’என்னை கொலை பண்ணிடுங்க..’ கெஞ்சி கேட்ட ஜி.பி.முத்து! தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர்!
இன்ஸ்டாகிராம், யூடியூப் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து, வீட்டின் நுழைவு பகுதியில் கோவில் கட்டும் விவகாரத்தில் ஊர்மக்களுடன் ஏற்பட்ட தகராறால் காவல்துறை விசாரணையில் சிக்கி, மனஅழுத்தத்தில் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வெளியிட்டது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது. தினமும் விசாரணை காரணமாக தானும் மகள்களும் பாதிக்கப்பட்டதாக கூறி, ஜெயராஜ்-பென்னிக்ஸ் போல தன்னையும் கொலை செய்யுமாறு கண்ணீருடன் வேண்டினார்.
இன்ஸ்டாகிராம், Youtube போன்ற சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு பிரபலம் அடைந்தவர் ஜி.பி.முத்து. இந்த பிரபலத்தின் மூலமாக, சினிமாவிலும் அறிமுகமான இவர், 2கே லவ் ஸ்டோரி, ஓ மை கோஸ்ட், பகீரா போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். எப்போதும் கலகலப்பாக பேசி, காமெடியான வீடியோக்களை வெளியிட்டு வரும் ஜி.பி.முத்து, தற்போது கண்கள் கலங்கும்படி, வீடியோ வெளியிட்டு ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளார்.
அதாவது, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பகுதியில் தான், வீடு கட்டி ஜி.பி.முத்து வசித்து வருகிறார். இந்த வீட்டின் நுழைவு வாயில் உள்ள பகுதியில் கோவில் கட்டுவது தொடர்பாக, ஜி.பி.முத்துவுக்கும், ஊர் மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறுப்படுகிறது. இதுதொடர்பாக, ஜி.பி.முத்து மற்றும் மற்றொரு தரப்பு மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தயாரித்து, அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே ஜி.பி.முத்து வெளியிட்டிருந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர்கள், என்ன ஆனது? நலமுடன் தான் உள்ளாரா? அக்கவுண்டை ஹேக் செய்துவிட்டார்களா? என்று பல்வேறு கேள்விகளை, கமெண்ட்ஸ் பக்கத்தில் கேட்டு வந்தனர். இதையடுத்து, இதற்கு விளக்கம் கொடுத்து மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்ட ஜி.பி.முத்து, காவல்துறையினர் தன்னை தினமும் அழைத்து விசாரிப்பதால் தானும், தனது மகள்களும் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சாத்தான்குளத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ்-ஐ காவல்துறையினர் படுகொலை செய்தது போல், என்னையும் கொலை செய்துவிடுங்கள் என்றும், கண்ணீர் மல்க கூறியிருந்தார். எப்போதும் கலகலவென பேசும் ஜி.பி.முத்து, இவ்வாறு கண்ணீருடன் பேசியது, அவரது ரசிகர்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை தந்தது. இதற்கிடையே, இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

