மறக்க முடியாத துணை கதாப்பாத்திரம்
மறக்க முடியாத துணை கதாப்பாத்திரம்முகநூல்

மறக்க முடியாத துணைக் கதாப்பாத்திரம் 78| செல்லக் கோபம், அரங்கம் அதிரும் பேச்சு!

இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘'காலா” திரைப்படத்தில் ஈஸ்வரி ராவ் ஏற்று நடித்திருந்த ‘ செல்வி ’ கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
Published on

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

“இங்கருங்க.. நான் திருநெல்வேலிக்கு போறேன்.. ஏன் உன்னை மட்டும்தான் லவ் பண்ணியிருப்பாங்களா..  தப்படிக்கற பெருமாள்ல.. கிறுக்குபிடிச்ச மேனிக்கு என் பின்னாடி சுத்திட்டே இருந்தான்.. எனக்கும் இஷ்டம்தான்..  ஆனா நீதான் கட்டிக்கிட்டு வந்திட்டியே.. இங்க பாரு.. டிக்கெட் போடு.. நானும் ஒரு எட்டு போயி பார்த்துட்டு பேசிட்டு வந்துடறேன்.. நீ மட்டும் பேசறல்ல.. உனக்கு ஒரு நியாயம்.. எனக்கொரு நியாயமா..?”

காலா திரைப்படத்தில், செல்வி பாத்திரம் இந்த வசனத்தைப் பேசுகிற போது உத்தரவாதமாக அனைத்து இடத்திலும் அரங்கம் அதிர்ந்திருக்கும். 

தன்னுடைய பழைய காதலியை பல வருடங்கள் கழித்து திரும்பும் கணவனிடம், பொசசிவ்னஸ் காரணமாக செல்லக் கோபத்துடன் மனைவி பேசும் வசனம் இது. கோபமாக இருக்கிற மனைவியை சமாதானப்படுத்தி விட்டு இறுதியில் காலா கேட்பார். “நீ அந்த பெருமாளை நெஜம்மாவே லவ் பண்ணியா?” பொசசிவ்னஸ் இடம் மாறுகிற விதத்தை ரசிக்கத்தக்க நகைச்சுவையுடன் சுவாரசியமான காட்சியாக உருவாக்கியிருப்பார் இயக்குநர் ரஞ்சித். 

மறக்க முடியாத துணை கதாப்பாத்திரம்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 77| இப்பத்தான் இதையே கண்டுபிடிக்கறீங்களா? - ரமணா ’யூகி சேது’

காலா திரைப்படத்தில் ‘செல்வி’யின் பாத்திரம் அருமையானது. கணவனின் மீது தீராத காதல், பிரியம், அவன் சொல்லும் ஒற்றை வாக்கியமான ‘ஐ லவ் யூ’க்காக காலம் முழுவதும் காத்திருக்கும் அன்பு, பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் இடையில் அன்புப் பாலமாக நிற்கும் அழகு, என்ன நடந்தாலும் கணவனை விட்டுக் கொடுக்காத பாசம், அனைத்தையும் விட கணவனின் பழைய காதலி குறித்து வெளிப்படுத்தும் பொசசிவ்னஸ்.. என்று இந்தப் பாத்திரத்தை சுவாரசியமாக கையாண்டிருப்பார் ஈஸ்வரி ராவ். 

ஈஸ்வரி ராவ் - சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து..

‘வீ்ட்டில் தீபாவளி’ என்கிற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமான ஈஸ்வரி ராவிற்கு ஆரம்பத்தில் சுமாரான வெற்றிகளை அடைந்தாலும், தமிழ்த் திரைப்படமான ‘ராமன் அப்துல்லா’ அவருக்கு கவனிக்கத் தகுந்த அடையாளத்தை தேடித் தந்தது. அடர்நிறப் பெண்களை நாயகியாக்கும் பிரத்யேக ரசனை கொண்ட பாலுமகேந்திராவின் காமிரா, ஈஸ்வரி ராவையும் பேரழகியாக காட்டியது. ஹீரோயின் காலம் ஓய்ந்து குணச்சித்திர நடிகையாக இரண்டாவது இன்னிங்க்ஸில் ஈஸ்வரி ராவ் நுழையும் போது அவருக்கு ஒரு பெரிய பிரேக்காக அமைந்தது காலா திரைப்படம். 

காலா திரைப்படத்தில் செல்வியின் அறிமுகமே ரகளையான காட்சிதான். ஊர்ப் பஞ்சாயத்தை தீர்த்து விட்டு வாசலில் அமர்ந்திருக்கும் கணவனை செல்வி திட்டித் தீர்ப்பதோடு காட்சி துவங்குகிறது. “தாமிரபரணி தண்ணில வளந்துதுல்ல.. அதான். சின்ன வயசுலதான் சண்டை போட்டுதுன்னு பார்த்தா. காலம் போற வயசுல பேரன், பேத்திகளோட விளையாடிட்டு இருக்காம. அத விட்டுட்டு..  பாம்பே .. பாம்பே மாப்பிள்ளைன்னு கட்டி வெச்சிட்டு… இப்ப நான்தானே கெடந்து லோல் படறேன்?”...

மறக்க முடியாத துணை கதாப்பாத்திரம்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்: சமூக அக்கறையும் அரசியல் அறிவும் நிறைந்த ‘மதி’யாக போஸ் வெங்கட்!

இதுவொரு லாங் டேக். கணவனை செல்லமாகத் திட்டித் தீர்த்து விட்டு வம்பிழுக்கும் மருமகள்களை பதிலுக்கு கலாய்த்து விட்டு தனது மகன்களையும் கண்டிப்பும் சுவாரசியமுமாக எதிர்கொண்டு பணத்தை எண்ணிக் கொண்டிருக்கும் மகனை சீண்டி விட்டு.. வாசலில் அமர்ந்திருக்கும் கணவனிடம் “த்தே. கிழக்கே பார்த்து உக்காரு.. திருஷ்டி சுத்தணும்.. இன்னிக்கு ஊர் ஃபுல்லா உன் மேலதான் கண்ணு” என்று திருநவேலி வட்டார வழக்கில் மூச்சு விடாமல் பேசும் செல்வியின் ஃபர்பாமன்ஸ் அட்டகாசமாக இருக்கும். கணவனை திட்டுவதில் ஆரம்பித்து திருஷ்டி கழிப்பதில் முடியும் சுவாரசியமான காட்சி இது. 

பொசசிவ்னஸை வெளிப்படுத்தும் சுவாரசியம்

ஈஸ்வரி ராவின் தாய்மொழி தெலுங்கு என்பதால், தமிழ்த் திரைப்படங்களில் அவருக்கு டப்பிங் வாய்ஸ் தரப்படுவதே வழக்கம். காலா படத்தின் செல்வி பாத்திரத்திற்கு டப்பிங் பேச வந்தவர் விஜி சந்திரசேகர். (சரிதாவின் தங்கை). இந்தக் காட்சியில் ஈஸ்வரி ராவின் நடிப்பைப் பார்த்து வியந்த விஜி, “இத்தனை அருமையா பேசறாங்க.. இவங்களே டப்பிங் பேசட்டும்” என்று ஈஸ்வரி ராவை உற்சாகப்படுத்தி பேச வைத்தார். தனக்கு கிடைத்த வாய்ப்பை பின்னால் தள்ளி விட்டு இன்னொருவரை ஆதரிக்கும் இந்த உயர்ந்த மனோபாவம் பாராட்டத்தக்கது. தெலுங்கு வாசனையுடன் கூடிய கொச்சையாக இருந்தாலும் ஈஸ்வரி ராவின் சொந்தக் குரல் இந்தப் பாத்திரத்திற்கு பிரத்யேகமான நிறத்தைத் தந்தது. 

இன்னொரு காட்சி. செல்வியின் கணவரான கரிகாலனின் (காலா) பழைய காதலியான ஜரீனா, நீண்ட வருடங்கள் கழித்து தாராவிக்கு வருவார். மின்தடங்கல் ஏற்பட்டிருக்கும் இருளான வீட்டிற்குள் மனைவியை விளையாட்டாக பயமுறுத்துவதற்காக நுழையும் காலா, ஜரீனாவை அங்கு எதிர்பார்க்காமல் திகைத்து நிற்பான். “கரிகாலன்” என்று ஜரீனா அழைக்க, செல்வி சட்டென்று தலையை உயர்த்தி ஆச்சரியமாக பார்ப்பார்.. 

“அப்படிப் போடு.. உம்ம பேர் சொல்லி அழைக்கற தைரியம் ஜரீனாவிற்கு மட்டும்தானே இருக்கு.. எங்க அக்கா செல்வி கூட உம்ம ‘மாமா’ன்னுதானே கூப்பிடும்” என்று ஏற்றி விட “வாலியப்பா..” என்று கண்களால் முறைப்பார் செல்வி. ஜரீனாவிடம் பேச முடியாமல் காலா திணற சூழலைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு தனிமையை ஏற்படுத்தி தருவார்.

“ஐ நோ இங்கிலீஷ்.. டேங்க்ஸ்”

“காஃபியா.. டீயா?” என்று விருந்தினரை உபசரிக்கும் நோக்கத்துடன் செல்வி கேட்க “காஃபி.. காஃபி..” என்று அவசரம் அவசரமாக காலா சொல்ல, “பார்ரா.. மச்சான்..  இன்னமும் பழசையெல்லாம் மறக்கலை” என்று கிண்டலடிப்பார் வாலியப்பன்.  செல்வி தரும் காஃபியை அருந்தும் ஜரீனா, ‘காஃபி நன்றாக இருந்தது’ என்பதை ஆங்கிலத்தில் சொல்லி விட்டு பிறகு “ஸாரி..” என்று தமிழில் சொல்ல “நோ.. நோ.. ஐ நோ இங்லீஷ்.. தேங்க்ஸ்” என்று செல்வி சொல்லுமிடத்தில் ஈஸ்வரி ராவின் வெள்ளந்தித்தனம் கலந்த பெருமையான நடிப்பு அருமை. 

மறக்க முடியாத துணை கதாப்பாத்திரம்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்: குறும்பும் சேட்டையுமாக ‘வேட்டையன்’ ‘பாட்டரி’ பகத் பாசில்!

ஜரீனாவை சந்திக்கச் செல்லும் காலா, பழைய நினைவுகளை மீட்டெடுத்தாலும் மனைவியின் முகமே மனதில் நிறைந்திருக்க, அவசரம் அவசரமாக வீடு திரும்புவான். செல்வி கட்டிலில் கோபத்துடன் படுத்திருக்க, “இன்னமும் தூங்கலையா நீ?” என்று காலா சூழலை இலகுவாக்கும் நோக்கில் சமாளிக்க முயல அப்போதுதான் இந்தக் கட்டுரையின் ஆரம்ப பத்தியில் உள்ள வசனமானது செல்வியால் சொல்லப்படும். 

ஆண்களின் ‘ஆட்டோகிராஃப்’ காதல்களைப் பற்றியே நிறைய பேசிய தமிழ் சினிமாவின் பெண்களின் பழைய காதல் ஏக்கங்களைப் பற்றி பெரிதாக பேசாதது ஒரு கலாசார பாசாங்கு. திருமணத்திற்குப் பிறகும் கூட பழைய காதலின் ஏக்கத்தில் ஆண் இருப்பது இயல்பாக பார்க்கப்படும் சூழலில் மனைவி மட்டும் அத்தனையையும் காட்டிக் கொள்ளாமல் உள்ளே பூட்டிக் கொண்டு கற்புடன் பாவனை செய்வதையே சமூகம் எதிர்பார்க்கிறது. 

இப்படியொரு சூழலில் ‘டிக்கெட் போடு. பெருமாளை பார்த்துட்டு வரேன்” என்று செல்வி சொல்வது ஒரு சுவாரசியமான டிராமா. பொசசிவ்னஸ் தாங்காமல் செய்யும் குறும்பு. 

பாசமும் கலாய்ப்புமான தாம்பத்தியம்

கடைசி மகனான லெனினிக்கும் காலாவிற்கும் இடையே நிகழும் காரசாரமான உரையாடலின் நடுவில் நின்று தத்தளித்தாலும் அந்தக் காட்சியின் இறுதியை சுவாரசியமாக்குவது செல்வியின் நகைச்சுவை குறும்புதான். “போ.. போ.. ன்னு சொன்னா.. அவன் எங்க போவான்?” என்று கணவரிடம் கோபமாக சொல்லி விட்டு, குரலில் குழைவுடன் “நல்ல இடமா போய் தங்குடா தங்கம். நேரா நேரத்துக்கு சாப்பிடு” என்றவுடன் சுற்றியுள்ளவர்கள் சிரி்த்து விடுவார்கள். 

அமைச்சர் ‘ஹரி தாதா’ காலாவின் வீட்டிற்கு வருகை தரும் காட்சி. “பார்க்க.. வெள்ளையும் சொள்ளையுமா நல்லாத்தானே இருக்காரு?” என்று மருமகள்கள் வியக்க “என்ன வெள்ளையும் சொள்ளையும்..நம்ம வீட்டு தண்ணிய குடிக்க மாட்டேன்ட்றாரு” என்று அதிலுள்ள அரசியலை உடனே உணர்ந்து விடும் அளவிற்கு செல்வி புத்திசாலியாகவும் இருக்கிறார். 

மறக்க முடியாத துணை கதாப்பாத்திரம்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 75| அழுத்தமான முத்திரை படைத்த ’கீதா பிரபாகர் ஐபிஎஸ்’

காவல் நிலையத்தில் காலா தாக்கப்பட்டு வீடு திரும்பும் காட்சி. ‘வெறி பிடிச்ச பயலா இருக்கானே.. என்ன தைரியம் இருந்தா உன் மேலயே கை வெச்சிருப்பான்.. எனக்கு வார்ற கோபத்துக்கு அவனை வெட்டி வீசிட்டு ஜெயிலுக்குப் போயிடணும்” என்று செல்வி ஆத்திரப்பட “தே.. சும்மா இரு. உன் மாமன் மேல ஒருத்தன் கை வெச்சிட முடியுமா?” என்று வெட்டி வீறாப்பாக காலா சொல்ல “அதானே பார்த்தேன்.. ஆனா.. இங்க திரும்பு. முகத்துல ஏன் வீங்கியிருக்கு. நீயே உன்னைக் குத்திக்கிட்டியா?” என்று செல்வி கலாய்க்கும் காட்சி சுவாரசியமானது.

நடுத்தர வயது காதலின் அழகு

தன் கையில் பச்சை குத்தப்பட்ட பெயரை காலா மறைக்க, “ரொம்ப ஓவராத்தான் போவுது.. அங்க வாராளாம். நிக்கறாளாம்.. என்னைப் பார்த்தவுடனே துடைக்கறாளாம்.. கண்ணீரை.. எங்க போய் முடியப் போவுதுன்னு தெரியல. நானும் பாக்கேன்.. “ என்று செல்வி புலம்ப “தே.. சும்மா இரு” என்று அதட்டும் காலா, பிறகு ஆவலுடன் “அவ அங்க வந்திருந்தாளா?” என்று கேட்க “அட..” என்று வியப்புடன் பார்க்கும் செல்வி “கண்ணு விரியறத பாரேன்.

நான் இல்லேன்னா. அவளைத்தானே கட்டியிருப்ப நீ… பரவாயில்ல சொல்ல.. எதையும் தாங்கும் இதயம் தான் இது” என்று செல்லமான கோபத்துடன் சொல்ல “ஐ லவ் யூடி” என்று காலா சொல்ல, புளியம்பழத்தை சுவைத்த மாதிரி, கண்களை மூடி காதைப் பொத்திக் கொள்ளும் செல்வி “காது ஜிவ்வுன்னு அடைச்சு நேரா நெஞ்சுக்குள்ள போச்சு.. உன் ஐ லவ்யூ” என்று மகிழ்ச்சியுடன் சொல்வார். அவர் பேசும் கடைசி வசனம் அதுவாகத்தான் இருக்கும். 

மறக்க முடியாத துணை கதாப்பாத்திரம்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் (76): சகித்துக் கொண்டு வாழும் ‘தாயின்’ பாத்திரம்’

நடுத்தர வயதைத் தாண்டிய காதலுக்கு என்று பிரத்யேகமான அழகுண்டு. அந்தக் காதலை செல்லக் கோபம், தீராத பிரியம், அவசியமான பொசசிவ்னஸ் போன்ற கலவையான குணாதிசயங்களால் இன்னமும் அழகாக்கியிருக்கிறது ‘செல்வி’ பாத்திரம். இதைச் சிறப்பாக கையாண்ட ஈஸ்வரி ராவ், மறக்கமுடியாத பாத்திரமாக இதை மாற்றியிருக்கிறார் எனலாம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com