உலகளவில் ரூ.500 கோடி வசூல்| சம்பவம் செய்த கூலி..!
500 கோடி ரூபாய் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் இடம்பிடித்த கூலி
தமிழ் சினிமா வரலாற்றில் ரஜினிகாந்த் புதிய மைல்கல்
3 முறை 500 கோடி ரூபாய் வசூல் செய்த ஒரே நடிகர் ரஜினி
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் திரைப்படம் ’கூலி’. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், அமீர் கான் உள்ளிட்ட பல திரை சூப்பர் ஸ்டார்களும் நடித்துள்ளனர். மேலும், நடிகை பூஜா ஹெக்டே ’மோனிகா’ என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அனிருத்தின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்த நிலையில், மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் ’கூலி’ படம் ஆகஸ்டு 14ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸானது.
மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான கூலி திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. விமர்சன ரீதியில் பின்னடைவு, படத்திற்கு ஏ தணிக்கை சான்றிதழ் போன்றவை கூலியின் வசூலை பாதிக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது உலகளவில் 500 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது கூலி.
500 கோடி ரூபாய் வசூலித்த கூலி..
சட்டவிரோத கடத்தல் உலகத்தை மையமாக கொண்டு கூலி படத்தின் கதை நகர்கிறது. கடத்தல் கும்பலுடன் ஏற்படும் மோதல், அதில் நடக்கும் அடுத்தடுத்த திருப்பங்கள், விருவிருப்பான காட்சிகள், எதிர்பாராத கிளைமாக்சுடன் கூலி திரைப்படம் நிறைவு பெறுகிறது.
என்னதான் பல விமர்சகர்கள் தங்களதுபார்வையில் பல்வேறு விமர்சனங்களைமுன்வைத்தாலும், ரஜினிகாந்த் என்ற ஒற்றை மனிதருக்காக கூலி படத்தைபலரும் கொண்டாடி வருகின்றனர். அந்தக் கொண்டாட்டத்தின் விளைவு தான் படத்திற்கு இரண்டாவது வாரத்திலும் டிக்கெட் முன்பதிவு அதிகரித்துள்ளதை காட்டுகிறது. அதுமட்டுமில்லாமல் வசூலிலும் பட்டையை கிளப்பிவருகிறது.
படம் வெளியாகி 12 நாட்களை கடந்திருக்கும் நிலையில், உலகளவில் மொத்த வசூலாக 500 கோடி ரூபாயை கூலி கடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாளில் உலகளவில் 151 கோடி ரூபாய் வசூல் செய்த ரஜினியின் கூலி, இரண்டாவது வாரத்தை நெருங்கும் நிலையில் இந்தியளவில் 260 கோடியையும், உலகளவில் 502 கோடியையும் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனடிப்படையில் தமிழ் சினிமா வரலாற்றில் 4 படங்கள் மட்டுமே 500 கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் நிலையில், 2.O மற்றும் ஜெயிலர் திரைப்படங்களுக்கு பிறகு 3வது முறை 500 கோடிக்கு மேல் வசூல் கொடுத்த நடிகராக ரஜினி சம்பவம் செய்துள்ளார்.