“எல்லோருக்கும் வணக்கம்; எனக்கு ஹிந்தி தெரியாது..” - குபேரா நிகழ்வில் தனுஷின் தெறியான பேச்சு!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்துவரும் தனுஷ், இயக்குநர் சேகர் கமுலா இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘குபேரா’. கதாநாயகனாக தனுஷ், நாயகியாக ராஷ்மிகா, முக்கிய ரோலில் நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பல மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், படத்திற்கான புரொமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு பங்கேற்றுவருகிறது.
இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற குபேரா பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் தனுஷ், படம் சார்ந்த சில சுவாரசியங்களை பகிர்ந்து கொண்டார்.
குப்பைக் கிடங்கில் 6 மணிநேரம் ஷூட்டிங் செய்தோம்..
குபேரா படத்தின் மூன்றாவது தனிப்பாடலான ’பிப்பி பிப்பி டம் டம் டம்’ மும்பையில் நடந்த ஒரு நிகழ்வில் படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. இதில் நடிகர் தனுஷ், ராஷ்மிகா, நாகர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் கலந்து கொண்டனர்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தனுஷ் ‘ஓம் நம சிவாய, எல்லோருக்கும் வணக்கம்’ என தமிழிலேயே தொடங்கி ‘மன்னிக்கனும் எனக்கு ஹிந்தி தெரியாது, இங்கிலீஸ் பேசுவன் அதுவும் அரைகுறையா தான் பேசுவன் பொறுத்துக்கோங்க’ என பேசினார். ஆனால் அவருடைய பேச்சு அனல்பறக்கும் பேச்சாக படபடவென வெடித்து தள்ளியது.
படத்தில் நடிக்கும் கதாபாத்திரம் குறித்து ஒரு ஹிண்ட்டாவது கொடுங்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த தனுஷ், “நான் ஒரு பிச்சைக்காரனாக நடிக்கிறேன். இந்த கதாபாத்திரத்திற்காக நான் நிறைய ஆராய்ச்சியும், அதைசரியாக கொண்டுவர ஹொம்ஒர்க்கும் செய்தேன். வெயிலில் நிறைய கஷ்டப்பட்டேன், ஆனால் நான் சொன்ன இவை அனைத்தும் பொய். நான் எதுவும் இப்படி செய்யவில்லை’ என்று சிரித்தார்.
நான் உண்மையில் எதையும் செய்யவில்லை நேராக படப்பிடிப்பு தளத்திற்குச் சென்று என் இயக்குனர் சொன்னதை அப்படியே செய்தேன். சேகர் சார் மிகவும் புத்திசாலி. அவர் எனக்கு நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தார். பேச்சுவழக்கு உட்பட என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் எனக்கு நேர்த்தியாகச் சொன்னார். அவர் எனக்கு என்னுடைய கதாபாத்திரத்தின் வாழ்க்கையை எளிதாக்கினார்.
குபேரா எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த படம். என்னுடைய ஏழ்மையான கடந்த காலங்களுக்கு மீண்டும் என்னை அழைத்துச்சென்றது. நான் அடிக்கடி இப்படி புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில்லை, ஆனால் குபேரா இப்படி விளம்பரப்படுத்தப்படுவதற்கு தகுதியான திரைப்படம்” என்று பேசினார்.
மேலும் குப்பைக்கிடங்கில் ஷூட்டிங் செய்த அனுபவம் குறித்து பேசிய தனுஷ், “படத்தின் ஷுட்டிங் போது நாங்கள் நிறைய கஷ்டப்பட்டோம் என செய்திகள் வந்தன. ஆனால் அப்படியில்லை ஷூட்டிங்கை நாங்கள் வேடிக்கையாக முடித்தோம். ஒரு குப்பை கிடங்கில் நானும் - ரஷ்மிகாவும் கிட்டத்தட்ட 6 மணிநேரம் நடித்தோம். அவர் நன்றாகவே இருந்தார், அவருக்கு எந்தவிதமான ஸ்மெல்லும் இல்லாமல் நன்றாகவே மணக்கமுடிகிறது என்று கூறினார் (ராஷ்மிகாவை பார்த்து சிரிக்கிறார்). ஆனால் குபேரா உலகத்தின் இன்னொரு பக்கத்தை நெருங்கி பார்க்க உதவியது. என்னுடைய தொடக்கமும் அப்படியான ஒரு இடத்தில் இருந்து ஆரம்பித்ததுதான். மீண்டும் என்னுடைய குழந்தை பருவத்தின் ஏழ்மையான சூழலுக்கு குபேரா அழைத்துச்சென்றது பலவற்றை ஞாபகப்படுத்தியது" என்று பேசினார்.