actor ajith kumar birth day special story
actor ajith kumar birth day special storyPT

`எல்லோரும், எல்லாமும் கைவிடும்போது நீ உன்னை நம்பு’ பத்மபூஷண் நடிகர் அஜித் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

அஜித்தின் சினிமா பயணத்தை அறிந்த அளவுக்கு அவரின் ரேஸ் பயணம் பற்றி பலருக்கும் தெரியாது.
Published on

‘அஜித் என்றால் திரையில் மாஸ்... தரையில் ரேஸ்!’ என்பது அனைவரும் அறிந்ததுதான். அஜித்தின் சினிமா பயணத்தை அறிந்த அளவுக்கு அவரின் ரேஸ் பயணம் பற்றி பலருக்கும் தெரியாது. இன்று 54-வது வயதில் அடியெடுத்து வைக்கும் அஜித், கார் ரேஸராக கடந்து வந்த பாதை என்ன..? என்பதை அவர் பிறந்தநாள் சிறப்பு தொகுப்பாகப் பார்க்கலாம்.

அஜித்தின் `ஆரம்பம்’

சிறு வயதிலிருந்தே அஜித்துக்கு பைக், கார் ரேஸ் என்றால் அவ்வளவு பிரியம்… கனவும் கூட. அதனால்தான் பள்ளிப் படிப்பை பத்தாம் வகுப்பிலேயே கைவிட்ட அஜித்துக்கு, ஆட்டோமொபைல் கற்று சொந்தமாக ஒர்க் ஷாப் அமைக்க வேண்டும் என்பதே பெரும் ஆசையாக இருந்தது. அதற்காக, சென்னையிலுள்ள என்ஃபீல்டு மோட்டார்ஸ் நிறுவனத்தில் அப்ரன்டிசாக சேர்ந்து, 6 மாதங்கள் பயிற்சி பெற்றார். ஆனால், அஜித் ஒரு மெக்கானிக்காக இருப்பதை அவரது குடும்பத்தினரால் ஏற்க முடியவில்லை. பைக் நிறுவன அப்ரன்டிஸ் வேலையை கைவிட்ட அஜித், குடும்பத்துக்காக எக்ஸ்போர்ட் கம்பெனி, டெக்ஸ்டைல் கம்பெனி என பிசினஸில் இறங்கினார். அஜித்துக்கு விருப்பமில்லாத வேலையில் ஜொலிக்க முடியவில்லை. பிசினஸில் நட்டம் ஏற்பட, எதிர்பாராத விதமாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1992இல் வெளியான `பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு திரைப்படம் அஜித்தின் திரை பயணத்தை திறந்து வைத்தது. அடுத்து, 1993ஆம் ஆண்டு வெளியான `அமராவதி’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார் அஜித். ஆனால், மீண்டும் அஜித்துக்கு பைக் ரேஸ் மீது ஆர்வம் ஏற்பட, எதிர்பாராத விபத்தில் சிக்கினார் அஜித். ஒரு விபத்தாக சினிமாவுக்கு நுழைந்தவரை, ஒரு விபத்து முடக்கிப் போட்டது. பைக் ரேஸ் விபத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவால், தேடி வந்த பல பட வாய்ப்புகளைத் தவறவிட்டார் அஜித்.

அஜித்தின் `அமர்க்களம்’:

ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் பயணிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட அஜித், ரேஸ் கனவுக்கு பிரேக் கொடுத்தார். சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தியவர், அடுத்தடுத்து ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி என ஹிட் படங்கள் கொடுத்து அமர்க்களப்படுத்தினார். அதிலும், காதல் மன்னன் படத்தில் கரண் நடித்த கார் ரேஸ் போர்ஷனின் முழு ஏற்பாட்டையும் செய்தது இயக்குநர் அல்ல... அஜித்தான்! அதேபோல, வாலி திரைப்பட வெற்றிக்காக இயக்குநர் எஸ்.ஜே சூர்யாவுக்கு பைக், கார் இரண்டையும் கிஃப்டாக கொடுத்தார் அஜித். தனக்கு பிடித்தவர்களுக்குகூட கார், பைக்கையே அன்பளிப்பாக கொடுப்பதில் அலாதி ப்ரியம் அஜித்துக்கு. ஆனால், கெடுவாய்ப்பாக அஜித் நடித்த சில படங்கள் தோல்விப் படங்களாக அமைய, இறங்குமுகத்துக்கு ஆளானார். அஜித்துக்கு பெரிய மோட்டிவேஷன் தேவைப்பட்டது. சினிமாவில் பிரேக் எடுத்தார். 32 வயதில் தன் மனதுக்கு பிடித்த கனவு ரேஸில் மீண்டும் களமிறங்கினார் அஜித். நடிகனான தனக்கு பைக் ரேஸ் பெரும் ரிஸ்க் என்பதை அனுபவத்தால் உணர்ந்துகொண்ட அஜித், இந்த முறை கார் ரேஸை தேர்ந்தெடுத்தார்.

actor ajith kumar birth day special story
”நான் இன்னும் இதயத்தில் ஒரு எளிய நடுத்தர வர்க்க நபர் தான்” - அஜித் குமார் நெகிழ்ச்சி!

அஜித்தின் `துணிவு’

2002ஆம் ஆண்டிலிருந்து 2005ஆம் ஆண்டு வரை கார் பந்தயங்களில் அதிக ஈடுபாடு காட்டினார் அஜித். ஃபார்முலா கார் ரேஸிங் வீரரான அக்பர் இப்ராஹிம், அஜித்துக்கு பயிற்சி கொடுத்தார். 2002 ஆம் ஆண்டு, சென்னையில் நடைபெற்ற `ஃபார்முலா மாருதி இந்தியன் சாம்பியன்ஷிப்’ போட்டியில் கலந்துகொண்டார். மழைக்காலத்தில் நடைபெற்ற கடும் சவாலான இந்தப் பந்தயத்தில் வீரத்துடனும் விவேகத்துடன் கலந்துகொண்ட அஜித் நான்காவது இடத்தைப் பிடித்தார்.

அஜித்தின் `விடா முயற்சி’

2003ஆம் ஆண்டு மலேசியாவில் நடந்த `ஃபார்முலா பிஎம்டபிள்யூ ஏசியா சாம்பியன்ஷிப்’(Formula BMW Asia Championship) போட்டியில் கலந்துகொண்டு 12ஆம் இடத்துக்கு முன்னேறினார். தொடர்ந்து, 2004ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற `பிரிட்டிஷ் ஃபார்முலா 3 நேஷனல் கிளாஸ்’ (British Formula 3 - National Class) ஒற்றை இருக்கை பிரிவில் கலந்துகொண்டு 7ஆவது இடத்தைப் பிடித்தார் அஜித். இந்தியாவின் சிறந்த கார் ரேஸ் ஓட்டுநர் தரவரிசையிலும் அஜித் இடம்பெற்றார். 2010ஆம் ஆண்டு, சென்னையில் நடந்த எம்ஆர்எஃப் ரேஸிங் சீரிஸிலும் (MRF racing series), ஐரோப்பாவில் நடைபெற்ற எஃப்ஐஏ ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் (FIA Formula Two Championship) சீசனில் கலந்துகொண்டார் அஜித்.

ரசிகர்களுக்காக சினி`மாஸ்’... தனக்காக ரேஸ்:

`கார் ரேஸில் கிடைப்பதைப் போன்ற மனநிறைவு வேறு எதிலுமே எனக்கு கிடைத்ததில்லை’ என்று கூறும் அஜித், தனது ரசிகர்களுக்காக கார் ரேஸை விட்டுவிட்டு மீண்டும் திரைப்படம் நடிப்பதில் முழு கவனம் செலுத்தினார். பில்லா, மங்காத்தா, வீரம், விவேகம், வலிமை, துணிவு என தன்னம்பிக்கையோடு அஜித்குமார் அல்டிமெட் காட்டினார். ஐம்பது வயதைக் கடந்தபோது சிறு வயதில் முளைத்து, இளம் வயதில் செழித்து அதே ரேஸிங் ஆசை மீண்டும் அதே துள்ளலுடன் அஜித்துக்கு துளிர்விட்டது. இந்தியா முழுவதும் பைக் டூர் சென்றார். நேபாளம், ரஷ்யா, டென்மார்க், நார்வே, ஜெர்மனி என அவரின் பைக் டூர் பயணம் உலக நாடுகளுக்கும் சென்றது. விளைவாக, பைக் ரைடில் உலக சுற்றுலா செல்வதற்காகவே `வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ்’(Venus Motorcycle Tours) என்ற நிறுவனத்தையே தொடங்கினார் அஜித். இந்த நிறுவனம் அந்தமானில் நடத்திய பிரமாண்டமான `ஹார்ட்லி டேவிட்சன் பைக் ரைடு’ உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றது

actor ajith kumar birth day special story
”ஷாலினி இல்லைனா நான் இல்லை.. அவருக்கு தான் மொத்த கிரெடிட்” – பத்ம பூஷண் அஜித் குமார்

`வரலாறு’ படைத்த அஜித்!

`ஒரே நேரத்தில்தான் இரு படகில் பயணிக்க முடியாது; ஒன் பை ஒன்னாக பயணிக்கலாம்’ என்று நினைத்த அஜித், தன் மனதில் மின்னி மறைந்துகொண்டிருந்த கார் ரேஸ் கனவுக்கு பிரமாண்டமான கம்பேக் கொடுத்தார். தனி ஆளாக இருந்த அஜித், 2024ஆம் ஆண்டு `அஜித் குமார் ரேஸிங்’ அணி என்ற தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கினார். இதையடுத்து, துபாயில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற `24 ஹெச் சீரிஸ்' என்ற 24 மணி நேர தொடர் கார் ரேஸில் நடிகர் அஜித்குமார் தலைமையிலான 'அஜித்குமார் ரேஸிங் அணி' களமிறங்கியது. பங்கேற்ற முதல் போட்டியிலேயே 3ஆவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது அஜித்குமார் ரேஸிங் அணி. 'ஸ்ப்ரிட் ஆஃப் தி ரேஸ்' என்ற விருது வழங்கியும் கௌரவிக்கப்பட்டார் அஜித். அதற்கடுத்து இத்தாலியில் நடைபெற்ற 12 ஹெச் முகெல்லோ சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித் குமார் ரேஸிங் அணி மூன்றாம் பிடித்தது. இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பாக பெல்ஜியத்தில் நடைபெற்ற ஸ்பா - ஃபிரான்கோர்சாம்ஸ் (Circuit of Spa-Francorchamps) கார் ரேஸில் அஜித்குமார் ரேஸிங் அணி இரண்டாம் இடம் பிடித்து தொடர்ந்து மூன்று வெற்றிக் கோப்பைகளை ஹாட்ரிக்காக பெற்றிருக்கிறது. இதன்மூலம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கே உலக அளவில் பெருமையை தேடித்தந்திருக்கிறார் அஜித்! தற்போது பத்ம பூஷண் விருதையும் தட்டிச்சென்றிருக்கிறார்.

எத்தனையோ தோல்விகள், தடைகள், விமர்சனங்கள், இடைவெளிகளை கடந்து, சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கார் ரேஸில் களமிறங்கிய அஜித், தனது 54ஆவது வயதில் பெரும் துள்ளலுடன் சாதனை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.

`எல்லோரும், எல்லாமும் கைவிடும் போது நீ உன்னை நம்பு’ என்று விடாமுயற்சி படத்தில் அஜித் பேசியது வெறும் சினிமா வசனமல்ல... அவரது வாழ்க்கை அனுபவம்!

actor ajith kumar birth day special story
’இனி இதுபோன்று நடக்கக் கூடாது; சாதி, மத பேதமின்றி.. ’ - பஹல்காம் தாக்குதலுக்கு அஜித் கண்டனம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com