மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் (79) | நக்கலான நடிப்பைத் தந்த 'கிள்ளிவளவன்' என்ற பார்த்திபன்!
(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)
“அந்த பொம்பளையை தூக்கி வண்டில ஏத்து. அந்த ஆம்பளை மேல வண்டியை ஏத்துடா”
‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தில், பார்த்திபன் பேசும் இந்த நக்கலான வசனத்திற்கு சிரிப்பலையால் அரங்கம் அதிர்ந்ததற்கு நான் சாட்சி. பார்த்திபனின் பலங்களுள் இதுவும் ஒன்று. முற்றிலும் கேடுகெட்ட எதிர்மறையான பாத்திரத்தில் நடித்தால் கூட எப்படியோ ரசிகர்களைக் கவர்ந்து விடுவார். அவரது பிரத்யேகமான நக்கல், நையாண்டியும் டயலாக் டெலிவரியும் அத்தகைய சிறப்பினைக் கொண்டது.
முதல் திரைப்படத்திலேயே அசத்திய ‘சீதாராமன்’
‘புதிய பாதை’ திரைப்படம் வெளியான சமயம். பார்த்திபன் என்கிற இயக்குநர், நடிகர் யார் என்றே தெரியாத நிலையில் அந்தப் படத்தை வெளியான முதல் நாள் அன்று பார்க்கச் சென்றிருந்தேன். (அதே நாளில் வெளியான கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்பதுதான் காரணம்).
பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்கிற ஒரு ரவுடி காரெக்டரில் பார்த்திபன் அட்டகாசம் செய்து கொண்டிருந்தார். பெண் பாத்திரங்களை சகட்டுமேனிக்கு ஏக வசனத்தில் மலினமாக பேசிக் கொண்டிருந்தார். இதே பாத்திரத்தை பொன்னம்பலம், மன்சூர் அலிகான் போன்ற நடிகர்கள் நடித்திருந்தால் ஒருவேளை பார்வையாளர்களின் வெறுப்பை எளிதில் சம்பாதித்திருப்பார்கள்.
ஆனால், பார்த்திபனின் நையாண்டித்தனமான வசனங்களும் நக்கலும் குறும்பும் அந்தப் பாத்திரத்தை ரசிக்க வைத்தன. திரையரங்கில் இருந்த பெண்கள் கூட மிகவும் ரசித்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ரவுடியாக அட்டகாசம் செய்கிறவன், ஒரு கட்டத்தில் தன் மனைவியை ஆராதிப்பவனாக மாறுகிறான். பெண்களை மதிக்கிறவனாக ஆகிறான். திரைக்கதையின் இந்தச் சூட்சுமம்தான் ‘சீதாராமனை’ வலுவுள்ள பாத்திரமாக ஆக்கிற்று. படத்திற்கு வெற்றியையும் தேடித்தந்தது. திரைக்கு உள்ளேயும் சரி, திரைக்கு வெளியேயும் சரி தனது குறும்புத்தனமான வசனங்களால் நிறைய ரசிகர்களைப் பெற்றிருக்கும் பார்த்திபன், புதுமை என்கிற பெயரில் அதுவே ஓவர் டோஸ் ஆகி விடும் போது எரிச்சலையும் சம்பாதித்திருக்கிறார்.
இவற்றைத் தாண்டி, ஹீரோ, வில்லன், குணச்சித்திரம், காமெடியன் என்று எந்தவொரு பாத்திரத்திலும் பொருந்தக்கூடிய நடிகர் பார்த்திபன் என்று சொல்லலாம்.
பார்த்திபனின் சொந்தச் சரக்கு
‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தில் ‘கிள்ளிவளவன்’ என்கிற ரவுடி கம் அரசியல்வாதி வேடத்தில் தனது நக்கலான நடிப்பைத் தந்திருந்தார் பார்த்திபன். இவர் வரும் காட்சிகள் குறைவு என்றாலும் படத்தின் வெற்றிக்கு இவரது நக்கலான நடிப்பும் ஒரு முக்கிய பங்காக இருந்தது. குறிப்பாக படத்தின் இறுதிப் பகுதியில் பார்ததிபனின் பிரத்யேக முத்திரைகள் சிறப்பாக பதிந்திருந்தன. ‘சிறந்த துணை நடிகருக்கான’ விருதுகளின் பட்டியலில் பார்த்திபனின் பெயரும் இடம்பிடிப்பதற்கு இந்த நையாண்டித்தனமான நடிப்பு காரணமாக இருந்தது.
‘நானும் ரவுடிதான்’ படத்திற்காக வில்லன் பாத்திரத்தில் நடிக்க பார்த்திபன் ஒப்புக் கொள்வாரா என்கிற தயக்கம் தயாரிப்பாளர்களின் தரப்பில் ஆரம்பத்தில் இருந்ததாம். இயக்குநர் விக்னேஷ் சிவன் பார்த்திபனிடம் இந்த ஸ்கிரிப்ட்டை விவரித்த போது உடனே ஒப்புக் கொண்டதோடு கதை, வசனத்தில் தனது பங்களிப்பையும் இணைத்திருக்கிறார். நடிகர் என்பதைத் தாண்டி, இயக்குநராகவும் பார்த்திபன் இருப்பதால் இவற்றைத் தவிர்க்க முடியாது.
கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட வசனத்தில் இருக்கும் ரைமிங்கான குறும்பு கூட பார்த்திபனின் சொந்தச் சரக்காக இருக்கலாம். அவரது பிரத்யேகமான வாசனையை அந்த வசனத்தில் நுகர முடிகிறது. இப்படியாக ‘நானும் ரவுடிதான்’ படத்தில் பார்த்திபனின் பிரத்யேக குறும்புகள், கேடு கெட்ட வில்லன் பாத்திரத்தையும் மீறி ஆங்காங்கே பளிச்சிட்டு ரசிக்க வைக்கின்றன.
ஹீரோ மட்டும்தான் பழிவாங்க வேண்டுமா?
நானும் ரவுடிதான் திரைப்படத்தின் ஆதார அம்சமே சுவாரசியமானது. தனது தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை தேடிச் சென்று பழிவாங்குவது எப்போதுமே ஹீரோக்களின் வேலைதான். அவனுடைய சாகசங்களுக்கு நடுவே இளைப்பாறுவதற்காக டூயட் பாடுவது மட்டுமே நாயகியின் வேலையாக இருந்தது.
ஆனால் ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தில் இந்த அம்சம் முற்றிலும் தலைகீழாக மாறியிருந்தது. நோ்மையான காவல்துறை அதிகாரியாக இருந்த தனது அப்பாவை கொன்ற வில்லனை பழிவாங்க முடிவு செய்வாள், நாயகியான காதம்பரி. இளம்பெண் என்பதால் இந்தப் பழிவாங்கலை தனியாகச் செய்ய முடியாது. எனவே ஒரு பெரிய ‘ரவுடி’யை வைத்து இந்த வேலையைச் செய்ய முயற்சிப்பாள்.
ஆனால் சூழல் அவளைக் கொண்டு சேர்ப்பது ஒரு ரவுடியிடம் அல்ல. ‘ரவுடி’ மாதிரியாக பாவனை செய்கிற ஒரு டம்மி ஆசாமியிடம். உள்ளுக்குள் கோழையாகவும் ஆனால் வெளியில் தன்னை ‘டானாக’ காட்டிக் கொண்டு சீன் போடுகிற பாண்டி என்கிற இளைஞன் இந்தப் பழிவாங்கலுக்கு துணை நிற்க முன்வருகிறான். காதம்பரி மீது அவனுக்கு உண்டான காதல் காரணமாக.
இவர்கள் கொல்ல விரும்புவது கிள்ளிவளவன் என்கிற ரவுடி மற்றும் அரசியல்வாதியை. பாண்டி பின்னால் இருந்து பிடித்துக் கொள்ள, காதம்பரி கிள்ளிவளவனின் இதயத்தில் கத்தியை இறக்கி தன் பழிவாங்கலை தீர்த்துக் கொள்வாள். இதுதான் காதம்பரியின் பிளான். அவளுடைய ஒரே லட்சியம். பாண்டியின் மீதுள்ள காதலையும் தாண்டி இந்தப் பழிவாங்கல் உணர்வுதான் காதம்பரியின் மனம் முழுக்க நிரம்பியிருக்கிறது.
ஒரு பிளாஷ்பேக் - ஒரு ரிவென்ஜ்
காதம்பரியின் இளம் வயதில் நடக்கிற சம்பவம் இது. நேர்மையான இன்ஸ்பெக்டராக இருக்கிற காதம்பரியின் தந்தைக்கும் ரவுடியான கிள்ளிவளவனுக்கும் பகைமையின் தீப்பொறி ஆரம்பிக்கிறது.
போலீஸ் ஸ்டேஷனில் நக்கலாக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடக்கிற கிள்ளிவளவனை, இன்ஸ்பெக்டர் அடித்து ‘இது போலீஸ் அடி.. இப்ப பல்லு போச்சுல்ல” என்று சொல்ல “போனது பல்லு இல்ல. மென்னுக்கிட்டிருந்த சிக்லெட்” என்று நக்கலாக சொல்லிக் கடக்கிற ஆரம்ப காட்சியிலேயே பார்த்திபனின் அட்டகாசம் ஆரம்பித்து விடுகிறது.
மகள் காதம்பரியிடம் ஒளிந்து விளையாடுகிற இன்ஸ்பெக்டரை, அதே போல் பின்னால் ஒளிந்து வந்து பிடித்து கன்னத்தில் அடித்து ‘இது பொறுக்கி அடி. உண்மையிலேயே பல்லு போச்சு பாரு.. மண்ணுல புதைச்சு வை. முளைக்கும். மிச்சமிருக்கிற பல்லையாவது காப்பாத்திக்க” என்று நக்கலான சிரிப்புடன் விலகிச் செல்கிறான் கிள்ளிவளவன். பகைமையின் அடுத்தக் கட்டம் ஆரம்பிக்கிறது.
மகளின் முன்னால் அவமானப்படுத்தப்பட்ட கோபத்தில் துப்பாக்கியைக் கொண்டு போய் கிள்ளிவளவனை சுட முயற்சிக்கிறார் இன்ஸ்பெக்டர். ஆனால் இதில் தப்பிக்கும் கிள்ளிவளவன் “போலீஸ்காரனுங்க பாம்பு மாதிரி. கரம் வைச்சா உட மாட்டாங்க. நாம முந்திக்கணும்” என்று இன்ஸ்பெக்டரின் வீட்டிற்கு வெடிகுண்டை அன்புப் பரிசாக அனுப்பி வைக்கிறான். இதில் காதம்பரியின் தாய் செத்துப் போக, கேட்கும் திறனை இழக்கிறாள் காதம்பரி. கிள்ளிவளவனுக்குப் பயந்து மகளுடன் பாண்டிச்சோியை விட்டு சென்னைக்கு சென்று விடுகிறார் இன்ஸ்பெக்டர். இதுதான் பிளாஷ்பேக்.
காதலுக்கு முன்பு ‘போட்டுத் தள்ளுவது’தான் முக்கியம்
நீண்ட வருடங்கள் கழித்து பாண்டிச்சோிக்கு திரும்புகிறார் இன்ஸ்பெக்டர். சாராய வியாபாரம் மூலம் ‘பெரிய மனிதனாக’ ஆகியிருக்கும் கிள்ளிவளவன் தனது ‘பேபி’ காதலியுடன் கேக் வெட்டி கொண்டாடிக் கொண்டிருக்கிறான். இதை காதம்பரி கோபத்துடன் பார்க்கிறாள். தனது தாயின் மரணத்திற்கு காரணமான அந்தப் பொறுக்கியை எதையுமே செய்ய முடியவில்லையே என்கிற ஆதங்கத்தை தந்தையிடம் கொட்டுகிறாள். பழைய பகைமையின் தீ மீண்டும் பற்றிக் கொள்ள பழிவாங்குவதற்காக செல்லும் இன்ஸ்பெக்டரை குத்திக் கொல்கிறான் கிள்ளிவளவன்.
முதலில் அம்மா, பிறகு அப்பா என்று தனது பெற்றோரையும் காதுகளையும் இழந்து நிற்கும் காதம்பரியின் ஒரே லட்சியம் கிள்ளிவளவனை ‘போட்டுத் தள்ளுவதான்’. பிறகுதான் காதல் எல்லாம்.
ஆனால் கிள்ளிவளவனோ இப்போது தொட முடியாத உயரத்தில் பல நூறு அடிகள் கொண்ட கட்அவுட்டாக வளர்ந்து நிற்கிறான். சினிமாவின் சூப்பர் ஹீரோ லுக்கில் கிள்ளிவளவனும் லேடி ஜேம்ஸ்பாண்ட் மாதிரி அவனுடைய காதலி பேபியும் இருக்கிற பேனரின் பின்னணியில் கிள்ளிவளவனின் பிறந்த நாள் கொண்டாட்டம். அந்த ஏரியாவின் தோ்தலில் பத்து முறை தொடர்ந்து தோற்றுப் போன கிள்ளிவளவன், இந்த முறை தனது ‘பேபி’யை தோ்தலில் நிற்க வைக்க முடிவு செய்கிறான். (அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!)
‘உங்கள் மனைவி தோ்தலில் நின்றால் என்ன செய்வீர்களோ, அப்படியே என்னையும உங்கள் மனைவியாக நினைத்துக் கொண்டு குத்துங்கள் ஓட்டு’ என்று தத்துப்பித்தென்று தோ்தல் பிரச்சார வாசகங்களை பேசிப் பழகும் பேபியைப் பார்த்து பூரித்துப் போய் விடும் கிள்ளிவளவன், ‘இந்த தோ்தல்ல நீதான் நிக்கற. இப்ப உக்கார்ற..” என்று நாற்காலியில் அமர வைத்து விட்டு “This is called babysitting” என்று சொல்கிற குறும்பு பார்த்திபனுக்கே உரித்தானது.
பார்த்திபனின் நக்கலான நடிப்பு
தனது பேபிக்காக தலைமையிடம் தோ்தல் சீட்டுக்கு கெஞ்சுகிற காட்சியும், அதே சீட்டிற்காக மல்லுக்கட்டி மோதுகிற மன்சூர் அலிகானின் சட்டையைப் பிடிக்கிற காட்சியும் சுவாரசியமானவை. இவர்களின் குடுமிப்பிடிச் சண்டையை தாங்க முடியாத தலைவர், “ரெண்டு பேர்ல யார் உசுரோட இருக்கீங்களோ.. அவங்க எலெக்ஷன்ல நில்லுங்க. இப்ப போங்க” என்று ஒரு எரிச்சலான மனநிலையில் சொல்லி விட, பார்த்திபனும் மன்சூர் அலிகானும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி புன்னகைத்துக் கொள்வதும் சுவாரசியமான காட்சி.
ஆட்களுடன் தன்னைக் கொல்ல வரும் மன்சூரை சாமர்த்தியமாக லாக் செய்து விட்டு “மன்சூரு .. நீ வேணா.. அப்போதிருந்தே வில்லனா இருக்கலாம். இப்ப நான்தான் இங்க வில்லன்” என்று பார்த்திபன் சொல்லும் வசனமானது கதைக்கு வெளியே நின்று ரசிக்க வேண்டிய அம்சம்.
ஒருபக்கம் மன்சூர் அலிகானும் அவரது ஆட்கள். இன்னொரு பக்கம் பாண்டியின் சொதப்பலான டீம் ஆகிய இரண்டு அணிகளும் கிள்ளிவளவனைக் கொல்ல முயற்சிப்பதில் பல காமெடியான களேபரங்கள் நிகழ்கின்றன. ராகுல் தாத்தாவின் அலப்பறைகள் வேறு.
‘நான் உங்களைப் போடணும்’ - வில்லங்கமான நகைச்சுவை
ஒரு கட்டத்தில் முடிவு செய்யும் காதம்பரி, ‘இனியும் பாண்டியை நம்ப முடியாது” என்று தீர்மானித்து கிள்ளிவளவனை தனியாகச் சந்திக்கச் செல்கிறாள். அவனை நேரில் பார்த்து பேசி… பேசிக் கொண்டிருக்கும் போதே பையில் இருக்கும் கத்தியை எடுத்து அவனுடைய நெஞ்சில் இறக்குவதுதான் அவளுடைய பாமரத்தனமான பிளான்.
“உங்களைப் பார்க்க ஒரு பொண்ணு வந்திருக்கு சார். என்னை என்ன வேணா பண்ணிக்கங்கன்னு சொல்லுது” என்று கிள்ளிவளவனின் அடியாள் வந்து சொல்ல “அப்படியா.. ஃபுல் செல்ஃபி எடுத்து அனுப்பு” என்கிறான் கிள்ளிவளவன்.
புகைப்படம் வந்ததும் ‘செல்போன்ல பார்க்கறப்பவே மனது டான்ஸ் ஆடுதே!” என்று உள்ளே வரச் சொல்கிறான். வந்திருப்பது அயிட்டம் கேர்ள் என்பதாக இவனுக்குப் புரிய, உள்ளே வருகிற காதம்பரியோ, தயங்கித் தயங்கி “எனக்கு உங்களைப் போடணும்.. சார்.. சின்ன வயசுல இருந்தே இதுதான் என் ஆசை. என்னோட அப்பாவோட ஆசையும் இதுதான்” என்கிறாள்.
இங்கே ‘போடுவது’ என்பது இரட்டை அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. ‘அவனைப் போட்டுத் தள்ளிடுவேன்’ என்பது ஒருவனை கொலை செய்து விடுவேன் என்கிற பொருளாக ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் அதுவே ‘அவளைப் போடணும்’ என்றால் அவளுடன் பாலுறவு கொள்ள விரும்புகிறேன் என்பதாக நடைமுறையில் இப்போது பொருள் மாறி விட்டது.
ஆகவே காதம்பரி சொல்லும் ‘போடணும்’ என்பதற்கும் கிள்ளிவளவன் அதைப் புரிந்து கொள்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இப்படியொரு வில்லங்கமான நகைச்சுவை.
தயங்கிப் பேசி வெட்கப்படும் ரவுடி
இத்தனை அழகான இளம்பெண் தன்னுடன் உறவு கொள்ள விரும்புகிறாளே, அதிலும் சிறுவயதிலிருந்து விரும்புகிறாளேமே என்று தவறாகப் புரிந்து கொள்ளும் கிள்ளிவளவன், “ஏன்.. எப்படி.. எதுக்கு..?” என்று வெட்கத்துடன் தடுமாறி கேட்குமிடத்தில் பார்த்திபனின் நடிப்பு ரசிக்கத்தகுந்த வகையில் இருக்கிறது. “ச்சே.. இத்தனை நாளா நம்ம பர்சனாலிட்டியோட பவர் தெரியாம.. பேபி. பேபின்னு ஒரு தகர டப்பாவை கட்டிக்கிட்டு அழுதோமே?’ என்று மைண்ட் வாய்ஸில் சத்தமாக பேசிக் கொள்வதும் சுவாரசியமான காட்சி.
சில நிமிடங்கள் கழித்து காதம்பரி கத்தியை எடுத்து வீசும் போது “ஓ.. இதை்ததான் நீ போடணும்ன்னு சொன்னியா.. அதானே பார்த்தேன்.. நம்ம பர்சனாலிட்டிக்கு இப்படியொரு பொண்ணு ஆசைப்படுதான்னு.. பேபி… ஸாரிம்மா’ என்று பிளேட்டை தலைகீழாகப் போட்டு பேசுமிடத்தில் கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்துகிறார் பார்த்திபன்.
இப்படியொரு சிக்கலான சூழலில் மன்சூரின் ஆட்கள் தாக்கவருவதாக செய்தி வருகிறது. அதற்கு இடையிலும் காதம்பரியின் மீது கிளுகிளுப்பு குறையாமல் எதிரிகள் குறித்து பார்த்திபன் கோபப்படுவது ரசிக்கத்தக்க முரண்.
கிள்ளிவளவனாக அசத்தியிருக்கும் பார்த்திபன்
வளர்த்துவானேன்.. இதற்குப் பிறகு நிகழும் பல களேபரங்களில் ‘சிறந்த நடிப்பு என்றால் என்ன?’ என்பதற்கு பார்த்திபன் டியூஷன் எடுக்கிறார் என்றே வைத்துக் கொள்ளலாம். “அண்ணே.. ஆட்கள் சுத்துப் போட்டாங்க.. வாங்க போயிடலாம்” என்று பாசத்துடன் பதறி அழைக்கும் அடியாளிடம் “சரிடா. சரிடா.. போலாம். நீ போடா..” என்று அவனையே தலையில் போட்டு அடித்து துரத்துவது நுட்பமான எதிர்வினை. அப்படியொரு களேபரமான சூழல்.
‘நானும் ரவுடிதான்’ படத்தில் பார்த்திபன் வருவது குறைவான காட்சிகள்தான் என்றாலும் கிள்ளிவளவன் என்கிற அந்தப் பாத்திரத்தை வேறு எவராவது ஏற்றிருந்தால் இத்தனை சுவாரசியம் நடந்திருக்குமா என்கிற அளவிற்கு கையாண்டிருந்ததால் அது மறக்க முடியாத கேரக்டராக மாறியிருக்கிறது.