”எதற்கும் துணிந்தவன் தோல்வி படம் தான்.. ஆனால்” - சூர்யா ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பாண்டிராஜ்!
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தலைவன் தலைவி’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குடும்ப திரைப்படமாக வெளியாகியிருக்கும் தலைவன் தலைவி, குடும்ப ரசிகர்களை தியேட்டருக்கு இழுத்துவருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் பாண்டிராஜ், சூர்யா உடனான எதற்கும் துணிந்தவம் படம் சரியாக செல்லாதது குறித்தும், அப்படத்தின் வசூல் குறித்தும் பேசியிருந்தார். அப்பேச்சு சூர்யாவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இருந்தது.
எதற்கும் துணிந்தவன் வசூலை மற்ற படங்கள் பீட் செய்யவில்லை..
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’. இப்படத்தில் சூர்யா உடன் சத்யராஜ், சரண்யா, சூரி, பிரியங்கா மோகன், பிரியதர்ஷினி, ‘குக்வித் கோமாளி’ புகழ் என பல திரை நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. கடைக்குட்டி சிங்கம், நம்ப வீட்டு பிள்ளை என அடுத்தடுத்து இருபெரும் வெற்றிப்படங்களை கொடுத்த பாண்டிராஜ் சூர்யாவுடன் இணைந்த எதற்கும் துணிந்தவன் ஹிட் படமாக அமையவில்லை.
இந்த சூழலில் சமீபத்தில் நேர்காணலில் பேசியிருக்கும் பாண்டிராஜ், எதற்கும் துணிந்தவன் தோல்வி படம் தான், ஆனால் அதன் வசூலை அதற்குபிறகு வந்த எந்த சூர்யா படங்களும் தாண்டவில்லை, அதுதான் உண்மை என கூறியிருப்பதுதான் பேசுபொருளாக மாறியுள்ளது. எதற்கும் துணிந்தவனுக்கு பிறகு கங்குவா மற்றும் ரெட்ரோ இரண்டு படங்கள் வெளியாகியிருக்கும் சூழலில், சூர்யாவின் இந்த இரண்டு படங்களும் எதற்கும் துணிந்தவன் வசூலை தாண்டவில்லையா என ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.
நேர்காணலில் பேசியிருக்கும் பாண்டிராஜ், “சூர்யா சாருக்கு மட்டும் ப்ளாப் படம் கொடுத்துட்டு, மற்ற ஹீரோக்கள் அனைவருக்கும் ஹிட் கொடுக்கிறீர்கள் என்று கூறினார்கள். கொரோனா காலத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு தான் 3 ஆண்டுகள் வேலை பார்த்தேன். மற்ற படங்களை விட அப்படத்துக்கு தான் அதிகமாக உழைத்தேன், மக்களிடையே வரவேற்பு பெறாதது நம் கையில் இல்லை. தம்பி கார்த்திக்கு பெரிய ஹிட் கொடுத்தோம். அண்ணனுக்கு அதைவிட பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்று தான் வேலை பார்த்தோம். ஏதோ ஒரு விதத்தில் அமையவில்லை. அதற்கு காரணம் நான் தான் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.
கொரோனா காலத்தில் உயிரைப் பற்றிக் கூட கவலைப்படாமல் வேலை பார்த்த படம் ‘எதற்கும் துணிந்தவன்’. தயாரிப்பாளர், ஹீரோ என அனைவருக்குமே அப்படத்தால் மகிழ்ச்சி தான். ஆனால் வசூல் ரீதியாக பெரிதாக பண்ணவில்லை என்பது வருத்தம். அதற்குப் பின் வெளியான படங்கள் கூட ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் வசூலைத் தாண்டவில்லை, அதுதான் உண்மை. இதை யாரிடம் வேண்டுமானாலும் விசாரித்துக் கொள்ளலாம்” என பேசியுள்ளார்.
எதற்கும் துணிந்தவன் திரைப்படம் 100 கோடிவரை தான் வசூல்செய்திருக்கும் நிலையில், ரெட்ரோ திரைப்படம் 235 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்த சூழலில் தான் இயக்குநர் பாண்டிராஜ் பேச்சு சூர்யா ரசிகர்களை அதிருப்தி அடையச்செய்துள்ளது.