ஒரு வணிகனின் கதை 21: தொழிலில் முடிவெடுத்தல் ஏன் முக்கியம்?

டிஸிஷன் மேக்கிங்! முடிவெடுத்தல்! நம்மை உச்சாணிக்கு தூக்கிச் செல்லப்போவதும் இதுதான். நம்மை அதலபாதாளத்துக்குள் தள்ளிவிடப்போவதும் இதுதான்!
ஒரு வணிகனின் கதை
ஒரு வணிகனின் கதைpt web

முன்குறிப்பு:

இத்தொடரின், ஒவ்வொரு அத்தியாயமும் தொடக்கநிலை குறுந்தொழில் முனைவோரிடம் இருக்க வேண்டிய ரிஸோர்ஸஸ், குணங்கள் என்னென்ன, அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய நுட்பங்கள் என்னென்ன, அவற்றின் முக்கியத்துவம் எவ்வளவு என்பதையெல்லாம் அனைவருக்குமான வாசிப்புக்கு ஏற்றவகையில் எழுத்தாளரின் நேரடி அனுபவத்திலிருந்து ஒரு நாவலின் சுவாரசியத்தோடு விவரிக்கப்படுகிறது.

உற்பத்தி மற்றும் சேவைக்கும் இவற்றைப் பொருத்திப் பார்க்க ஏதுவாக இருக்கும். தொழில் முனைவோர், ஆர்வம் கொண்டோர் இவற்றை ஒரு செக்லிஸ்ட்டாக போட்டுப் பார்த்துக்கொண்டு, தம்மிடமிருக்கும் நிறை, குறைகளை அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து குறைகளைக் களையும் வழியறிந்துகொண்டு, நிறைகள் தரும் உற்சாகத்தோடு தொழிலில் முனைப்போடு அவர்கள் களமிறங்க வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம்!

அத்தியாயம் 21 - முடிவு

“இப்பல்லாம் மதுவெல்லாம் அருந்துவதில்லை நந்து! விட்டுடுங்க” என்றேன். நந்து அதிர்ச்சியாகிப் பார்த்தார்.

“யார் இதைச் சொல்வது? கேகேவா?” சிரித்தேன்.

“என்னாச்சு கேகே?”

“சுகர் வர்றாப்பல இருக்கு நந்து”

“சுகர் வந்துடுச்சா? வரலையா? அதென்ன வர்றாப்பல இருக்கு?”

“வர்றாப்பலன்னா ப்ரீ-டயாபடிக்னு சொல்றானுகள்ல அந்த லெவல்!”

“என்ன ஆவரேஜ்?”

“6.0”

“யோவ், ஏன்யா அநியாயம் பண்றீங்க? அதெல்லாம் சுகரே இல்லீங்க!”

“ஆமா ஒருத்தன் இப்படிச் சொல்லுங்க, இன்னொருத்தன் அப்படிச் சொல்லட்டும். எதுக்கு வம்புன்னுதான் எல்லாத்தையும் நிப்பாட்டிட்டேன். அதாச்சு இரண்டு வருஷம். அதோட டயட், வாக்கிங்னு இப்பல்லாம் ஒழுக்கமாயிட்டேன்.”

“அடப்பாவிகளா, திருந்துறதா இருந்தா சொல்லிட்டுத் திருந்துங்கய்யா!”

“தொழில்னு இவ்வளவு பெரிய கமிட்மெண்டை நமக்கு முன்னாடி வைச்சிக்கிட்டு திருந்தலைன்னா எப்படி?”

“வயசாச்சு, பயம்னு சொல்லுங்கய்யா, சுத்தி வளைக்காதீங்க!”

“அப்படியும் வைச்சுக்கலாம்”

“ஆமாய்யா, நீங்கள்லாம் சட்டுனு திருந்தி நல்லாருங்க, நாங்க மட்டும் இதெல்லாம் பண்ணிகிட்டு சீக்கிரமா மண்டையைப் போட்டுடுறோம்!”

“ஒரு மனுசன் திருந்திடக்கூடாதே உங்களுக்கு!”

ஒரு வணிகனின் கதை
ஒரு வணிகனின் கதை - 11 | தோற்றம் & பேச்சைக் கொண்டு வாடிக்கையாளர்களை கணிப்பது சரியா? அப்படி முடியுமா?

சென்னையிலிருக்கும் போது பழக்கமானவர் நந்து. ஆன்லைன் மூலமாக பழக்கமாகி பின்னர் நல்ல நட்பாக வளர்ந்திருந்தது. அவர் ஒரு முறை நெல்லை வந்திருந்தபோது, அவர் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு அழைத்திருந்தார். இனிய நண்பர், தொழிலதிபர், மிக வசதி படைத்தவர்!

முதல் காரணத்துக்காகவே அவரை நிச்சயம் ஓடிப்போய்ப் பார்க்கலாம், மூன்றாவது காரணமும் சேர்ந்துகொண்டால் தவிர்க்க முடியுமா என்ன? உடனே போயிருந்தேன். அங்குதான் இந்தக்கூத்து!

இரவெல்லாம் நன்றாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தோம். தொழிலைப் பற்றியும் பேச்சு வந்தது. அவர் செய்துகொண்டிருப்பது பெரிய தொழில் மற்றும் அரசு நிறுவனங்களுக்கான தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை நிறுவுதல் மற்றும் பராமரித்தல்.

இங்கே ஒரு ஸ்டார் ஹோட்டலில் ஆர்.ஓ பிளாண்ட் போடுவது சம்பந்தமாக வந்திருந்தார். எனது கடையைப் பற்றி பேச்சு வந்தபோது நன்றாக சென்று கொண்டிருப்பதாகச் சொன்னேன். அப்போது நான் கடை ஆரம்பித்து ஆறு மாதங்கள்தான் ஆயிருந்தன!

ஒரு வணிகனின் கதை
ஒரு வணிகனின் கதை 17 | தொழிலில் அறம் ஏன் முக்கியம்?

“என்னெல்லாம் வைச்சிருக்கீங்க?”

“டைல்ஸ், சேனிடரிவேர்ஸ், அப்புறம் அதோட முக்கியமான துணைப்பொருட்கள். அவ்வளவுதான்”

“நீங்க ஏன் கம்பி, சிமெண்ட் பண்ணக்கூடாது?”

ஆபரேஷன் சிக்கல்கள், குறைவான லாப சதவீதம், மிகக் கடுமையான போட்டி என அந்தப் பொருட்களைப் பற்றிய எனது கணிப்புகளை எல்லாம் எடுத்துச் சொன்னேன்.

“அப்போ, கிரானைட்ஸ்?”

எனது பிசினஸ் கார்டில் கூட செராமிக் டைல்ஸ் அண்ட் கிரானைட்ஸ் என்றுதான் அச்சடித்திருந்தேன்.

“அதுக்கெல்லாம் ரொம்பக் காசு வேணுமேங்க, இதுக்கே நாக்கு தள்ளுது!” என்றேன்.

“நாளைக்கு ஏதாச்சும் முக்கியமான வேலை இருக்கா?”

“ஏன் கேட்குறீங்க?”

“எங்க ஊரு சைட்ல இல்லாத கிரானைட்ஸ் குவாரியா? நமக்குத் தெரிஞ்ச ஆட்களே நிறைய இருக்கு? கிரெடிட்டுக்கு சல்லிசா வாங்கித் தர்றேன். காலையில் என்னோட கூட கார்லயே வந்துடுங்க”

ஆசையாகத்தான் இருந்தது.

“கிரெடிட் பிசினஸே பண்றதில்லைங்க. என்னோட மார்க்கெட்ட கணிக்கவே முடியாது. ஒரு மாசம் தூக்கிவிடும், ஒரு மாசம் வாடகை கூட கொடுக்க வழியில்லாமல் ஆக்கிவிடும். அதை நம்பி வாங்கினா நாறிப்போகும் என் நிலைமை!”

“அட கிரெடிட் இல்லாம தொழில் எவனாச்சும் பண்ண முடியுமாங்க, சுத்த பைத்தியக்காரத்தனமா இருக்கீங்களேங்க. ஏன்யா, எஞ்சினியர்லாம் தொழில் பண்ண வந்துட்டு எங்க உசிரை வாங்குறீங்க?”

சிரித்தார், நானும் சிரித்தேன்.

“சரி, அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். உங்களால முடியாத மாசத்துக்கு நான் சமாளிக்கிறேன். அவ்வளவுதானே! கிளம்புங்க முதல்ல” என்றார். கிளம்பிவிட்டேன்.

ஒரு வணிகனின் கதை
ஒரு வணிகனின் கதை 15 | ரகசியம் | அன்றாடம் ஆரோக்கியத்துக்கான முதலீட்டை செய்வது எப்படித்தெரியுமா?

பிறகு, கிருஷ்ணகிரி சென்று இரண்டு குவாரிகளைப் பார்த்தோம். விலை குறைவாகத்தான் இருந்தது. சமாளித்துவிடலாம் என்றும் தோன்றியது. விரைவில் முடிவு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு மறுநாள் மாலை அங்கிருந்து ரயிலில் திருநெல்வேலிக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். சிந்தனை கிரானைட்டை சுற்றியே வந்துகொண்டிருந்தது.

டிஸிஷன் மேக்கிங்! முடிவெடுத்தல்! நம்மை உச்சாணிக்கு தூக்கிச் செல்லப்போவதும் இதுதான். நம்மை அதலபாதாளத்துக்குள் தள்ளிவிடப்போவதும் இதுதான்!

ஒரு கிராமத்து வாடிக்கையாளர் ஏன் நம்மிடம் கிரானைட்டை வாங்கிட வேண்டும்? ஒருவர் ஒரு வீட்டைக் கட்டி, அந்த வீட்டின் தரையை அழகு படுத்திட கிரானைட் பதிக்க விரும்புகிறார். வீடு கட்டும் பணியின் போது கம்பி, சிமெண்ட், செங்கல் எதுவும் பெரும்பாலும் அவரது தேர்வாக இருக்காது. கிரானைட்டும், டைல்ஸும் மட்டுமே வாடிக்கையாளர் அவரது விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்யக்கூடியவை. அதைக் குடும்பமாக சிட்டிக்குச் சென்று பெரிய ஷோரூம்களில் ஏராளமான வகைகளை, டிசைன்களைப் பார்த்து அதிலொன்றைத் தேர்வு செய்யத்தானே விரும்புவார்கள்? அது நியாயமானதும் கூட அல்லவா?

வருடத்துக்கு ஒருமுறை வரும் நிகழ்வான தீபாவளிக்கு, குடும்பத்தினருக்கு ஆடை எடுப்பதற்குக்கூட உள்ளூர் கடையை விட்டுவிட்டு, திருநெல்வேலி சென்று பெரிய ஏசி ஷோரூம்களில் மணிக்கணக்காக நேரம் செலவிட்டு எடுத்துவருவதுதானே மகிழ்ச்சி, இல்லையா? நாமுமே அதைத்தானே செய்கிறோம்?
ஒரு வணிகனின் கதை
ஒரு வணிகனின் கதை 19 | அனைத்திலும் தொழில் வாய்ப்பைக் கண்டுகொள்ளும் பார்வை!

விரும்பி அணியப்போகிற உடையைத் தேர்வு செய்யப்போகிற நிகழ்வு அது. நீங்களே பாத்துக்குங்க என்று கணவரிடம் விட்டுவிட முடியாது. அது அத்தனை எளிதாக நடந்துவிடமுடியாது.

அதற்காக நாம் மெனக்கெட வேண்டும். விடுப்பு எடுத்துக்கொண்டு, பைக்கிலோ, காரிலோ, பஸ்ஸிலோ குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சிரமப்பட்டுச் செல்லவேண்டும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் நிகழவேண்டும். கூட்டத்தில் படாதபட்டு இரண்டு கடைகளாவது ஏறி இறங்கி ஒன்றைத் தேர்வு செய்தால்தான் அது தீபாவளி பர்ச்சேஸ்!

அது பர்ச்சேஸ் மட்டுமல்ல, குடும்பத்தோடு ஒரு பிக்னிக்! கூடவே ஹோட்டலில் உணவு! வருடம் ஒருமுறை கிடைக்கும் அந்த அனுபவத்தை எப்படி இழக்கமுடியும்? வீட்டு வாசலில் வரும் ஒரு ஜவுளி விற்பனையாளரிடம், அதைவிடவுமே நல்ல தரத்தில், குறைந்த விலையில் ஆடைகள் கிடைத்தாலும் அதை வாங்கிவிட முடியுமா? அதெப்படி? இங்கே ஆடையின் தரமும், விலையுமே கூட இரண்டாம் பட்சமாகிவிடுகிறதல்லவா?

வருடத்துக்கு ஒரு தடவையான இந்நிகழ்வுக்கே இப்படி என்றால், கிரானைட் தேர்ந்தெடுப்பது என்பது அவர்களது வாழ்நாளில் ஒரு தடவை நடக்கும் முக்கிய நிகழ்வு வேறு! அவர்களை எப்படி கன்வின்ஸ் செய்வீர்கள்?

சிறிய பட்ஜெட் வீடு மற்றும் விலை குறைவான கிரானைட்டானாலும் கூட ஐம்பதாயிரமாவது வரும். அதுவே சற்றே பெரிய பட்ஜெட் என்றால் லட்சங்களில் போகும்! அவ்வளவு செலவு பண்ணத் தயாராக இருக்கும் ஒரு வாடிக்கையாளரை நாம் திருப்திப் படுத்த இயலுமா? அதற்கு எத்தனை விதமான தரத்தில், வகையில், விலையில் நாம் கிரானைட்ஸை வைத்திருக்க வேண்டும்?

இப்போதைக்கு அதற்கு நாம் தயாராக இல்லை, வேண்டாம் என்று முடிவு செய்தேன்.

நமது சந்தை Vs நமது பொருளின் தன்மை! ஆனால், இதே கேள்விதானே கிட்டத்தட்ட டைல்ஸுக்கும் இல்லையா? ஆம், மேலோட்டமாக அப்படித்தான் தோன்றும்! ஆனால், இரண்டு பொருட்களின் வீச்சும் எப்படியானது என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். சிங்கத்துக்கு உணவு கிடைக்கும் அதே காட்டில்தான், சிறுமுயலுக்கும் உணவு கிடைக்கிறது. நம்முடைய அமைப்பு மற்றும் முயற்சிக்குத் தகுந்த வாடிக்கையாளர்கள் நமக்கு எல்லா சந்தையிலும் கிடைக்கத்தான் செய்வார்கள். எதை நாம் செய்ய இயலும் என்பதே முக்கியம்!

அதன் பின்னர், எனது சந்தையில் ஆரம்பிக்கப்பட்ட வேறொரு கிரானைட்ஸ் கடை, ஒரே ஆண்டில் என் கண்முன்னால் சரிந்ததைப் பார்த்தபோது, திகைப்பாக இருந்தது.

அந்த சமயத்தில்தான் ஒரு நாள் சுபின் வந்திருந்தார்.

“கட்டுமானப் பொருட்கள்தானே விக்கிறீங்க கேகே, அப்படியே பிளம்பிங் சாமான்லாம் வைக்கலாம். நல்லாப் போகும்! நம்மூர்ல ஒரு நல்ல ஹார்ட்வேர்ஸ் கடையே கிடையாது!”

ஒரு வணிகனின் கதை
ஒரு வணிகனின் கதை 20 | எவ்வளவு பணம் வந்தாலும் தீராத தாகம் வேண்டும்! ஏன் தெரியுமா?

*

டைல்ஸைப் பொருத்தவரை அது உங்கள் வாழ்நாளில் எப்போதோ ஒரு தடவை நடக்கும் பர்ச்சேஸ்! அதை சிட்டிக்குள் இருக்கும் பெரிய கடைகளுக்குச் சென்று வாங்காமல், அல்லது எனது சந்தையிலேயே இருக்கும் எனது போட்டியாளரிடம் வாங்காமல் என்னிடம் வாங்க வேண்டுமென்றால் நீங்கள் என்னிடம் என்ன எதிர்பார்ப்பீர்கள்? தரமான, குறைவான விலை, இன்முகம் என்ற வழக்கமான எதிர்பார்ப்புகளை விடுத்து (அவற்றை எனது போட்டியாளரும் தரும் பட்சத்தில்) கூடுதலாக என்ன தேவைப்படும் உங்களுக்கு? சொல்லுங்கள். இந்தப் பதிவுக்குத் தொடர்பான இன்னொரு விஷயத்தோடு அடுத்து சந்திக்கிறேன்.

*

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com