\
Actor Vishal questions CM Vijay over giving film post to Minister Rajmohan
vishal, vijay, rajmohanx page

அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரைப்படத் துறையா? முதல்வரிடம் 3 கோரிக்கை வைத்த விஷால்!

நடிகர் விஷாலின் கருத்துக்கு சக நடிகரான அருண் விஜய் மறைமுகமாகப் பதிலளித்துள்ளார்
Published on

எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்மோகனுக்கு திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவுத் துறையை வழங்கியது குறித்து முதலமைச்சர் விஜயிடம் நடிகர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார். தவிர, திரைப்படம் தொடர்பாக 3 முக்கியக் கோரிக்கைகளையும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக விஜய் பதவியேற்ற நிலையில், அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். எனினும், பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படாமலேயே இருந்து வந்தது. இந்தச் சூழலில், பதவியேற்ற அமைச்சர்களுக்கு நிர்வாகரீதியாக நேற்று துறைகள் ஒதுக்கப்பட்டன. அதன்படி, ஆளும் கட்சியின் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினரான ராஜமோகனுக்கு, பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரம், தொல்லியல், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவுச் சட்டம் உள்ளிட்ட பல துறைகள் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில், திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவுத் துறை அமைச்சராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்டிருப்பது தங்களுக்குக் கவலையளிப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ’தமிழ்த் திரையுலகை மீட்டெடுக்க தற்போது பல சீர்திருத்தங்கள் தேவைப்படும் சூழலில், மிகக் குறைந்த அனுபவமே உள்ள அல்லது அனுபவமே இல்லாத ஒருவரிடம் எப்படி கோரிக்கைகளையும், குறைகளையும் கொண்டுபோய்ச் சேர்க்க முடியும்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். தவிர, ’திரையுலகின் அத்தனைப் பிரச்னைகளையும் விரல் நுனியில் வைத்துள்ள விஜயே, இதற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ள விஷால், ’இது யாரையும் குறைத்து மதிப்பிடுவதற்காக சொல்லவில்லை, இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே’ எனத் தெரிவித்துள்ளார்.

Actor Vishal questions CM Vijay over giving film post to Minister Rajmohan
"Hats off to CM.. ரொம்ப சந்தோஷமா இருக்கு!" முதல்வர் விஜயை பாராட்டிய விஷால் | TASMAC

அதேநேரத்தில், முதல்வர் விஜயிடம் 3 கோரிக்கைகளையும் வைத்துள்ளார். அதன்படி, முதலாவதாக திரைப்பட டிக்கெட் முன்பதிவுத் தளம் ஒன்றை அரசே அமைக்க வேண்டும். இது பார்வையாளர்களின் சுமையைக் குறைத்து, மாநிலத்திற்கு வருவாயை ஈட்டித் தரும். இரண்டாவதாக, ’ஒரே இந்தியா, ஒரே வரி' என்ற கொள்கை இருந்தபோதிலும், தமிழ்நாடு மட்டுமே இரட்டை வரி விதிக்கும் ஒரே மாநிலமாக உள்ளது. ஆகையால், உள்ளாட்சி வரியை நீக்க வழிவகை செய்ய வேண்டும். இறுதியாக, குறைந்த பட்ஜெட் திரைப்படங்களுக்கான மானியங்களை அதிகரிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், விஷாலின் இந்த கருத்துக்கு மறைமுகமாகப் பதிலளித்துள்ள நடிகர் அருண் விஜய், ’தயவுசெய்து முடிவெடுக்கும் விவகாரங்களில் தலையிடாதீர்கள். இத்துறையைச் சார்ந்த ஒருவரே பொறுப்பில் இருப்பதால், அவருக்கு நமது பிரச்னைகள் நிச்சயம் தெரிந்திருக்கும். அவர் நமக்கு உறுதியாக உதவுவார். தயவுசெய்து அவர் எடுக்கும் முடிவுகளுக்கு மதிப்பளியுங்கள்; அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள். நாம் அவசரப்பட்டு எந்தவொரு முடிவிற்கும் வந்துவிட வேண்டாம். அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும் ’ என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Actor Vishal questions CM Vijay over giving film post to Minister Rajmohan
"பிரஷாந்தைப் பார்த்து பொறாமைப்படுவேன்!" - விஷால் | Vishal | Prashanth | Ranjan
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com