"கரெக்ட்டா சம்பளம் வந்திருச்சு" - ’அமரன்’ வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் பேச்சு!
கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி சிவகார்த்திகேயன் நடித்த படம் `அமரன்’. திரையரங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படம், 100 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக, படக்குழுவினர், படத்தின் வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் இப்படம் சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து நேற்று வெற்றி விழாவை நடத்தினார்கள்.
இவ்விழாவில் நடிகை சாய் பல்லவி பேசும் போது “ நான் ராஜ்குமார்கிட்ட தினமும் கமல் சார் பற்றி கேட்பேன், அவர் எதாவது இன்புட் கொடுத்தாரா? என்னுடைய நடிப்பு பற்றி எதாவது சொன்னாரா”னு. அவர் எதுவும் சொல்லல நீங்க நல்லா கதை பண்ணியிருக்கீங்க, ஜஸ்ட் கோ அஹெட்னு சொன்னார்னு தான் சொல்வார். அவருக்கு இருக்கும் அனுபவ அறிவின் படி, அவர் நினைத்தால் உள்ளே நுழைந்திருக்கலாம். ஆனால் ஒரு தயாரிப்பாளராக கமல் சார் இயக்குநரை நம்பினார். நடிகராகவும் அவர் எதை செய்தாலும் நூறு சதவீதம் செய்கிறார். நான் பிறப்பதற்கு முன்பிருந்து இந்த துறையில் இருக்கிறார், ஒவ்வொரு முறையும் தன்னை புதுப்பித்துக் கொள்கிறார்.” என்றார்
சிவகார்த்திகேயன் பற்றி சாய் பல்லவி பேசுகையில், “ராஜ்குமார் சார் ஒரு முறை கூறினார். இந்த ஹீரோ ரோலில் நடிக்க, ஒரு ஃப்ரெஷ்ஷான நடிகர் தான் தேவை என. தைரியமும் நம்பிக்கையும் தேவை. அவருடைய நம்பிக்கை வென்றுள்ளது. அதை விட முக்கியம் ஃபீமேல் லீடுக்கும் சமமான முக்கியத்துவத்தை வழங்கினார். அது மன நெகிழ்வைக் கொடுத்தது. இப்போது பராசக்தி லுக் எல்லாம் பார்த்தோம். அவர் தன்னை புதுப்பித்துக் கொண்டு நடித்திருக்கிறார். இன்று நூறாவது நாளை கொண்டாடுகிறோம், ஆனால் உண்மையில் நூறு நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் ஒரு நாள் கூட என்னை பார்ப்பபவர்கள் என்னிடம் அமரன் பற்றி பேசாமல் கடந்ததே இல்லை. என் பத்து வருட திரை பயணத்தில் இப்படி நடந்ததே இல்லை. எல்லோரும் முழு மனதுடன், நூறு சதவீத உழைப்பை கொடுத்ததே அதற்கான காரணம்.”
இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் பேசும் போது, ”சாய் பல்லவி இதுல ஸ்பேஸ் குடுக்கறதுலாம் இல்ல, நான் ஸ்கோர் பண்றேனா, நீங்க ஸ்கோர் பண்றீங்களானு ஒரு நாளும் பார்த்ததில்ல, நீங்க ஸ்கோர் பண்ணாலுமே, என் ஹீரோயின் ஸ்கோர் பண்றாங்க அப்டினு தான் பார்ப்பேன். நீங்களோ நானோ ஜெயிச்சு எதுவும் பண்ண முடியாது, படம் ஜெயிக்கணும். எனக்கு கிடைச்ச பெஸ்ட் காம்ப்ளிமென்ட், ”உங்களோட பீக் ஹீரோயிசம் என்ன தெரியுமா சிவா?”னு குஷ்பு மேம் சொன்னாங்க, ”நீங்க இல்லாம பத்து நிமிஷம் ஹீரோயின கதைய எடுத்துட்டு போக அலோ பண்ணீங்க”ன்னு சொன்னாங்க. மேடம் அது அலோ பண்றது இல்ல எது என்னோட ஹீரோயின் மேம். நான் இல்லன்னாலும், அவங்க பெர்ஃபாமன்ஸ் பண்ணும் போது நான் அங்க இருக்கறதா தான் உணர்றேன்னு சொன்னேன். நீங்க பல பேட்டிகள்ல உங்களோட சீன்ஸ் எல்லாம் அப்படியே வருமானு டைரக்டர் கிட்ட கேட்டதா சொன்னீங்க, அப்படியே வரும், அதுக்கு ஏற்ற ஹீரோஸ் இங்க இருக்காங்க. கமல் சார் படங்கள் பார்த்து வளர்ந்தவங்க. நீங்க கான்ஃபிடெண்ட்டா இருக்கலாம்.”
அதன் பின் கமல்ஹாசன் பற்றி பேசிய சிவா, ”கமல் சார், எனக்கு ரொம்ப கரெக்ட்டா சம்பளம் வந்திருச்சு சார்... ரொம்ப சீக்கிரமே சம்பளம் வந்திருச்சு சார். இப்படி நடக்குறது அரிதான விஷயம் சார். இந்தக் கதை அன்பு (அன்பு செழியன்) அண்ணனுக்கு எல்லாம் தெரியும். என்னோட படங்களின் ரிலீஸுக்கு முன்னால பாதி நேரம் அன்பு அண்ணன் ஆஃபீஸ்ல தான் இருப்பேன். சம்பளம் குடுக்காம இருக்கறது மட்டும் இல்ல, வாங்குற சம்பளத்த பிடுங்கிட்டு போற குரூப்பும் இருக்கு. உங்களுக்கு தெரியாதது இல்ல சார், நீங்க எல்லாத்தையும் பாத்துட்டு வந்திருப்பீங்க. எனக்கு இது ஆச்சர்யமா இருக்கு சார். எனக்கு படம் ரிலீஸுக்கு ஆறு மாசம் முன்னாலயே சம்பளம் குடுத்து, அதத் தாண்டி, மரியாதையும் ரொம்ப முக்கியமா குடுக்கறதெல்லாம் ரொம்ப அரிதான விஷயம்.
நீங்க எப்படிப்பட்ட நடிகர்னு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை, அது உலகத்துக்கே தெரியும். உங்கள மாதிரி நடிக்க இன்னொருத்தர் பிறந்து வரணும்னு சொல்வார்கள். ஆனால் நான் சொல்வேன், இன்னொருத்தர் பிறந்து வந்தாலும் முடியாது உங்களைப் போல நடிப்பதற்கு, படம் பண்ணுவதற்கு. மேலும் எல்லோரும் சொல்வது போல், `விக்ரம்’, `அமரன்’ முடிந்தது, தக் லைஃபில் ஹாட்ரிக் அடிப்பதை பார்க்க காத்திருக்கிறேன். நீங்க உங்கள உலக நாயகன் என கூப்பிட வேண்டாம் என சொல்லிவிட்டீர்கள். சரி வேறென்ன சொல்லி கூப்பிடலாம் என நினைக்கும் போது மணி சார், விண்வெளி நாயகன் என சொல்லிவிட்டார். ஏன் உலகம் என சுருக்க வேண்டும், விண்வெளி நாயகன் என சொல்லிவிடலாம்.”