என்ன வாசகம் என்றுகூட.. உயிருடன் இருந்தபோதே தனக்கான கல்லறை அமைத்த நடிகர் ராஜேஷ்.. சுவாரஸ்ய பின்னணி!
45 ஆண்டுகளாக சினிமாவில் கோலோச்சி வந்த நடிகர் ராஜேஷ், இன்று தன் மூச்சை நிறுத்திக் கொண்டார். அவருடைய மூச்சு நின்றுபோனாலும், அவர் பேசிய பேச்சும் நடிப்பும் இத்திசையெல்லாம் ரசிக மக்களை திகைப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும். அந்த வகையில், அவர் உயிருடன் இருக்கும்போதே தனக்கான கல்லறையை அமைத்துக் கொண்டார். அதாவது, உயிருடன் இருக்கும்போதே தனக்கான கல்லறையைக் கட்ட யாரும் பெரிதும் விரும்பமாட்டார்கள். ஆனால், ராஜேஷ் இதைத் துணிச்சலாகச் செய்திருந்தார்.
மேலும், ஆன்மிகம், ஜாதகம், ஜோதிடம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய ராஜேஷ், இப்படியான முடிவை எடுத்தது சினிமா உலகில் பேசுபொருளானது. இதுகுறித்து சுவாரஸ்யமான விஷயங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார். அந்த நேர்காணலின்போது கார்ல் மார்க்ஸ் நினைவிடத்திற்குச் சென்று ராஜேஷ் புகைப்படம் எடுத்த காட்சி காட்டப்படுகிறது. அதற்குத்தான் அவர் பதிலளித்திருந்தார்.
அதில் அவர், “நான் 1988இல் லண்டன் சென்றேன். அங்குச் சென்றவுடன் கார்ல் மார்க்ஸ் கல்லறைக்கு முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அதேமாதிரி, அங்கிருந்து வந்தவுடன் அதற்கு அடுத்த வருடமே எனக்குக் கல்லறை கட்டிக் கொண்டேன். எனக்கான கல்லறையை நான் 40 வயதிலேயே கட்டிவிட்டேன்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், “கார்ஸ் மார்க்ஸ் கல்லறையைப் பார்த்துவிட்டு வந்து நான் அதுபோல் கட்டினேன். கார்ல் மார்க்ஸ் அளவுக்கு சிலை இருக்காது. ஓரளவுக்கு இருப்பது போன்று கட்டினேன். முதலில் மார்பு அளவுக்கு கட்டினேன். 25-35 வருடங்களுக்குப் பிறகு அது இடிந்துவிட்டது. பின்பு, அதை கிரானைட்டில் கட்டியுள்ளேன். நான் இதை கி.ஆர்.பெ.விஸ்வநாதனிடமிருந்து கற்றுக்கொண்டேன். அவர்தான் தன்னுடைய கல்லறையைக் கட்டிவிட்டார். அந்தக் கல்லறையைக் கட்டி அதிலிருந்து 27 வருடம் கழித்து அவர் இறந்தார். கல்லறையைக் கட்டி அவர் நீண்டநாட்கள் வாழ்ந்தார். அதனால், ’தனக்கு எவன் கல்லறை கட்டிக் கொள்கிறானோ, அவன் நூறாண்டு வாழ்வான்’ என சீனப் பழமொழி ஒன்று உண்டு.
அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என்னுடைய மகளுக்கோ, மகனுக்கோ என்னுடைய கல்லறை செலவுக்கு, என் கல்லறை எப்படி கட்ட வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என அவர்களுக்கு நான் எப்படிச் சொல்ல முடியும்? அதனால் நான் இப்போதே அதில் வசனத்தை எல்லாம் எழுதிவிட்டேன். அந்த வகையில் நானே அதைக் கட்டிவிட்டு என் கல்லறையைப் பார்க்கிறேன். அந்த மாதிரி ஒரு நடிகருக்கு, எனக்கு ஒரு கல்லறையைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனக்கு மார்க்ஸ் போன்று கல்லறையை என் மகளோ, என் மகனோ கட்டுவார்களா? அவர்களுக்கு நேரமிருக்குமா என எதுவும் தெரியாது. ஆகையால், எனக்கு நானே காட்டிக் கொண்டேன்” என அதில் தெரிவித்துள்ளார்.