ஒரு வணிகனின் கதை 19 | அனைத்திலும் தொழில் வாய்ப்பைக் கண்டுகொள்ளும் பார்வை!

நமது சந்தை என்பது நமது விற்பனைப் பொருட்களுக்கான சந்தை மட்டுமேயல்ல! நம்முடையது அதன் ஒரு பகுதிதான். நாம் வாழக்கூடிய சந்தை பற்றிய மொத்தமான புரிதல் இன்னும் நாம் தொடர்ந்து பயணிக்க உதவும்!
வணிகம்
வணிகம்FREEPIK

இத்தொடரின், ஒவ்வொரு அத்தியாயமும் தொடக்கநிலை குறுந்தொழில் முனைவோரிடம் இருக்க வேண்டிய ரிஸோர்ஸஸ், குணங்கள் என்னென்ன, அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய நுட்பங்கள் என்னென்ன, அவற்றின் முக்கியத்துவம் எவ்வளவு என்பதையெல்லாம் அனைவருக்குமான வாசிப்புக்கு ஏற்றவகையில் எழுத்தாளரின் நேரடி அனுபவத்திலிருந்து ஒரு நாவலின் சுவாரசியத்தோடு விவரிக்கப்படுகிறது.

ஒரு வணிகனின் கதை
ஒரு வணிகனின் கதை

உற்பத்தி மற்றும் சேவைக்கும் இவற்றைப் பொருத்திப் பார்க்க ஏதுவாக இருக்கும். தொழில் முனைவோர், ஆர்வம் கொண்டோர் இவற்றை ஒரு செக்லிஸ்ட்டாக போட்டுப் பார்த்துக்கொண்டு, தம்மிடமிருக்கும் நிறை, குறைகளை அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து குறைகளைக் களையும் வழியறிந்துகொண்டு, நிறைகள் தரும் உற்சாகத்தோடு தொழிலில் முனைப்போடு அவர்கள் களமிறங்க வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம்!

தொடரின் முந்தைய அத்தியாயங்களை இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்!

அத்தியாயம் 19 - சந்தை

திங்கள் கிழமை காலங்காத்தால 9.30 மணிக்கெல்லாம் சுபினிடமிருந்து போன் வந்தது. சினிமாவுக்குக் கூப்பிட்டார்.

“அம்பாசமுத்திரம் போகலாம் கேகே. பாலாஜியில் பொன்னியின் செல்வன் போட்டுருக்கான், நல்லாயிருக்குதாம். அதை முடிச்சிட்டு ஜமீன்ல பிரியாணி சாப்பிட்டுட்டு வரலாம். படம் பார்க்கப் போய் இரண்டு மாசமாச்சு”

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்

“அதுக்காக இப்படி திங்கக்கிழம காலங்காத்தாலயாங்க? கொஞ்சம் வேலை கிடக்குது”

“ரொம்பத்தான் பண்ணாதீங்க, நமக்கென்ன ஞாயிறு, திங்கள்? காலை, மாலை? நேத்திக்கு சாய்ங்காலம் கூப்பிட்டிருந்தாலும் உடனே சரினு வந்திருப்பீங்களா? ஞாயிற்றுக்கிழமை சாய்ங்காலத்துலயானு கேட்டிருப்பீங்க!”

வணிகம்
ஒரு வணிகனின் கதை 18 | தொழிலில் என்னென்ன மாதிரியான கேள்விகளெல்லாம் எழக்கூடும்?

அது ஓரளவுக்கு சரிதான். சுபின், ஒரு சிவில் எஞ்சினியர். டிராஃப்ட்ஸ்மேன் மற்றும் கட்டிடப்பணிக்கான சகலவிதமான அப்ரூவலும் வாங்கித் தரும் தொழில் செய்பவர். ஆனால், கட்டுமானப் பணிகள் செய்பவரல்ல! அதனால், அவர் ஒரு தடவை கூட என் கடையில் டைல்ஸ் எடுத்ததுமில்லை, வாடிக்கையாளரை அனுப்பியதுமில்லை. 

இங்கே, இன்னொரு செய்தி ஞாபகம் வருகிறது. ஒரு வகையில் இப்படியான நெருங்கிய நட்புக்கோ, சொந்தங்களுக்கோ வியாபாரம் செய்வது அத்தனை நல்ல விஷயமுமல்ல! நான் அதை விரும்புவதுமில்லை.

ஒருமுறை, என்னுடன் பள்ளியில் படித்த ரவி எனும் ஒரு நெருங்கிய நண்பன் கடைக்கு வந்திருந்தான். அவன் மட்டும் வந்திருந்தால் பரவாயில்லை. கூடவே அவனது ஐந்தாவது படிக்கும் அழகிய பெண்குழந்தையை அழைத்து வந்திருந்தான். அங்கே பிடித்தது சிக்கல். அவளைப் பார்த்தால், ராம் மாதிரி ’பெண் குழந்தை இல்லாத அப்பனுகளுக்கு மட்டும்தான் தெரியும், அந்த ஏக்கம் எப்படிப் பட்டதென்று’னு கவிதையே எழுதலாம். ஒரு பட்டுப் பொம்மையைப் போல அத்தனை அழகாக, பவ்யமாக எதிரே அமர்ந்திருந்தாள்.

“அங்கிள்ட்ட பேசும்மா, அங்கிள் உன்னைய மாதிரிதான்… டிராயிங்னா ரொம்பப் பிடிக்கும். படிக்கும் போது நிறைய வரைவான்”

அவள் ஒரு சின்ன ஆர்வத்தோடு என்னைப் பார்த்தாள். ரவி தொடர்ந்தான்.

“பாப்பாவுக்கும் உன்னை மாதிரி டிராயிங்னா ரொம்பப் பிடிக்கும்டா. நிறைய வரைஞ்சு வைச்சிருக்கா. மறந்துட்டேன், இல்லைனா உன்னிடம் காண்பிக்க எடுத்துட்டு வந்திருப்போம். நீ இன்னும் வரையுறயா?”

சிரித்தபடி, 

“அதெல்லாம் அப்பத்தோட சரி! பாப்பா, படம் நல்லா வரைவீங்களா? விட்டுடாம தொடர்ந்து பிராக்டிஸ் பண்ணனும் என்ன?”

அழகாக தலையாட்டினாள்.

“பேச மாட்டாளா? என்ன பேரு?”

வணிகம்
ஒரு வணிகனின் கதை 17 | தொழிலில் அறம் ஏன் முக்கியம்?

“பேச மாட்டாளாவா? வெளியிடத்துலதான் இப்படி இருப்பா. வீட்டுக்கு வந்து பாரு சேட்டையை! இப்பவே என்னென்ன பேச்செல்லாம் பேசுது தெரியுமா? அவங்கம்மாவை ஒரு சொல்லு சொல்ல விடாது! பேரு… சாவி! சாவித்திரி, அம்மா பேரு”

“கிரேட்ரா! அவனவன் வாயில நுழையாத சமஸ்க்ருத பேரு வைக்கிற காலத்துல, அம்மா பேரை அழகா வைச்சிருக்க!”

உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது.

“எங்காச்சும் ஊருக்குப் போயிட்டு திரும்பி வரும் போது உங்க வீட்டுச் சாவியை தொலைச்சிட்டீங்கன்னா உங்களுக்கு பிரச்சினையே இல்லல்ல!”

இப்படி நேரத்தில், இப்படி ஒரு மொக்கை ஜோக்கை எதிர்பாராததால், சில விநாடிகள் விழித்தபடி,

“ம்ம்ம்?”

என்றான்.

“அதான் சாவியே இருக்காளே, அவளே வீட்டை தொறந்துடுவா!” 

அவன் கெக்கெபிக்கேவென சிரிக்க, அவளும் சிரித்தாள்.

வீட்டு முற்றத்தில் பதிக்க டிஜிடல் பார்க்கிங் டைல்ஸ் பார்க்க வந்திருந்தார்கள். சிறிய முற்றம்தான். 60 சதுரடி. சாவியே ஒரு டிசைனை செலக்ட் செய்தாள். கணக்கிடும் போதே மிகக் குறைவாக, ஒரு மிக வேண்டிய ரெகுலர் காண்ட்ராக்டருக்குப் போடும் விலையைத்தான் போட்டிருந்தேன். 2300 வந்தது.

“சரியா போட்டியா? ரொம்பக் குறைச்சுப் போட்டுடாத! எல்லோருக்கும் போடுற விலையைப் போடு”

அவன் சரியாகத்தான் சொன்னான். நான்தான் கேட்கவில்லை. 

வணிகம்
ஒரு வணிகனின் கதை 16 | ரகசியம் | தொழிலில் தரவுகளின் முக்கியத்துவம் என்ன?

சிரித்துக்கொண்டே, “எல்லாம் சரியாதான் போட்டிருக்கேன். 2300 கொடு”

2300ஐ சாவியிடம் தந்து தரச்சொன்னான். அவன் வேண்டுமென்றெல்லாம் செய்யவில்லை. அது நடந்துவிட்டது. அவள் வெட்கப்பட்டுக்கொண்டே தந்தபோது, அதில் 2000த்தை மட்டும் எடுத்துக்கொண்டு மிச்சத்தை அவள் கைகளிலேயே விட்டுவிட்டேன்.

“வாங்கிக்கடா!” என்றான் ரவி.

இதோ இப்போதுதான் டிஸ்கவுண்ட் தருவது போல என் மனதில் ஒரு எண்ணம்.

“போதும், சரியா வரும்!” என்று முடித்துவிட்டேன். அவர்கள் போன பிறகுதான் பர்ச்சேஸ் பில்லை எடுத்துப் பார்த்து, ஓவர்ஹெட்ஸெல்லாம் சேர்த்து மனதுக்குள்ளேயே வேகமாக ஒரு கணக்கை ஓட்டிப் பார்த்தேன். விடையைச் சொன்னால், எனது லூசுத்தனத்தை எண்ணிச் சிரிப்பீர்கள். அப்படி ஒரு குறைவான விலைக்கு அதற்கு முன்பாகவும், பின்பாகவும் எந்த ஒரு விற்பனையையும் நான் செய்ததில்லை. நல்லவேளையாக அது சிறிய தொகைக்கான விற்பனையாக அமைந்துவிட்டது. கடை தொடங்கி கொஞ்ச நாட்களில் நடந்த சம்பவம் அது. ஆகவே, அதை ஒரு பெரும் பாடமாக எடுத்துக்கொண்டேன். 

பொதுவாக சொந்தக்காரர்களிடம் இப்படி இளிச்சவாய்த்தனமாக நான் நடந்துகொள்வதில்லை எனினும், அவர்களிடம் வேறு விதமான சிக்கல் ஏற்படும். முடிந்த வரை பேரம் பேசுவார்கள். அந்த பேரத்தில் சற்றே செண்டிமெண்டை வேறு கலந்துவிடுவார்கள். அப்பாவை நன்கு தெரியும் என்பார்கள், அப்பாவோட தாத்தாவோட ஒண்ணுவிட்ட தம்பியோட பொண்ணுதான் எங்கம்மா என்பார்கள். அதிலேயே நமக்கு சற்று வெறுப்பாகிவிடும்.

இறுதியாகப் பேசி ஒப்புக்கொண்டு பொருட்களை வண்டியில் ஏற்றிவிட்டு, பணத்தைத் தரும்போது, சரியாக ஆயிரம் அல்லது இரண்டாயிரம் குறைவாகத் தருவார்கள். "இதோ சிமெண்ட் வாங்க வேண்டியதிருக்கிறது, பிளம்பிங் சாமான் வாங்க வேண்டியதிருக்கிறது, வேறு பணமில்லை, நாளைக் காலை நிச்சயம் கொண்டு வந்து தந்துவிடுகிறேன்" என்பார்கள். அதோடு அந்தப் பணத்துக்கு சங்குதான். போன் போட்டால் நாளை, நாளை என்பார்கள். ஒரு கட்டத்தில், ’ஆயிரம் ரூபாயெல்லாம் ஒரு அமவுண்டுனு ஆறு மாசமாப் போட்டுத் தொல்ல பண்ணிகிட்டிருக்கான், என்ன மனிசன் இவன்’ங்கிறதில் வந்து முடியும்.

வணிகம்
ஒரு வணிகனின் கதை 15 | ரகசியம் | அன்றாடம் ஆரோக்கியத்துக்கான முதலீட்டை செய்வது எப்படித்தெரியுமா?

அதோடு அவர்களுக்கு நாம் தரும் பொருட்களுக்கு வாழ்நாள் கேரண்டியும் நாம் தரவேண்டியிருக்கும். ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு பாத்ரூமில் ஏதோ ஒரு மூலையில் ஒரு டைல் விழுந்துவிட்டது என்றாலும், அதற்குக் காரணம் டைலை சரியாக பதிக்காத பணியாளின் பொறுப்பு என்பதோ, அதைக் கூடுமானவரைத் தவிர்க்க, அடெஸிவ் எனப்படும் டைல் ஒட்டும் பசையைப் பயன்படுத்துங்கள் என்று நான் சொன்ன போது, அதெதுக்கு தண்டமா என்று சொன்ன அவர்களும் பொறுப்புதான் என்பதோ அவர்களது மண்டைக்கு உறைக்காது. இவன்தான் நல்ல டைலாகத் தரவில்லை என்று பழியை நம்மீது போடுவார்கள். நாளடைவிலான அவர்களின் மனமாற்றத்துக்கும் நாம் பொறுப்பேற்க வேண்டியதிருக்கும்.

மூன்று மாதம் கழித்துப் பார்க்கும் போது, ’இந்தக் கோடு போட்ட டிசைன் நல்லாவே இல்லைனு என் மருமவ வந்து கத்துதா. நான்தான் அன்னிக்கே அந்த ப்ளூகலர் பூப்போட்ட டிசைன் வாங்கலாம்னு நினைச்சேன். இவன்தான் இது நல்லாருக்கும்னுட்டான்’. நான் அப்படி சொல்லியிருக்கவே மாட்டேன். அவரோ, அவருடன் வந்தவர்கள் யாரோதான் அதைச் செய்திருப்பார்கள். அதற்கும் பழி நம் மீதுதான் விழும். ஆனாலும், இதைப் போன்ற இம்சைகளிலெல்லாம் தப்பவே முடியாது.

அரசியல்னா ஆயிரம் என்கேஜ்மென்ட்ஸ் இருக்கத்தான் செய்யும்! உங்களை அடுத்து நான் டெல்லியில மீட் பண்றேனுட்டுப் போய்கிட்டே இருக்கவேண்டும். பணத்தை மட்டும் இழந்துவிடாமல் கவனமாக இருந்துகொண்டால் போதுமானது.

”என்ன போலாமா எப்படிங்க?”

என்று கேட்டார் சுபின். நானும்,

”சரி போலாம்” 

அவரும், என்னை நீங்க, நாங்க என்று அழைக்க, நானும் அவரை வாங்க, போங்க என்று அழைப்பதால் சமீபத்தில் தோன்றிய நட்பு என்று நீங்கள் நினைப்பீர்கள். அதுதான் இல்லை. நாங்கள் இருவரும் இந்த பிளாஷ்பேக்கில் பார்த்த ரவியைப் போலவே பள்ளி நண்பர்கள்.

ஒரு வணிகனின் கதை - நட்பு
ஒரு வணிகனின் கதை - நட்புfreepik

சொல்லப்போனால், ரவி, சுபின், நான் மூவருமே ஒன்றாகப் படித்தவர்கள். அப்படி இருந்தும் இதென்ன விநோதமான பழக்கம் என்கிறீர்களா? சரிதான். இங்கே, எங்களூர்ப் பக்கம் நண்பர்களோடு ஏதாவது விவாதத்தின் போது, 

“அடப்போங்க தம்பி, உங்களுக்கு ஒரு இழவும் தெரியாது” 

என்று திட்டுவதுண்டு. அப்படி ஏதோ வயதில் விளையாட்டாக போங்க, வாங்க என்று ஆரம்பித்த பழக்கம், சுபினோடு மட்டும் நிரந்தரமாக ஒட்டிக் கொண்டுவிட்டது. அவருக்கும் அப்படித்தான். இப்போது நீ, நான் என்றால் இருவருமே மரியாதைக் குறைவாக உணர்கிறோம். திட்டுவதானால் கூட மரியாதையாகவே திட்டிக் கொள்கிறோம்.

வணிகம்
ஒரு வணிகனின் கதை 14 | பேரம் பேசுவதை தவிர்க்க முடியாதுதான்... ஆனா அதுக்குன்னு....!

சுபின் சரியாக 9.50க்கெல்லாம் வந்துவிட்டார். நானும் முத்து, கதிரிடம் அம்பாசமுத்திரத்துக்கு ஒரு கஸ்டமரைப் பார்க்கப்போவதாகச் சொல்லிவிட்டு கிளம்பினேன். வேறு வழி கிடையாது. வாரத்துக்கு ஏழு நாளும் கடையில் கிடக்கும் நமக்குமே, இப்படிச் சின்னச்சின்ன விடுதலை தேவைதான். இருவரும் பைக்கில் கிளம்பினோம்.

பைக் பேருந்து நிலையத்தைத் தாண்டும் போது ஆரம்பித்தார். லைசன்ஸ் புதுப்பிக்கப்படாமல் கிடந்த தியேட்டரைத் தாண்டினோம்.

“இந்தத் தியேட்டரை இப்படிக் கெடப்புல போட்டிருக்கானுக பார்த்தீங்களா? எத்தனை லட்சம் செலவு பண்ணி ரெனோவேட் பண்ணினாங்க தெரியுமா? ஏசி இல்லாம, சீட்டிங் சரியில்லாம ஏதோ அந்தக் காலத்து மாடல்ல நடத்தப் பிளான் பண்ணி இப்படி சொதப்பிடுச்சு. ஏசி, நல்ல சீட்டிங்ஸ், நல்ல புரொஜக்டிங் இதெல்லாம் பண்ணினா இதுவும் ரொம்ப நல்லாப் போகும். ஆனா, போகாதுனு நினைச்சி அப்படியே போட்டிருக்காங்க. பாருங்க நாம படம் பார்க்க அம்பைக்கும், ஆலங்குளத்துக்கும் ஓட வேண்டியிருக்குது.”

தலையாட்டினேன். 

“போன வாரம் ஆன்லைன்ல ஒரு டேபிள் ஆர்டர் போட்டிருந்தேன் கேகே. ப்ளைவுட் டேபிளை விட மர டேபிள் மூணு மடங்கு விலை இருக்குது.  இங்க லோக்கல்ல சுத்திச்சுத்தி ரெண்டு மூணு சாமில் இருக்கு, அவனுகளை செய்யச்சொன்னா அதுல பாதி ரேட்டுக்கு செஞ்சி தருவானுங்க. நாம ஏன் ஆன்லைன்ல பர்னிச்சர் சேல் பண்ணக்கூடாது?” 

“நல்ல ஐடியாவா இருக்கு. நீங்களே பண்ணவேண்டியதுதானே?” 

“பணம் எவன்கிட்ட இருக்கு?”

சிரித்தேன். அடுத்து சற்று நேரத்துக்கெல்லாம் பள்ளிக்கூடம் ஆரம்பிப்பது, ரியல் எஸ்டேட் தொழில் செய்வது, வாட்டர் பிளாண்ட் ஆரம்பிப்பது, விவசாயம் செய்வது என குறைந்தது நான்கைந்து தொழில்களை பற்றி, அதன் சாதக பாதகங்களைப் பற்றி பேசி முடித்திருந்தார். இடைகால் விலக்கில், ஒரு டீக்கடையில் நிறுத்தினோம். அந்தக் கடையில் வடை நன்றாக இருக்கும்.

“எப்படிப் போகுது அண்ணாச்சி? ஒரு நாளைக்கு என்னா வியாபாரமாகும்?” என்று கடைக்காரரைக் கிண்ட ஆரம்பித்து, ஒரு வடை கடை ஆரம்பித்தால், எத்தனை ஆயிரங்கள் சம்பாதிக்கலாம் என்ற கணக்கு அடுத்த ஐந்து நிமிடங்களுக்குப் போனது. இப்படித்தான் எங்கே போனாலும், அதுபற்றிய ஒரு குறைந்தபட்ச தொழில் விசாரிப்பைச் செய்யாமலிருக்க முடியாது சுபினுக்கு!

இந்தப் பழக்கம் எனக்கு சற்றுக் குறைவுதான். எங்கே போனாலும், நமது வேலையென்ன என்பதில் மட்டும்தான் கவனமாக இருப்பேன். ஆனால், ஒரு தொழில் செய்பவர்கள் இப்படி இருக்கக்கூடாது. ஒரு முறை திருநெல்வேலிக்குப் போயிருந்த போது, பைக் ஸ்டாண்ட் என்ன பெறும்? அதன் ஊழியனைப் பிடித்துக்கொண்டு ஒரு நாளைக்கு எத்தனை பைக் வரும்? எவ்வளவு வருமானம் வரும் என்று விசாரணை!

இப்படி சுபின் அளவுக்கு இருக்க வேண்டிய அவசியமில்லைதான். ஆனாலும், அளவோடு இந்தப் பழக்கமிருப்பது சிறப்பு. அதன் மூலம் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய விற்பனை வாய்ப்புகள் கிடைக்கும். நமது சந்தை என்பது நமது விற்பனைப் பொருட்களுக்கான சந்தை மட்டுமேயல்ல! நம்முடையது அதன் ஒரு பகுதிதான். நாம் வாழக்கூடிய சந்தை பற்றிய மொத்தமான புரிதல் இன்னும் நாம் தொடர்ந்து பயணிக்க உதவும்!

படத்தை முடித்துவிட்டு, பிரியாணி சாப்பிட, கல்யாணி திரையரங்கம் அருகிலிருக்கும் கடைக்குச் சென்றோம். அமர்ந்து பிரியாணியை ஆர்டர் செய்துவிட்டு நிமிர்ந்தார்.

“நம்மூர்ல ஒரு நல்ல பிரியாணிக் கடை கூட இல்லை தெரியுமா? ஒண்ணு ஆரம்பிச்சா பிச்சிகிட்டு…”

*

எதிலேயுமே ஒரு தொழில் வாய்ப்பைக் கண்டுகொள்ளும் சுபினின் பார்வை எப்படிப்பட்டது? அப்படிப் பரவலான பார்வை இருக்கும் அதே சமயம், சில விஷயங்களை ஆழ்ந்து கவனிக்க வேண்டியதும் அவசியம். சுபினின் குணம் நமது சந்தையை நன்கு தெரிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் உதவும்! ஆனால், அதே குணம், அவசரப்பட்டு எதிலாவது நம்மை இறங்கிவிட்டுவிடக்கூடிய சிக்கலும் இருக்கிறது.

சுபினுக்கு டிராஃப்ட்ஸ்மென் எனும் நிரந்தரத் தொழில் இருக்கிறது என்பதாலோ, அல்லது அவர் புத்திசாலி என்பதாலோ வேறெதிலும் சிக்கிக்கொள்ளாமல், வெறும் பேச்சோடுதான் இதுவரை நிறுத்திக்கொண்டிருக்கிறார். அவரைப் பற்றிய உங்கள் புரிதலைச் சொல்லுங்கள். அடுத்து சந்திக்கிறேன்.

*

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com