கள் ‘பாகுபலியின் மகனையே உங்களால் கொல்ல முடியவில்லை நீங்கள் பாகுபலியை கொல்லப்போகிறீர்களா’ என்றும், ‘உங்களால் அது முடியாது என்றும்’ எதிராக கருத்திட்டு வருகின்றனர்.
மறுபுறம் பல்வாழ் தேவனுக்கு ஆதரவாக கருத்திட்டு வரும் ரசிகர்கள், ‘ஒரு பல்வாழ் தேவனை வீழ்த்த அப்பா, மகன் இரண்டு பாகுபலி வந்தாலும் முடியாது’ என்றும் கருத்திட்டுள்ளனர். மீண்டும் பாகுபலியின் கொலை பேசுபொருளாக மாறியுள்ளது.