தயாரிப்பாளர் Vs தியேட்டர் உரிமையாளர்கள்.. யாருக்கு லாபத்தை கொடுத்தது லியோ? தொடரும் பஞ்சாயத்துக்கள்!

லியோ படத்தின் வசூல் விவகாரத்திலும், அதன் வெற்றி குறித்தும் திருப்பூர் சுப்பிரமணியன் - லலித்குமார் பேச்சுகள் விவாதமாகியுள்ளன. இந்த நேரத்தில் லியோ படம் யாருக்கும் வெற்றியை கொடுத்தது என்ற கேள்விக்கு விடைதேடி பயணிக்கிறது இந்த சிறப்புத் தொகுப்பு.
leo vijay
leo vijayfile image

ரிலீஸ் ஆவதற்கு 10 நாட்களுக்கு முன்பு தொடங்கி, தியேட்டரில் வெளியாகி 10 நாட்களை கடந்த நிலையிலும் பார்க்கும் இடமெங்கும் பேசுபொருளாகவே இருந்து வருகிறது நடிகர் விஜய்யின் ‘லியோ’ திரைப்படம். வரவேற்பு, விமர்சனங்களை தாண்டி, வசூல் சாதனை, தியேட்டர் உரிமையாளர்களுக்கு லாபம் இருக்கா? இல்லையா? போன்ற விஷயங்களும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக திருப்பூர் சுப்பிரமணியன் - லலித்குமார் பேச்சுகள் விவாதமாகியுள்ளன. இந்த நேரத்தில் லியோ படம் யாருக்கும் வெற்றியை கொடுத்தது என்ற கேள்விக்கு விடைதேடி பயணிக்கிறது இந்த சிறப்புத் தொகுப்பு.

leo vijay
என்னடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை! சர்ச்சை போஸ்டர்களும் சங்கடத்தில் மதுரை மக்களும்..!

படத்தின் பட்ஜெட்டும்.. வெளியான வசூல் விவரமும்..

தமிழ் சினிமாவில் நடப்பு ஆண்டில் பெரிய அளவில் ஹைப் ஏற்றப்பட்ட இந்த லியோ படம் சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் பெரிய தொகை நடிகர்களின் சம்பளமாக கொடுக்கப்பட்டாலும், முதல் 10 நிமிட ஹைனா காட்சிகளுக்கான கிராஃபிக்ஸ், நான் ரெடி தான் பாடலுக்கான டான்ஸ் மற்றும் கார் சேசிங் போன்ற காட்சிகளை மெச்சும் படி படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

முதல் நாள் வசூல் 148 கோடி ரூபாய் என்ற பெரிய ஓபனிங் கிடைத்ததைத் தொடர்ந்து, 7 நாள் முடிவில் உலகம் முழுவதும் 461 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படம் ஹிட் ஆ ஃப்ளாப் ஆ என்று கேட்டால் வணீக ரீதியில் தயாரிப்பாளருக்கு லாபமான படம்தான் என்கின்றனர் சினிமாவை அறிந்தவர்கள்.

leo vijay
பக்கா ப்ளான்! ஸ்டோக்ஸை மிரட்டிய ஷமி.. பந்துவீச்சு வரைபடத்தைப் பகிர்ந்த ஐசிசி! மிரண்டுபோன ரசிகர்கள்!

திருப்பூர் சுப்ரமணியன் Vs லலித் குமார் -  பஞ்சாயத்து என்ன?

“லியோ திரைப்படத்தால் திரையரங்க உரிமையாளர்களுக்கு எந்த பிரியோஜனமும் இல்லை” என்று தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்தது, ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியது. வசூல் வேட்டையில் இத்தனை சாதனை செய்துள்ளதே, பின் எப்படி பெரிய லாபம் இல்லை என்ற கேள்வியும் எழத்தான் செய்கின்றன. இதற்கான விடையையும் அடுத்தடுத்த வரிகளில் பார்க்கலாம்.

வேறு வழி இல்லாம லியோ படத்தை இப்போது ஒளிபரப்பி வருகிறோம் என்று திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்தது தொடர்பாக பேசிய தயாரிப்பாளர் லலித் குமார், “கோவை மற்றும் சுற்றுவட்டாரத்தில் லியோ படத்தை விநியோகம் செய்ய சுப்பிரமணியன் கேட்டார். அதனை நான் மறுத்துவிட்டேன். நானே படத்தை விநியோகம் செய்துகொள்கிறேன் என்று கூறிவிட்டேன். இதனை மனதில் வைத்துக்கொண்டு சுப்பிரமணியன் இப்படி பேசலாம்” என்று தெரிவித்துள்ளார். தனிப்பட்ட மனஸ்தாபத்திற்காக இப்படி விமர்சித்து வருவதாகவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இங்கு குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவெனில், லியோ படத்தை தயாரித்து, விநியோகம் செய்தது லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோதான்.

leo vijay
நெருங்கும் தேதி.. சந்தேகத்தில் லியோ வெற்றி விழா.. பின்னணியில் நடப்பது என்ன?

அது என்ன ஷேர்.. லியோ படத்திற்கு எவ்வளவு?

முன்பெல்லாம் ஒரு படம் வெளியாகிறது என்றால், விநியோகஸ்தரிடம் மினிமம் கேரண்டி(MG) என்ற முறையில் ஒரு தொகையை கொடுத்து தியேட்டர் உரிமையாளர்கள் வாங்குவார்கள். குறிப்பிட்ட தொகையை படத்தின் மூலமாக எடுத்துவிட்டால், அதற்கு பிறகு வரும் வருமானத்தில் தியேட்டர் உரிமையாளரும், விநியோகஸ்தரும் பங்குபோட்டுக்கொள்வார்கள். ஆனால், இப்போது இருக்கும் நடைமுறையே வேறு. அதாவது ஒவ்வொரு டிக்கெட்டிலும் இத்தனை சதவீதமான ஷேர் விநியோகஸ்தருக்கு, இத்தனை சதவீதம் தியேட்டர் உரிமையாளருக்கு என்று பிரிக்கப்படுகிறது. இந்த வழக்கம் தங்களுக்கு சாதகமாக இல்லை என்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள். இந்த ஷேர் விவகாரம், எம்ஜிஆர் - சிவாஜி காலத்தில் 60 - 40 ஆக இருந்தது, ரஜினி - கமல் காலத்தில் 65 - 35, விஜய் - அஜித் காலத்தில் 70 - 75 ஆக உயர்ந்துள்ளது என்கின்றார் திருப்பூர் சுப்பிரமணியன்.

கொரோனா பெருந்தொற்றின்போது தியேட்டர் உரிமையாளர்களுக்கு சாதகமாக, முதன்முதலாக தியேட்டருக்கு வந்தது மாஸ்டர் படம் தான். 50 சதவீத இருக்கைக்கே அனுமதி கொடுக்கப்பட்டதால், முதன்முறையாக 75 முதல் 80 சதவீதமான ஷேரை விநியோகஸ்தருக்கு கொடுத்தனர். அதையடுத்து எந்த படத்திற்கும் இவ்வளவு ஷேர் கொடுக்கவில்லை. லியோ படத்திற்குத்தான் மீண்டும் இந்த ஷேரை கொடுத்தோம் என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியன். அதன்படி, மல்டிபிளக்ஸ் போன்ற ஒன்றுக்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களை கொண்ட தியேட்டர்களுக்கு ஒரு ஷேர், ஒரே ஸ்கிரீனை கொண்ட தியேட்டர்களுக்கு ஒருவகையான ஷேர், non ac தியேட்டர்களுக்கு ஒருவகையான ஷேர் என்று கொடுக்கப்பட்டுள்ளது.

leo vijay
”லியோவில் இரண்டாம் பாதி குறித்த விமர்சனத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்” - லோகேஷ் ஓபன் டாக்!

லாபம்.. தியேட்டருக்கா? தயாரிப்பாளருக்கா?

இப்போது இருக்கும் நடைமுறைப்படி, முதல் வாரம் அல்லது முதல் இரண்டு வாரங்களுக்கு விநியோகஸ்தர், அதாவது தயாரிப்பாளர் தரப்புக்கே அதிக அளவான ஷேர் கொடுக்கப்படுகிறது. அதற்கு அடுத்தடுத்த வாரங்களில் அந்த ஷேர் தியேட்டர் உரிமையாளர்களுக்கு சாதகமாக ஏற்றம் காணும். இதனால், படத்தின் ஓபனிங்கைத் தாண்டி, எத்தனை நாட்களுக்கு தொடர்ந்து திரையிடப்படுகிறது என்பதை வைத்தே, தியேட்டர் உரிமையாளர்களுக்கு லாபத்தின் அளவு கூடும் அல்லது குறையும். இந்த ஷேரைத்தாண்டி, எங்களுக்கான முக்கிய வருமானமே பார்க்கிங் மற்றும் ஸ்னாக்ஸ் ஸ்டாலில் இருந்துதான் என்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள்.

எடுத்துக்காட்டுக்கு சொல்லவேண்டுமானால் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படம் 4 வாரத்திற்கு குறையாமல் தியேட்டர்களில் திரையிடப்பட்டது. படத்தின் வசூல் சுமார் 600 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் நல்ல லாபத்தை கொடுத்ததாக உரிமையாளர்களே கூறுகின்றனர். ஒரு படத்தின் வெற்றி என்பதே, விமர்சனங்களை கடந்து தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தியேட்டர் ஓனர்களுக்கு கிடைக்கும் லாபம் நஷ்டத்தை பொறுத்ததுதான். அதன்படி, 2 வாரங்களை கடந்துள்ள லியோ படம், இதுவரை நல்ல வருமானத்தை கொடுத்த நிலையில், அடுத்து வரும் 2 வாரங்கள் முக்கியமானவை.

900+ தியேட்டர்களில் ரிலீஸ் ஏன்?

பொதுவாக பெரிய படங்கள் வெளியாகும்போது, அதிகப்படியான தியேட்டர்களில் அந்த படம் திரையிடப்படும். தற்போது தனியாக வந்து களமிறங்கியுள்ள லியோவுக்கு சுமார் 900+ தியேட்டர்களில் ஸ்கிரீன் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எடுத்துக்காட்டுக்கு தமிழ்நாட்டில் தியேட்டரில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 80 லட்சம் பேர் என்று வைத்துக்கொள்வோம். அப்படி இருக்க, ஒரு படம் 600 தியேட்டர்களில் வெளியாவதற்கும், அதே படம் 900 தியேட்டர்களில் ஒளிபரப்பாவதற்கும் இடையேயான வித்தியாசம் பெரிய அளவில் இருக்கும். காரணம், அனைத்து தியேட்டர்களிலும் ஒரே படம் திரையிடப்படுவதால், நல்ல ஓபனிங் கிடைத்து 4 வாரங்களுக்கு ஓடவேண்டிய படம் 2 வாரங்களிலேயே ரசிகர்களிடையே சென்று சேர்ந்துவிடும்.

இதனால், 2 வார வசூலில் வரும் ஷேர் தியேட்டர் உரிமையாளர்களை தாண்டி, விநியோகஸ்தர் அதாவது தயாரிப்பாளர் தரப்புக்கு போகும் என்கின்றனர் துறைசார்ந்த வல்லுநர்கள். அப்படிப்பார்த்தால், கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள லியோ, ஜெயிலரை முந்தும் என்று பேசப்பட்டாலும், எத்தனை வாரங்கள் தியேட்டரில் ஓடுகிறது என்பதை வைத்தே அதன் உரிமையாளர்களுக்கு லாபத்தை தரும். இத்தனையையும் தாண்டி, தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு, அதிக தொகை கொடுத்து ஓடிடி நிறுவனத்தால் வாங்கப்பட்ட படமாகவும் லியோ மாறியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இந்த சாதனையை ஒருவேளை எதிர்வரும் இந்தியன் -2 படம் முறியடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லியோவுக்கு ரசிகர்களின் ரியாக்‌ஷன் என்ன?

லியோ படம் LCU-ல் தான் வருகிறதா என்று எதிர்பார்த்து சீட்டின் நுனியில் உட்கார்ந்து பார்த்த ரசிகர்களை, சின்ன சின்ன சீன்களை மட்டுமே LCU கனெக்ட்டுக்காக வைத்த படக்குழுவின் செயல், சிலருக்கு ஏமாற்றத்தைத் தந்தது. 100 சதவீதம் இது என்னுடைய படம் என்று லோகேஷ் சொல்லியிருந்த நிலையில், 100 சதவீதம் இது விஜய்க்கான படம்தான் என்று பேசப்படுகிறது. கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்கள் அளவுக்கு லியோ இல்லை. ஆனால், விஜய்யின் நடிப்பு மற்ற படங்களை தாண்டி இதில் அவரை மிளிரச்செய்கிறது என்றும் சிலாக்கின்றனர்.

ஆக மொத்தம், அதிகம் எதிர்பார்த்து சென்றது ஒரு ஏமாற்றத்தை கொடுத்தாலும், அவ்வளவு மோசமான படமில்லை. ஒற்றை ஆளாக படத்தை தூக்கி சுமந்துள்ளார் விஜய் என்ற கருத்தும் பரவலாக பேசப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆடியோ லான்ச் குட்டி கதையை மிஸ் பண்ணிவிட்டோமே என்று ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்களுக்கு வரும் 1ம் தேதி அன்று வெற்றிவிழாவில் வந்து விஜய் ஸ்டோரி சொல்லப்போகிறார் என்ற செய்தியும் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. அடுத்த குட்டி ஸ்டோரி என்னவாக இருக்கும்?

எழுத்து: யுவராம் பரமசிவம்

leo vijay
“என்னையே நான் மன்னிக்க முடியாதவனா ஆக்கிவிட்டது...!” - நேற்றைய கருத்துக்கு மன்சூர் அலிகான் வருத்தம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com