'ஒரு தமிழ் கிளாசிக்'| லோகேஷ் கனகராஜின் ‘DC' படம்.. புகழ்ந்து தள்ளிய அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு!
லோகேஷ் கனகராஜ் இயக்குநராக கடினமான கட்டத்தை சந்தித்த பின்னர், அருண் மாதேஸ்வரன் இயக்கிய ‘DC’ படத்தில் ஹீரோவாக கம்பேக் கொடுத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைத்த இந்த ‘ஏ’ சான்றிதழ் படம் விறுவிறுப்பான திரைக்கதை, அட்டகாசமான பின்னணி இசை காரணமாக ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மகேஷ் பாபு, அல்லு அர்ஜூன் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் படத்தை பாராட்டி தள்ளியுள்ளனர்.
மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், முதல் படத்திலேயே தன்னுடைய கதைசொல்லல், திரை உருவாக்கம் மூலம் கவனம் ஈர்த்தார். அதைத்தொடர்ந்து அவருடைய இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் படமாக மாறியது. பாடல்கள், ரொமான்ஸ், ஏன் ஹீரோயின் கூட இல்லாமல் உருவாகியிருந்த அப்படம் அனைத்து ஜார்னர் ரசிகர்களையும் ஈர்த்தது. அதைத்தொடர்ந்து விஜயின் மாஸ்டர் படத்தில் அவர் உருவாக்கிய JD கதாபாத்திரம், வில்லனாக விஜயசேதுபதி என படம் பட்டையை கிளப்பியது. இந்த வெற்றிகளை எல்லாம் மிஞ்சும் வகையில் தன்னுடைய ஆசானான கமல்ஹாசன் கூட்டணியில் அவர் எடுத்த விக்ரம் திரைப்படம், கமல்ஹாசன் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வசூல்செய்த படமாக உருவானது.
அதற்குபிறகு அவருடைய இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளிவந்த லியோ படத்திற்கு வந்த கலவையான விமர்சனங்கள், மற்றும் கூலி படத்திற்கு வந்த அதிகப்படியான நெகட்டிவ் விமர்சனங்கள் லோகேஷ் கனகராஜை ஒரு கடினமான காலகட்டத்திற்கு தள்ளியது. விமர்சனங்களில் இருந்து தள்ளியிருந்த அவர், சைலண்டாக அவர் ஹீரோவாக நடிக்கும் `டிசி' படத்துக்கு நகர்ந்துவிட்டார்.
தொடர்ந்து அல்லு அர்ஜுன்- லோகேஷ் கனகராஜ் இணையும் AA23 படத்திற்கான மெகா கூட்டணி அறிவிப்பு வெளிவந்தபோதும், லோகேஷுக்கு எதிராக எதிர்மறையான விமர்சனங்களே வைக்கப்பட்டன. இப்படி வெற்றியிலிருந்து சறுக்கும்போது எதிர்கொண்ட மோசமான விசயங்களுக்கு பதிலடி கொடுக்கும்வகையில் 'DC' படம் மூலம் ஒரு தரமான கம்பேக் கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா, சஞ்சனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'DC'. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி திரையரங்கில் வெளியான இத்திரைப்படம் ‘ஏ’ சான்றிதழ் பெற்றிருந்தாலும் அனைத்து தரப்பு ரசிகர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விறுவிறுப்பான திரைக்கதை, அட்டகாசமான பின்னணி இசை என படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டிவரும் நிலையில், இந்தியாவின் முன்னணி நடிகர்களான மகேஷ் பாபு மற்றும் அல்லு அர்ஜூன் இருவரும் DC படத்தை பாராட்டி தள்ளியுள்ளனர்.
முதல் பாராட்டை வெளிப்படுத்தியிருந்த மகேஷ் பாபு, “DC, என்னவொரு புதுமையான மற்றும் ஆகச்சிறந்த திரைப்படம். மிகவும் அருமையாக இருந்தது, படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்தேன்! படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக ‘ஒரு தமிழ் கிளாசிக்’ என டிசி படத்திற்கு புகழாரம் சூட்டியுள்ளார் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன். எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அல்லு அர்ஜூன், ‘DC படம் பார்த்தேன். இது ஒரு தமிழ் கிளாசிக். ஒவ்வொரு சினிமா ரசிகரும் இப்படத்தை கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். இதை உணர்ந்துகொள்பவர்களுக்கு இது ஒரு கவிதை. #DC படக்குழுவினர், கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என புகழ்ந்து தள்ளியுள்ளார்.
திரை வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனை கட்டத்தில் இருந்த லோகேஷ் கனகராஜுக்கு 'DC' படத்தின் வெற்றி மிகப்பெரிய கம்பேக்காகவும், உத்வேகமாகவும் மாறியுள்ளது. ஏற்கனவே விமர்சனங்களுக்கு மத்தியில் வெளியாகியிருந்த அல்லு அர்ஜூன் உடனான AA23 படத்தின் அறிவிப்பு வீடியோவும், அதன் பின்னணி இசையும் டிரெண்டிங்கில் இருந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் நடிகராக மட்டுமில்லாமல் விரைவில் ஒரு இயக்குநராகவும் கம்பேக் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் அவருடைய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

