”வேறு எந்த இந்திய நடிகராலும் இப்படி நடிக்க முடியாது..” - தனுஷுக்கு சிரஞ்சீவி புகழாரம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்துவரும் தனுஷ், இயக்குநர் சேகர் கமுலா இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘குபேரா’. கதாநாயகனாக தனுஷ், நாயகியாக ராஷ்மிகா, முக்கிய ரோலில் நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பல மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், ஜூன் 20-ம் தேதி வெளியாகி வெற்றிப்படமாக ஓடிவருகிறது. தமிழை விட தெலுங்கு ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடிவருகின்றனர்.
ஒரு பணக்காரன் தன்னுடைய கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காக பிச்சைக்காரர்களின் பெயரில் டெபாசிட் செய்கிறார். அந்த பணத்தால் பிச்சைக்காரன் வாழ்க்கையில் எப்படி ஒரு மாற்றம் ஏற்படுகிறது என்பதாக அமைந்திருக்கும் படத்தின் கதையில், தனுஷ் பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
படம் வெளியாகி பலரும் தனுஷின் நடிப்பை பாராட்டி வரும் வேளையில், படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிரஞ்சீவியும் தனுஷின் நடிப்பை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
இந்தியாவில் இருக்கும் ஒரே நடிகர் தனுஷ்..
குபேரா திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று நடந்தது. இதில் தனுஷ், நாகர்ஜுனா, சேகர் கம்முலா போன்ற திரைக்கலைஞர்கள் கலந்துகொண்ட நிலையில், சிறப்பு விருந்தினராக நடிகர் சிரஞ்சீவியும் விழாவில் பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில் தனுஷ் குறித்து பேசிய நாகர்ஜுனா, “எனக்கு தனுஷ் குறித்து என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ஏற்கனவே நான்கு தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரர், நான் இப்போது எதாவது பேசி அது அவரின் திறமைக்கு மிகவும் குறைவு என்பது போல வந்து விடக்கூடாது” என்று பேசினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் சிரஞ்சீவி, “இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் தனுஷை தவிர வேறுயாராலும் நடிக்க முடியாது. என்னை நடிக்க கேட்டிருந்தால் கண்டிப்பாக முடியாது என்றே கூறியிருப்பேன். இதனை நடிக்க இந்தியாவில் இருக்கும் ஒரே நடிகர் தனுஷ் மட்டும் தான். தனுஷ்.. நிச்சயம் இந்தப்படத்தில் நடித்ததற்காக உங்களுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கும்” என்று புகழ்ந்து தள்ளினார்.