மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 20 |நடிப்பின் இலக்கணம் - காளையனாக வாழ்ந்த குரு சோமசுந்தரம்!

“எடிட்டிங், சிறந்த இயக்குநர் ஆகிய இரண்டு பிரிவுகளில் ‘ஆரண்ய காண்டம்’ படத்திற்கு தேசிய விருதுகள் கிடைத்தன. சிறந்த துணை நடிகர் பிரிவில் குருசோமசுந்தரத்திற்கும் விருது கிடைத்திருந்தால் அது முழு நியாயமாக இருந்திருக்கும். அப்படியொரு நடிப்பை தந்திருந்தார்”
guru somasundharam
guru somasundharamfile image

காளையன் - குரு சோமசுந்தரம் – ஆரண்ய காண்டம்

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக குரு சோமசுந்தரத்தைச் சொல்ல வேண்டும். கூத்துப்பட்டறை நாடகக் குழுவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றவர் குரு சோமசுந்தரம். அந்தக் குழு நடத்திய ஒரு நாடகத்தில் சந்திரஹரியாக இவர் நடித்ததைப் பார்த்து ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தில் ‘காளையன்’ என்கிற பாத்திரத்தில் நடிக்க வைத்தார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே ‘தான் எத்தனையொரு சிறந்த கலைஞன்’ என்பதை துளி சந்தேகமும் இன்றி நிரூபித்து விட்டார் குரு சோமசுந்தரம். அதன் பிறகு ஏராளமான தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர், நடிப்புப் பயிற்சி அளிப்பதிலும் விற்பன்னராக இயங்குகிறார்.

‘ஆரண்ய காண்டம்’ திரைப்படம் பல்வேறு கிளைக்கதைகளைக் கொண்டது. அதில் காளையனாக குரு சோமசுந்தரமும், அவருடைய மகனாக கொடுக்காப்புளியும் நடித்திருக்கும் பகுதி ரசிகர்களால் அதிகமாக வரவேற்கப்பட்டது. சூதாட்டத்தில் அனைத்து சொத்துக்களையும் இழந்திருக்கும் அப்பாவியான ‘காளையன்’ பாத்திரத்தில் தனது மிகச்சிறந்த நடிப்பைத் தந்திருந்தார், குரு சோமசுந்தரம். இதற்காக தனது உடல் எடையை குறைத்து பாத்திரத்தின் நம்பத்தன்மைக்காக மிகவும் மெனக்கிட்டார்.

வாழ்ந்து கெட்ட ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவராக தன்னைச் சொல்லிக் கொள்ளும் காளையன் சூதாட்டத்தில் அனைத்துச் சொத்துக்களையும் இழந்திருக்கிறார். மிச்சமிருக்கும் பொருளை வைத்து மளிகைக்கடை வைத்தாலும் கடன் பாக்கிகளை வசூலிப்பதில்லை. பழைய ஜமீன் பெருமிதத்தில் “ஏழை ஜனங்க பாவம்” என்று விட்டு விடுகிறார். வாங்கிய கடன் பெருகி நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார். சேவற்சண்டையில் ஜெயிப்பதன் மூலம் கடன் தொல்லையில் இருந்து மீள முடியும் என்கிற கடைசி நம்பிக்கையில் தனது மகன் கொடுக்காப்புளியோடு நகரத்திற்கு வந்திருக்கிறார்.

காளையன் - வாழ்ந்து கெட்ட ஜமீன்

‘பாவா லாட்ஜ்’ என்கிற விடுதியில் இவர்கள் இருவரும் தங்கியிருக்கிறார்கள். பக்கத்து அறையில் இருக்கும் ஒரு நடுத்தர வயது ஆசாமி, காளையனோடு சேர்ந்து மது அருந்துகிறார். போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அந்த ஆசாமி, தான் செய்யும் வேலைக்காக தரப்படும் தொகை போதவில்லை என்று புகார் சொல்லிக் கொண்டிருக்கிறார். “இதோட மதிப்பு தெரியாம போச்சுப்பா.. ஏமாத்திப்புட்டாங்க. வெள்ளைக்காரன் மூக்குப்பொடி” என்று காளையனிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இருவரின் நடிப்பும் அசல் குடிகாரர்கள் போலவே இருக்கிறது. “வர்ற காசை வெச்சு குடி.. குட்டி..” என்று தான் உல்லாசமாக இருப்பதை, ஒரு பெண்மணியுடன் எடுத்திருக்கும் புகைப்படத்தைக் காட்டுவதின் மூலம் பெருமைப்படுகிறார் அந்த ஆசாமி. புகைப்படத்தைப் பார்த்தபடி காளையன் தாழ்ந்த குரலில் சொல்கிறார். “அவ்ளோ ஒண்ணும் குட்டியா இல்ல. ஆனாலும் உங்களைப் பார்த்தா பொறாமையாத்தான் இருக்கு. இவிய்ங்க மட்டும் எவ்ளோ கொடுக்கறாங்க. அம்பூட்டா?” என்று காளையன் வாயைப் பிளக்க, குளித்து விட்டு தலை கோதிக் கொண்டே வரும் கொடுக்காப்புளி இவர்களை வெறுப்புடன் பார்க்கிறான்.

“ச்சீ ” என்று தன் தந்தையை நோக்கி அவன் எரிச்சலுடன் சொல்ல “என்னமா சொல்றான்யா.. எப்படிச் சொல்றான்யா..” என்று காளையன் கையை மோவாயில் வைத்தபடி பெருமிதத்துடன் மகனை நோக்கி வசனம் சுவாரசியமானது. “என்னாய்யா.. உன் பையன் இப்படித் திட்டறான். ரோஷமில்ல” என்று அந்த ஆசாமி கேட்க, பெருமையும் சோகமுமாக காளையன் பேசுவதில் அவருடைய பின்னணி விரிகிறது. இந்தக் காட்சியில் குருசோமசுந்தரத்தின் நடிப்பு. வசன உச்சரிப்பு, உடல்மொழி போன்ற அனைத்துமே அத்தனை அற்புதமாக இருக்கிறது.

குரு சோமசுந்தரத்தின் அட்டகாசமான நடிப்பு

என்னாத்துக்கு ரோஷப்படணும். என் ரத்தம்ல.. டே மவனே..கொடுக்காப்புளி.. உங்க அப்பனை ரெண்டு வார்த்தை. கெட்ட வார்த்தைல வைடா.. (தாழ்ந்த குரலில்) இப்ப திட்ட மாட்டான் அதான் டெக்னிக்கு.. (பெருமிதமான குரலில்) அவன் அவங்க அம்மா மாதிரி. சிகப்பு தேகம். சுருள் முடி. ரோசக்காரப்பய.. அது.. (கழிவிரக்கம்) நான் சொத்தெல்லாம் சூதாடி அழிச்சுப்புட்டன்ல.. அந்தக் கோவம்தான். ஆங்.. பார்க்க இப்படி இருக்கேன்னு நெனக்காதீங்க. பெரிய ஜமீன் குடும்பம். இப்பக்கூட நம்ம அரண்மனையை விலைக்கு வாங்கி ஹோட்டலாக்கிப்புட்டாங்க. முட்டாப்பசங்க.. எல்லாம் போச்சு. வட்டிக்கு கடன் வாங்கி மாட்டிக்கிட்டேன்

யாரு வராகமூர்ததி கிட்டயா.. அவன் பணம் தரலேன்னா பொண்டாட்டி புள்ளய தூக்கிட்டுப் போய் பிராத்தல்ல விட்ருவானேப்பா” என்று அந்த ஆசாமி சொல்ல, காளையன் பதட்டத்துடன் “நெசந்தானா.. நெசந்தானா..” என்று கண்கலங்குகிறார். “யோவ் பெரிய மனுஷன் மாதிரியா பேசற?” என்று கொடுக்காப்புளி திட்டுவதால் ரோஷத்துடன் அந்த ஆசாமி தள்ளாடிக் கொண்டே கிளம்புகிறார். தள்ளாட்டம் அதிகமாக இருப்பதால், அதைக் கிண்டலுடன் பார்க்கும் காளையன் “மப்பு.. மப்பு..” என்று சொல்லியபடியே தானும் குடிமயக்கத்தில் அமிழத் துவங்குகிறார்.

சேவற்சண்டை நடந்து கொண்டிருக்கிறது. சிங்கபெருமாள் என்கிற தாதாவின் சேவலும் காளையனின் சேவலும் மோதுகிறது. மற்றவர்களை வெறுப்பேற்றுவது போல் உற்சாகத்தில் கத்திக் கொண்டேயிருக்கிறார் காளையன். “காட்டு முனீஸ்வரா.. சாமி. என் குடும்பத்தை காப்பாத்துய்யா.. போடுய்யா.. போடுய்யா.. நீ போடற போட்ல அந்தப் பொட்டைக் கோழி முட்டையைப் போடணும்…” காளையனின் சேவல் ஜெயிக்கிறது.

வருத்தப்படாதிய.. காளையன் சேவலு கிட்ட தோத்துடுச்சின்னு சொல்லுங்க. அம்பூட்டுப் பயலும் புரிஞ்சிப்பாங்க.. “ என்று சிங்கபெருமாளுக்கு ஆறுதல் சொல்லும் நோக்கில் காளையன் செல்ல, ‘யார்ரா இவன் கோமாளி’ என்கிற எரிச்சலில் தள்ளி விடுகிறார் சிங்கபெருமாள். “கெழவன் கோலி.. கெழட்டுக் கோளி..” என்று காண்டேற்றும் விதமாக காளையன் ஆட்டத்துடன் தொடர்ந்து கூவிக் கொண்டிருக்கிறார். கிழவன் என்கிற வார்த்தை காலையில் இருந்து சிங்கபெருமாளை துரத்திக் கொண்டிருப்பதால் ஆத்திரம் கொண்டு கத்தியை எடுத்து வீசுகிறார். காளையனைத்தான் அவர் கொன்று விட்டாரோ என்கிற சஸ்பென்ஸிற்குப் பிறகு தெரிகிறது. சேவல்தான் கொல்லப்பட்டிருக்கிறது. மயங்கிக் கிடக்கும் காளையனை தூக்கி கண்ணீருடன் அழைத்துப் போகிறான் கொடுக்காப்புளி.

தந்தையும் மகனுமாக அசத்தியிருக்கும் காளையனும் கொடுக்காப்புளியும்

கடனை அடைக்க தெய்வமாக நின்று உதவும் என்று நம்பிய சேவல், காளையனின் சேட்டையால் கொல்லப்பட்ட சோகம் கொடுக்காப்புளிக்குள் ஏற்படுவதால் கற்களை எடுத்து அவர் மீது வீசி விட்டு எரிச்சலுடன் கத்துகிறான். “போய்யா நீ வேஸ்ட்டு”. அடிபட்ட முகத்துடன் இரஞ்சும் குரலில் காளையன் சொல்கிறார் “நீயும் அப்படி சொல்லாதடா என் பெல்ல குஞ்சு” என்றபடி திமிறத் திமிற தன் மகனை அணைத்துக் கொள்கிறார். குருசோமசுந்தரத்தின் நடிப்பு மிக உச்சத்தில் வெளிப்படும் காட்சி இது. சேவற்சண்டையின் போதிருந்த குதூகலமும் பெருமிதமும் முற்றிலும் தொலைந்து போய், மகனும் தன்னை திட்டி விட்டானே என்கிற சுயபச்சாதாபம் வெளிப்படுகிறது. பிறகு ஏதோவொரு உறுதி முகத்தில் தோன்ற மகனை அழைத்துச் செல்கிறார்.

இருவரும் சோகத்துடன் லாட்ஜூக்கு திரும்புகிறார்கள். குடிகார ஆசாமியின் அறையில் எட்டிப் பார்க்கிறான் கொடுக்காப்புளி. அறைக்குள் திரும்பும் அவன் கையில் போதைப்பொருள் இருக்கும் பை இருக்கிறது. “அடப்பாவி! தப்புடா, சாராயம் வாங்கிக் குடுத்தவரு சாமி மாதிரி” என்கிறார் காளையன். “நாம இருக்கற நெலமைக்கு எதுவுமே தப்பில்லை” என்கிறான் கொடுக்காப்புளி. பையை திரும்ப வைக்கச் சென்ற காளையன் பதட்டத்துடன் திரும்புகிறார். “அவரு செத்துக் கிடக்கறாரு. மூச்சு பேச்சில்ல. கொன்னுட்டியா?”

“வந்தாரு. பாசமா பேசினாரு.. குடிச்சாரு. சுருட்டு ஊதினாரு” என்று அவரை நினைவுகூர்கிறார் காளையன். “ப்பா.. வந்தவரு காட்டு முனீஸ்வர சாமிதான். பாரு.. என்ன படையல் வெச்சிருக்கோம்ன்னு” என்று கொடுக்காப்புளி சொல்ல, சாமிப்படம் அச்சிட்ட மஞ்சள் பைக்கு முன்னால் சாராயம், கறித்துண்டுகள் கிடக்கின்றன. “அட! ஆமாம்டா.. அது காட்டுமுனீஸ்வரன்தான்” என்கிற காளையன் உணர்ச்சிப்பெருக்குடன் இடுப்பிலிருந்து விபூதிப் பையை எடுத்து பரவசத்துடன் நெற்றியில் இட்டுக் கொள்கிறார்.குரு சோமசுந்தரம் - நடிப்பின் இலக்கணம்

குரு சோமசுந்தரம் - நடிப்பின் இலக்கணம்

கொடுக்காப்புளி சாலையில் விற்கும் பானிபூரியை வாங்கி தின்று கொண்டிருக்க காளையனிடம் மறுபடியும் அந்தப் பெருமிதம் ஒட்டிக் கொள்கிறது. “கொடுக்காப்புளி.. இந்த உலகத்திலேயே குலதெய்வத்தோட சேர்ந்து தண்ணியடிச்ச ஒரே ஆள் நான்தான்” என்று பெருமையுடன் சொல்ல ”ச்சீ” என்று திட்டுகிறான் அவன். சட்டென்று முகம் சுயபரிதாபத்துடன் மாற, பணக்காரன் மற்றும் ஏழையின் வேட்டி அவிழ்ந்தால் உலகம் அதை எப்படி பார்க்கும் என்று காளையன் விவரிக்கும் காட்சி அற்புதமானது (பணம் ரொம்ப முக்கியம்டா கொடுக்காப்புளி). போதைப் பொருளை ஒப்படைத்து காசு வாங்குவதுதான் அவர்களின் அப்பாவித்தனமான நோக்கம். அதன் பின்னுள்ள ஆபத்து மெல்ல மெல்லத்தான் அவர்களுக்கு தெரிய வருகிறது.

தொலைபேசி எண் எழுதிய சீட்டை லாட்ஜிலேயே விட்டு வந்திருப்பதை உணரும் அவர்கள் மீண்டும் அங்கே ஓடுகிறார்கள். சீட்டு எளிதில் கிடைப்பதில்லை. “போச்சா.. போச்சா. அவ்ளவுதான்.. என் விதி.. ஊர்ல எத்தனையோ பேரு பொண்ணு தரேன்னு வந்தான். உங்காம்மாள கட்டினன்..” என்று புலம்பும் காளையனிடம் “யோவ் தேடுய்யா” என்று எரிச்சல்படுகிறான் கொடுக்காப்புளி. ஒருவழியாக சீட்டு கிடைத்ததும் காளையனின் தொனி தலைகீழாக மாறுகிறது. “அதான். ஒரு விஷயம் கிடைக்காதுன்னு சொல்லிட்டு இருந்தா கிடைச்சுடும்” என்று சமாளிக்கும் விதமாக பேசுவது அவருக்கே தெரிந்து மௌனமாகி விடுகிறார். சிங்கபெருமாளின் ஆட்கள் துரத்துவதால் இருவரும் ஓடி ஒளிந்து தப்பிக்கிறார்கள்.

“ச்சே. என்னடா ஊரு இது. காலைலன்னா சேவலைக் கொன்னாங்க. இப்ப என்னடான்னா ஆளையே கொல்லப் பார்க்கறாங்க” என்று சலித்துக் கொள்ளும் காளையனின் கண்களில் ஒரு பொதுதொலைபேசி மாட்டுகிறது. “ஒரு லட்சம் கேப்போம்” என்று கொடுக்காப்புளி சொல்ல “ஏண்டா. ஊரான் சொத்துக்கு இப்படி அலையற. நமக்கு கடன் எவ்வளவு… 5000 சேவலுக்கு ஒரு 2000 சத்திரம். சாவடி செலவு 1000.. எட்டாயிரம் கேப்போம்” என்று காளையன் சொல்ல “யோவ்.. நீ நெஜம்மாவே லூசா.. இல்ல லூசு மாதிரி நடிக்கிறியா?” என்று எரிச்சலுடன் திட்டுகிறான் கொடுக்காப்புளி.

போனை எடுத்து உற்சாகத்துடன் பேசும் காளையன், “சரக்கு என் கிட்டதான் இருக்கு. அதான்.. வெள்ளைக்காரன் மூக்குப் பொடி.. ஓடாத மணிக்கூண்டு கிட்ட வந்துடுங்க. எனக்கு நேரம் இல்ல. (தாழ்ந்த குரலில்) வரும் போது ஒரு ரெண்டு லட்சம் எடுத்துட்டு வாங்க. நோ மென்ஷன்” என்று மீசையைத் தடவிக் கொடுத்தபடியே கொடுக்காப்புளியை பெருமையாகப் பார்க்க, அதுவரை விரோதமாக இருந்த மகனின் முகம் மலர்கிறது. “எங்கப்பனை விட உங்கொப்பன் புத்திசாலிடா” என்று பெருமை பேசியபடி செல்லும் காளையனை பின்தொடர்கிறான் மகன். இருவரும் ஓடாத மணிக்கூண்டின் அருகே சென்று அமர்கிறார்கள்.

“அவங்க நம்மள அடிச்சுப் போட்டுட்டு பொருளைக் கொண்டு போயிட்டாங்கன்னா..” என்று திடீரென்று சந்தேகம் எழுப்புகிறார் காளையன். “நீ நெஜம்மாவே புத்திசாலிதாம்ப்பா” என்று சிலாகிக்கும் கொடுக்காப்புளி “என் கிட்ட கொடு. நான் பைய ஒளிச்சு வெச்சிட்டு வந்துடறேன்” என்று சிட்டாக மறைகிறான். “எங்கடா வைக்கப் போற?” என்று காளையன் கேட்க “சொல்ல முடியாது. நீ ஓட்ட வாய்” என்று கொடுக்காப்புளியின் குரல் காற்றில் மறைகிறது. “வெஷம்.. வெஷம்” என்று வாய் நிறைய முத்தத்துடன் காளையன் பெருமிதப்படும் காட்சியில் வெளிப்படும் குரு சோமசுந்தரத்தின் அசாதாரணமான முகபாவத்தை நடிப்பின் இலக்கணம் எனலாம்.

விதம் விதமான முகபாவங்கள்

அடுத்து வரும் காட்சிகள் இன்னமும் ரகளையானவை. பையனை இன்னமும் காணோமே என்கிற குழப்பத்துடன் அமர்ந்திருக்கும் காளையனின் முகம் சட்டென்று மலர்கிறது. தூரத்தில் ஐஸ் வண்டியில் இருந்து ஒன்றை வாங்கி சப்பிக் கொண்டிருக்கிறான் கொடுக்காப்புளி. ‘எனக்கும் ஒன்று’ என்று குழந்தையின் உற்சாகத்துடன் கேட்கிறார் காளையன். இன்னொன்றை அவன் வாங்க காளையனின் உற்சாகம் அதிகமாகிறது. ஆனால் அந்த இன்னொரு ஐஸையும் வாயில் வைத்து அவன் உறிஞ்ச, சட்டென்று காளையனின் முகம் ஏமாற்றத்திற்கு செல்கிறது. எப்படி உண்மைக்குப் பக்கத்தில் நடிப்பது என்பதற்கான பாடங்கள் இவை.

தூரத்தில் ஒரு சிவப்பு மாருதி வேன் வர, துண்டை எடுத்து அதை நோக்கி உற்சாகத்துடன் ஆட்டுகிறார் காளையன். ஆனால் பிறகுதான் புரிகிறது, தன்னை முன்பு துரத்திய அதே ஆட்கள் என்பது. சட்டென்று பையைத் தூக்கிக் கொண்டு காளையன் ஓட, துரத்திச் செல்லும் வாகனம் அவரை அப்படியே தூக்கி உள்ளே இழுத்துக் கொள்கிறது. ‘அப்பா. அப்பா’ என்று கத்தியபடி பின்னால் ஓடுகிறான் கொடுக்காப்புளி. அவன் தவற விட்ட குச்சி ஐஸ் சாலையில் கிடக்கிறது.

தனது ஆட்கள் காளையனை இழுத்து வருவதைப் பார்க்கும் சிங்கபெருமாள் “இவனா?” என்று முனகி விட்டு ‘உலகம் ரொம்ப சின்னது” என்று ஆங்கிலத்தில் தனது அடியாளிடம் முனகுகிறார். “சரக்கு எங்க இருக்கு?” என்று கேட்டு சிங்கபெருமாளின் ஆட்கள் காளையனை அடி வெளுத்து வாங்குகிறார்கள். “எனக்குத் தெரியாது சாமி.. என் பையன்தான் எங்கயோ ஒளிச்சு வெச்சிருக்கான். அவன் இப்ப எங்க இருக்கான்னு தெரியலையே” என்று பரிதாபமாக சொல்லும் காளையனுக்கு மேலும் அடிகள் விழுகின்றன. ‘அவனை விடுங்க’ என்கிறார் சிங்கபெருமாள். தள்ளாடியபடி எழும் காளையன் “காலைல என் சேவலை கொன்னீங்க.. அதை மனசுல வெச்சுக்கலை.. ஒரு ஜமீன்னு கூட பார்க்காம இப்ப என்னை அடிச்சீங்க. அதையும் மனசுல வெச்சுக்கலை.. இத்தோட முடிச்சுக்கலாம் என்ன..” என்று சிங்கபெருமாளிடம் கையை நீட்ட “முடிச்சுக்கலாம்தான்.. ஆனா நீ சரக்கு எங்க இருக்குன்னு சொல்ல மாட்டேன்றியே” என்று முனகும் சிங்கபெருமாள், காளையனின் விரல்களைப் பிடித்து அழுத்த வலியால் வாய் விட்டு அலறுகிறார் காளையன்.

கிடைத்திருக்க வேண்டிய தேசிய விருது

‘வெள்ளைக்காரன் மூக்குப்பொடியை’ சற்று எடுத்து முன்பே ஒளித்து வைத்திருக்கிறார் காளையன். அதை இப்போது சற்று எடுத்து மூக்கில் உறிஞ்சும் காளையன், சன்னதம் வந்தது போல் தலையை ஆட்டிக் கொண்டு கோணலான உடலுடன் தள்ளாடிய படியே எழுந்து ‘இப்ப அடிங்கடா பார்க்கலாம். என் மவன் உங்களை அழிச்சுடுவான்டா” என்று சொல்லியபடியே மயங்கிச் சரிகிறார். “என்ன கருமம்டா இது” என்று அலுத்துக் கொள்ளும் சிங்கபெருமாள் “நம்ம சரக்காடா அது.. ஊரானுக்கு உல்லாசத்தைப் பாரு” என்று கசப்பாக புன்னகைக்கிறார்.

சீட்டில் இருக்கும் இன்னொரு எண்ணை தொடர்பு கொள்வதின் மூலம் பசுபதியிடம் பேசும் கொடுக்காப்புளி, அந்த உதவியின் மூலம் தன் அப்பாவைக் காப்பாற்றுகிறான். “உங்க அப்பான்னா.. உனக்கு ரொம்ப பிடிக்குமா” என்று பசுபதி கேட்க “அப்படியில்ல. ஆனா அவரு என் அப்பா” என்று கொடுக்காப்புளி சொல்லும் காட்சி சுவாரசியமானது.

இந்தப் படம் முழுக்க வெளிப்படும் காளையனின் நடிப்பு, உடல்மொழி, வசன உச்சரிப்பு, மாறும் முகபாவங்கள் என்று அனைத்துமே நடிக்க விரும்பும் இளையவர்களுக்கான பாடம் எனலாம். எடிட்டிங், சிறந்த இயக்குநர் ஆகிய இரண்டு பிரிவுகளில் ‘ஆரண்ய காண்டம்’ படத்திற்கு தேசிய விருதுகள் கிடைத்தன. சிறந்த துணை நடிகர் பிரிவில் குருசோமசுந்தரத்திற்கும் விருது கிடைத்திருந்தால் அது முழு நியாயமாக இருந்திருக்கும். அப்படியொரு மகத்தான நடிப்பை தந்திருந்தார்.

கலைந்து கிடக்கும் நரைத்த தலைமுடி, நீண்ட கிருதா, கசங்கிப் போன சந்தனக்கலர் ஜிப்பா, அதன் மீது உறைந்திருக்கும் சேவல் ரத்தம், ஜிப்பாவில் மாட்டியிருக்கும் பதக்கங்கள், தோளில் சார்த்தியிருக்கும் அழுக்குத் துண்டு என்று பரிதாபமே உருவாக இருக்கும் காளையன், பெருமிதம், கழிவிரக்கம், எள்ளல், கிண்டல், கோபம் என்று சகலவிதமான ரசங்களையும் வெளிப்படுத்தி இந்தப் பாத்திரத்தை மறக்க முடியாததாக ஆக்கியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com