ஒரு வணிகனின் கதை 8 | நினைக்காத நேரத்தில் கிடைக்கும் நம்பிக்கை உணர்வும் ஒரு அற்புதம்தானே?

ஒரு வணிகனின் கதை 8-ம் அத்தியாயம், தொழில் ‘நம்பிக்கை’யின் முக்கியத்துவத்தினை எடுத்துரைப்பதாக அமைகிறது.
நம்பிக்கை
நம்பிக்கைமுகநூல்

இத்தொடரின், ஒவ்வொரு அத்தியாயமும் தொடக்கநிலை குறுந்தொழில் முனைவோரிடம் இருக்க வேண்டிய ரிஸோர்ஸஸ், குணங்கள் என்னென்ன, அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய நுட்பங்கள் என்னென்ன, அவற்றின் முக்கியத்துவம் எவ்வளவு என்பதையெல்லாம் அனைவருக்குமான வாசிப்புக்கு ஏற்றவகையில் எழுத்தாளரின் நேரடி அனுபவத்திலிருந்து ஒரு நாவலின் சுவாரசியத்தோடு விவரிக்கப்படுகிறது.

ஒரு வணிகனின் கதை
ஒரு வணிகனின் கதைபுதிய தலைமுறை

உற்பத்தி மற்றும் சேவைக்கும் இவற்றைப் பொருத்திப் பார்க்க ஏதுவாக இருக்கும். தொழில் முனைவோர், ஆர்வம் கொண்டோர் இவற்றை ஒரு செக்லிஸ்ட்டாக போட்டுப் பார்த்துக்கொண்டு, தம்மிடமிருக்கும் நிறை, குறைகளை அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து குறைகளைக் களையும் வழியறிந்துகொண்டு, நிறைகள் தரும் உற்சாகத்தோடு தொழிலில் முனைப்போடு அவர்கள் களமிறங்க வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம்!


தொடரின் முந்தைய அத்தியாயங்களை இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்!

அத்தியாயம் 8 - நம்பிக்கை!

அவர் ஓர் ஆன்லைன் நண்பர். பெயர் வெங்கடேஷ். சுருக்கமாக வெங்கி. இரண்டாவது முறையாக இப்போது அவரைப் பார்க்கிறேன்.

பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆன்லைனில், சோஷியல் மீடியாக்களில் குப்பைகொட்டிக் கொண்டிருப்பதற்கான பலன், இப்படி எப்போதாவது மிக மிக அரிதாகக் காணக்கிடைக்கும் நண்பர்கள் தரும் ஒரு சின்னப் பாராட்டாகக் வெளிப்படும். மெலிதாக உள்ளுக்குள் மகிழ்ந்துகொள்ளலாம். ஆனால், இதற்காகவெல்லாம் ஆன்லைனில் நாம் இயங்க முடியாது. அதற்காக ஆன்லைன் எடுத்துக்கொள்ளும் நமது நேரமென்பது மிக அதிகம்.

எதையாவது வாழ்க்கையில் உருப்படியாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆன்லைனிலிருந்து சற்று விலகியிருப்பதே சிறந்தது. நான் இத்தனைக்காலத்தை ஆன்லைனில் போக்கியதற்கு ஒரு நோக்கம் இருந்தது, ஆனால், அது நிறைவேறவில்லை என்பது வேறு விஷயம்! அடிக்சன் என்பதன் வரையறையெல்லாம் தற்காலத்தில் மாறியிருக்கிறது. ஏதாவது தொடர் பழக்கத்துக்கு ஆளாகும் போதெல்லாம் உள்ளுக்குள் எச்சரிக்கை மணியடித்து அதிலிருந்து விலகும் அனுபவம் எனக்கிருந்தது.

ஆனால், இந்த ஆன்லைன் சோஷியல் மீடியா பழக்கத்துக்கு அடிமையாகி எனக்குள் அடித்த மணியானது அடித்து அடித்து ஓய்ந்துபோய்விட்டது என்றுதான் சொல்லவேண்டும். இந்தத் தொழிலில் இறங்கிய பிறகாவது குறைந்ததா என்றால் இல்லை என்பதுதான் பதில். சில குறிப்பிட்ட தொழில்களில் உங்களுக்கான நேரம் மிக அதிகமாகக் கிடைக்கக்கூடும். அதை நல்ல விஷயங்களுக்காக, தொழில்வளர்ச்சிக்காகப் பயன்படுத்தலாம் எனில், பல்வேறு காரணிகள் உங்களை அதைச் செய்யவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கும். அதைச் செய்ய முடியாத குற்ற உணர்ச்சியில் விழுவீர்கள்.

அந்தக் குற்ற உணர்ச்சியிலிருந்து நம்மைக் காப்பாற்றுவதற்குக்கூட இந்த ஆன்லைன் அடிக்சன் உதவலாம். ஆனால், இந்த அடிக்சனே மீண்டும் குற்ற உணர்ச்சியாக உருவெடுக்கும். எல்லாவற்றையும் பேலன்ஸ் செய்துதான் போய்க்கொண்டிருக்கிறோம் என்று நம்மை நாமே ஏமாற்றும் திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து பயணிக்க முடியும்.

ஒரு படத்தில் ஒரு காமெடி வரும், ‘அவ்வளவு குட்டைனும் சொல்ல முடியாது, அவ்வளவு நெட்டைனும் சொல்லமுடியாது! அவ்வளவு கருப்புனும் சொல்ல முடியாது, அவ்வளவு சிவப்புனும் சொல்லமுடியாது சார்!’ என்று. அது தொழிலுக்கு சாலவும் பொருந்தும்.

நம்பிக்கை
ஒரு வணிகனின் கதை 4 | நெட் பிராஃபிட்ட பாக்கனுமா? சேல் பிராஃபிட்ட பாக்கனுமா?
இங்கே நீங்கள் ஆக புத்திசாலியாகவும் இருக்கக்கூடாது, ஆக முட்டாளாகவும் இருக்கக்கூடாது. அதிக துணிச்சலாகவும் இருக்கக்கூடாது, அதிக பயமும் இருக்கக்கூடாது. பெரிய முரடராகவும் இருக்கக்கூடாது, மிகுந்த மென்மையானவராகவும் இருக்கக்கூடாது. யோசித்துப் பார்த்தால் எல்லா விஷயங்களிலுமே இப்படித்தான். இரணியன் வாங்கி வந்த வரம் போலிருக்க வேண்டும். இரவாகவும், பகலாகவும் கூடாது, உள்ளாகவும், வெளியாகவும் கூடாது, மனிதனாலும், மிருகத்தாலும் கூடாது என்று நீளும் அந்தப் பட்டியல்!

ஆனால், காதைக்கொடுங்கள், அந்த இரணியனை வீழ்த்தவும், அவனது வரத்துக்குட்பட்டு ஒரு நரசிம்மம் வரத்தான் செய்தது. ஆக,

தொழில்காரர்களுக்கு இரணியகசிபுவை விடவும் தேர்ந்ததொரு முன்தயாரிப்பு வேண்டும்!

குறிப்பாக முதலீட்டுக்குத் தேவையான பணத்துக்குக்கூட இந்த ஃபார்முலா பொருந்தும். உங்களிடம் பணமில்லாமலும் இருக்கக்கூடாது, அதிக பணமும் இருக்கக்கூடாது. அதிக பணமிருப்பதால், என்னய்யா சிக்கல் என்று தோன்றுகிறதா? நான் ஒவ்வொரு கட்டத்திலும், சிற்சில லட்சங்களாகவே இதில் போட்டுக் கொண்டிருந்தேன். முதலில், கையிலிருந்த சேமிப்பு. பின்னர் அப்பா, அம்மா, மனைவி, சகோதரன் எனும் மிக நெருங்கிய சொந்தங்களின் பங்களிப்பு, பின்னர் நண்பர்களிடமிருந்து கடன், அதன்பின்பு வங்கிக் கடன்! ஒவ்வொரு கட்டத்திலும், இதற்கு மேல் நம்மாலாகாது, இதற்குள்ளாகவே நடத்தியாக வேண்டும் எனும் நிர்ப்பந்தமிருந்தது எனக்கு. இதில் நிறைய சிக்கல்கள் இருந்தாலும், ஒரு பெரிய நன்மையும் இருந்தது. என்னிடம் டெட்ஸ்டாக் எனப்படும் விற்பனையாகாத, பாதிப்படைந்த, தேங்கிய பொருட்களின் இருப்பு மிக மிகக் குறைவு.

பின்பொருநாள், சிட்டியிலிருக்கும் ஒரு பெரிய கடையோடு ஒப்பிட்டு இதை உணர்ந்துகொண்டேன். அதற்கு எனது இந்தப் பணக்கஷ்டமே ஒரு முக்கியக் காரணம். ஒரு வேளை என்னிடம் தாராளமான முதலீடு இருந்திருந்தால், எனது சந்தையில் விற்பனை ஆக வாய்ப்புக் குறைவாக உள்ள டைல்ஸ்களை நான் ஏராளமாக வாங்கி, டெட்ஸ்டாக் இருப்பை அதிகப்படுத்தியிருக்கக்கூடும்!

அடேங்கப்பா, எவ்வளவு பெரிய விஷயமாக இருக்கிறது என்று தோன்றுகிறதல்லவா? இன்னொரு காதைக் கொடுங்கள், இப்போது நான் சொன்னதையே இதற்கும் பொருத்திப் பாருங்கள். இது அவ்வளவு பெரிய விஷயமும் அல்ல!!

”டீ சாப்பிடுறீங்களா வெங்கி?”

“போன வாட்டி வாங்கித் தந்தீங்களே, அந்த சர்பத் டீதானே? எனக்கு வேண்டாம்ப்பா!”

“யோவ், என்ன நக்கலா? ஒரு மனுசனை விருந்தோம்பல் பண்ணவிடுறீங்களா? எங்கிருந்துதான் வர்றீங்களோய்யா எனக்குன்னு?”

“துபாய்லருந்துதான்!”

சிரித்துவிட்டு, அரட்டையைத் தொடர்ந்தோம். நான் சமீபத்தில் எழுதியிருந்த நாவலை சிலாகித்துப் பாராட்டினார். உள்ளுக்குள் குளிர்ச்சியாக இருந்தது. அதை எப்படியெல்லாம் எழுதினேன் என்று கொஞ்ச நேரம் தற்பெருமை பீற்றிக்கொண்டேன். எவ்வளவு கட்டுப்பாட்டோடு நடந்துகொண்டாலும், சில சமயங்களில் இப்படி ஆகிவிடுகிறது. இப்படிப் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தவர் திடீரென்று ஒன்றைக் கேட்டுவிட்டார்,

“அண்ணே, இத்தாம்பெரிய நாவல் எழுதியிருக்கீங்க, எந்த நேரமும் ஆன்லைன்ல இருக்கீங்க, ஒரு ஓடிடியை விடுறதில்லை, படம், சீரீஸ்னு பார்த்துட்டு விமர்சனம் எழுதுறீங்க! எப்படி நேரம் கிடைக்குது? கடையைக் கவனிக்கிறீங்களா, இல்லையா?”

கிட்டத்தட்ட நேரடித் தாக்குதல்! ஏற்கனவே இருக்கும் குற்ற உணர்ச்சியைக் கிளறிவிடும் செயல்! பழகிய நபர்கள் கேட்டாலாவது ஏதாவது சொல்லி சமாளிக்கலாம்! புதிய நபரிடம் என்னத்தைச் சொல்வது? ஆறு மாதத்துக்கு முன்னால், முதல்முறையாக என்னை வெங்கி காண வந்தபோது, அறிமுகம் செய்துகொண்டார். ஒரு செண்ட் பாட்டிலைப் பரிசாகத் தந்தார். ஒரு பத்து நிமிடம் ஃபார்மலாகப் பேசிவிட்டு சென்றுவிட்டார். இதோ இந்தத் தடவை சாவகாசமாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்.

ஆன்லைன் நண்பர்களிடம் ஒரு ப்ளஸ் என்னெவென்றால், நம்மைப் பற்றிய பர்சனல் விஷயங்கள் தெரியாது எனினும், கிட்டத்தட்ட நமது குணம் மட்டும் துலங்கலாக அவர்களுக்குத் தெரிந்துவிடுகிறது.

அத்தனைக் காலமாக நம்மை வாசித்து வருகிறார்கள் அல்லவா? பேசும் போதும் மிக எளிதாக, ஒரு நீண்டகால நண்பனுடன் பேசுவது போன்ற ஒரு இயல்பு எளிதில் கிடைத்துவிடுகிறது. ஆனால், ஒரு சிக்கல் என்னவென்றால், நமக்குத்தான் அவர்களைப் பற்றி அவ்வளவாகத் தெரிவதில்லை!

“பஞ்சதந்திரம் படம் பார்த்திருக்கீங்களா வெங்கி?”

“பாக்காதவங்க யாராச்சும் இருப்பாங்களா என்ன?”

பஞ்சதந்திரம் திரைப்படம்
பஞ்சதந்திரம் திரைப்படம்

“அதில் டெட்பாடியைத் தொலைத்துவிட்டு எல்லோரும் வீடு திரும்பிய பின்னர், மறுநாள் போனில் பேசிக்கொள்ளும் ஒரு காட்சி வரும். அப்போது ஸ்ரீமன் நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருப்பார். 'என்னடா ரெட்டி, குஜாலா நீச்சல் குலத்தில் ஜலக்கிரீடை பண்ணிகிட்டிருக்கியா' என்று கமல் கேட்பார். அப்போது ஸ்ரீமன் சொல்லும் பதில்தான் நான் உங்களுக்குச் சொல்வது. பயத்துல நடுங்கிட்டு இருக்கேன்யா, அது வெளிய தெரியக்கூடாதுனுதான் தண்ணிக்குள்ள உக்காந்து மேட்ச் பண்ணிகிட்டு இருக்கேன்”

பெரிதாக சிரித்தார். சிரித்தோம்!

“எப்படிண்ணே, இவ்வளவு ஜாலியான ஆளா இருக்கீங்க?”

“அது மட்டும்தானே உங்களுக்குத் தெரியுது!”

நம்பிக்கை
ஒரு வணிகனின் கதை 5 | மறதியான, கவனக்குறைவான, புரிதலற்ற நபரை எப்படி கையாள்வது?

பின்னர் பேச்சு, எனது தொழில் பற்றிப் போனது. நானும் பொதுவாக எதையும் மறைப்பதில்லை. யாராவது எதையாவது கேட்டால் விலாவரியாக புளிபோட்டு விளக்கிவிடுவது வழக்கம். அது பெரும்பாலும் அவர்களுக்கு நம் நிலைமையை எடுத்துச் சொல்வதைவிட, நமக்கே நம் பயணத்தை நன்றாக மனதில் ஒருமுறை ரிவ்யூ செய்துகொள்வதாகத்தான் இருக்கும்!

“இந்தக் கடைக்கு, இந்த மார்க்கெட்ல நல்லாத்தானேண்ணே பர்ஃபார்ம் பண்ணியிருக்கீங்க? பின்ன ஏன் புலம்பிகிட்டிருக்கீங்க?”

நம்பிக்கை
ஒரு வணிகனின் கதை 7 | ‘லோன் வேணுமா? உங்களுக்குதான் இந்த செய்தி!’

“நாலு வருசமாவுது தம்பி. ஓட்டிகிட்டுதானே இருக்கேன். என்னிக்கு நான் போட்ட பணத்தை எடுக்குறது? லாபம் பாக்குறது?”

“சீக்கிரமா எல்லாம் மாறும், பிரேக் கிடைக்கும். தொடர்ந்து பண்ணுங்க!”

“நிச்சயமா!”

”மார்கெட்டிங் ஸ்ட்ராடஜிதான் வீக்கா இருக்கு, அதை இம்ளிமெண்ட் பண்ணினா இன்னும் பெட்டரா இருக்கும்னு சொன்னீங்கள்ல! என்னவெல்லாம் பண்ணினா பெட்டரா இருக்கும்னு நினைக்கிறீங்க?”

“இதுல பெரிய ஸ்ட்ராடஜிலாம் என்ன இருக்கு? எல்லாம் அடிப்படையான விஷயங்கள்தான். நாலு வருசம் கழிச்சி இன்னைக்கும் உள்ளூர்க்காரன் எவனாச்சும் வந்து நம்மூர்ல இப்படி ஒரு டைல்ஸ் கடை இருக்கானு ஆச்சரியப்பட்டு என் வயித்தெரிச்சலைக் கிளம்பிட்டுதான் போறான். உள்ளூர் டிவில சின்னதா ஆட், பேப்பர் இன்செர்ட்ஸ், வால்பெயிண்டிங்ஸ், பீரியாடிகல் போஸ்டர்ஸ் இப்படி மினிமம் விளம்பரம் பண்ணனும். கடைக்குள்ள ஸ்டாக்ஸ் அண்ட் வெரைட்டீஸ் இன்னும் அதிகம் பண்ணனும். போட்டியை சமாளிக்க கொஞ்சமா விலையைக் கம்மி பண்ணனும். சிம்பிள்!”

மேலும் என் தொழிலுக்குரிய சில தனித்துவமான விஷயங்களையும் பட்டியலிட்டேன்.

“அவ்வளவுதானே, பண்ண வேண்டியதுதானே?”

“என்ன நக்கலா? நானே அடுத்த லோடுக்கு பணமில்லாம முக்கிகிட்டு இருக்கேன்! நீங்க வேற!”

“சரிண்ணே, ஒரு மூணு தவணையா பத்து லட்சம் தர்றேன். இதெல்லாம் பண்ணுங்க!”

நம்பிக்கை
ஒரு வணிகனின் கதை 6 | ஊழியர்களிடம் எப்படி நடந்துகொள்வது சரி? கடினமாகவா, மென்மையாகவோ?

கிட்டத்தட்ட அதிர்ச்சியாகி நின்றேன். நமக்குத் தரவேண்டியவர்கள், நான் கேட்டுப் போனவர்கள் எனப் பலரும் கைவிரித்து வந்த நிலையில் இதென்ன கூத்து? இவர் மூஞ்சி நம் மனதில் பதிந்திருக்கிறதா? என்ன பெயர் சொன்னார்? எந்த ஊருனு சொன்னார்?

“என்ன தம்பி சொல்றீங்க?”

“நிஜமாத்தான் சொல்றேன்!”

“பாண்ட் எதுவும் பண்ணிக்குவமா? எப்ப திருப்பித் தர்றதுனு… இண்ட்ரெஸ்ட் எதுனா…”

இழுத்தேன்.

“ஒரு மண்ணும் வேண்டாம். எப்ப முடியுமோ அப்ப அசலைத் தாங்க போதும்!”

அதிசயம் நடக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நானும் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் நம்பியதில்லை! அதுதான் அன்று எனக்கு நடந்தது!

*

தொடர் நன்றாகத்தானே போய்க் கொண்டிருந்தது, திடீரென ஏன் இப்படி ஒரு முற்றிலும் கற்பனையான அத்தியாயம் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? ஏதாவது கனவுகினவு கண்டீரா எழுத்தாளரே? அந்த வெங்கி என்பவர் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் இருக்கிறாரா? அவரது முகவரி கிடைக்குமா? என்றெல்லாம் கேட்கத்தோன்றுகிறதா? பதில் தாருங்கள். அடுத்தொரு அத்தியாயத்தில் சந்திப்போம்.

*

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com