ஒரு வணிகனின் கதை - 11 | தோற்றம் & பேச்சைக் கொண்டு வாடிக்கையாளர்களை கணிப்பது சரியா? அப்படி முடியுமா?

இயன்றவரை உங்களுக்கு பேசக் கிடைக்கும் அரைமணி நேரத்துக்குள் எடை போட்டாக வேண்டும். அதை வைத்துத்தான் ஒரு விற்பனையை வெற்றிகரமாக, செய்து முடித்தாக வேண்டும்.
ஒரு வணிகனின் கதை
ஒரு வணிகனின் கதைpt web

மிக எளிய மனிதர்களாக இருந்தார்கள் அவர்கள். கணவனும், மனைவியும் என்பது பார்த்தாலே தெரிந்தது. உழைக்கும் மனிதர்களல்லவா, உடைகளில் தெரிந்தது. அந்தப் பெண்ணின் கழுத்திலோ, காதிலோ ஒரு பொட்டுத் தங்கமும் இல்லை! பாசி மாலைகள் உருண்டன.

பாத்ரூமுக்கு எடுக்க வந்திருப்பார்களோ? ஏதாவது சின்ன விற்பனையாக இருக்கலாம்! உடனடியாக, இந்தக்கடை தொடங்கிய முதல் நாளே எனக்கு நானே போட்டுக்கொண்ட விதிகளில் தலையாயதும், முதலாவதுமான விதி ஞாபகம் வந்தது.

தோற்றத்தை வைத்து எந்த முடிவுக்கும் வராதே! இங்கே, எல்லா கஸ்டமர்களுக்கும் ஒரே விதமான வரவேற்பு மற்றும் அணுகுமுறைதான்! ஒரு ரூபாயானாலும், ஒரு லட்ச ரூபாயானாலும் அது ஒரு விற்பனை, அவ்வளவுதான்!

எழுந்து போய் வழக்கமான அதே வணக்கம், வாங்க என்றபடி டிஸ்ப்ளே அருகே அழைத்துச் சென்று விபரங்களை எடுத்துரைத்தேன். அப்போதுதான் தெரிந்தது, அவர்கள் எடுக்க வந்திருப்பது ஒரு புதிய இருபடுக்கையறை வீட்டுக்கான அனைத்து வகை டைல்ஸ்களும்! என் புத்தியை கடிந்துகொண்டேன். அவர்களுக்குள்ளாகவே நிறைய பேசிக்கொண்டார்கள். குறிப்பாக டிசைன்களை தேர்ந்தெடுப்பதில் மிக நீண்ட விவாதம்! எல்லாம் முடிந்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் அவர்கள் கையோடு எடுத்துச் சென்ற டைல்ஸ்களின் மதிப்பு சுமார். 60 ஆயிரம்! கைமேல் பணம்!

மாறாக இன்னொரு நாள், ஒரு நபர், அருகிலிருக்கும் ஒரு கிராமத்திலிருந்து வந்தார். ஒரு பாத்ரூம் தரைக்குத் தேவையான டைல்ஸ், 4 பெட்டிகள் மட்டுமே வாங்கிச் சென்றார். சுமார் ரூ.1200 மதிப்புள்ள சிறு விற்பனை. மாலை நான்கு மணிக்கெல்லாம் அதில் ஒரு பெட்டியை எடுத்துக்கொண்டு வந்துவிட்டார். இந்தப் பெட்டியில் டைல்கள் உடைந்திருக்கின்றன, கவனிக்காமல் தந்துவிட்டீர்கள், அதை மாற்றிக்கொண்டுங்கள் என்றார்.

அது பொய்! டைல்கள் சில பெட்டிகளில் உடைந்திருக்க வாய்ப்புகள் உண்டு. எனக்கும் அதில் அனுபவமுண்டு. பலருக்கு மாற்றியும் தந்திருக்கிறேன்தான். ஆனால் இவர் சொல்வது பொய்!

சில பெட்டிகளில் 5 டைல்கள், சிலவற்றில் 6, சிலவற்றில் 10 என வகைக்கும், எடைக்கும் பொருத்து எண்ணிக்கை மாறுபடும். அவற்றை நாங்கள் தொடர்ந்து கையாண்டு வருவதால், எந்தப் பெட்டியில் எந்த ஒன்று உடைந்திருந்தாலும் எங்களுக்குத் தெரிந்துவிடும். ஒரு ஒரு முனை உடைந்த டைல் எழுப்பும் கரகரப்பான ஒலி கூட எங்கள் கைகளுக்கு பழக்கமானவை. நாம் அறிந்து, அப்படியான ஒரு டைல் கூட கஸ்டமருக்குப் போய்விடக்கூடாது என்பது கடையின் இரண்டாவது விதி. இதுவோ, பாலிதீன் பையில் வாங்கிவரும் முட்டைகளை கீழே போட்டு உடைப்பதைப் போல உடைந்திருக்கிறது. இது கையிலிருந்து கூட கீழே விழுந்திருக்காது, மிக உயரத்திலிருந்து விழுந்திருக்க வேண்டும். அப்படி கலகலத்துப் போய்க் கிடந்தது. விவாதம் தொடங்கியது.

”இப்படி நாங்கள் அனுப்பவில்லை, அனுப்பமாட்டோம்!”

“அப்ப நான் பொய் சொல்கிறேனா?”

“உங்களுக்குத் தெரியாமல் வேறு யாராவது உடைத்திருப்பார்கள், விசாரியுங்கள்”

“இல்லை, நான் உடனிருந்தேன். நான்தான் இறக்கினேன், யாரும் உடைக்கவில்லை”

”இல்லை, நான் மாற்றித் தரமுடியாது”

பேச்சு விரும்பத்தகாதபடி வளர்ந்து கொண்டிருந்தது. ஒரு 300 ரூபாய்க்காக ஒரு ஆளைப் பகைத்துக்கொள்ள வேண்டாம் கேகே. அதை ஒரு மார்க்கெட்டிங் செலவு என்றாவது கணக்கிட்டுக் கொள். இவர் கடைக்கு நல்லது செய்கிறாரோ, இல்லையோ, நம்மைப் பற்றி கெட்டது பேசாமல் இருக்கவேண்டுமல்லவா? இருப்பினும், இது அப்பட்டமான ஏமாற்றுவேலை! உன் நெற்றியில் ஏமாளி என்றா எழுதியிருக்கிறது?

“சரி சார், நான் மாற்றித் தருகிறேன். ஆனால், நீங்கள் உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள்!”

இதற்குப் பதில் தர முடியாமல் ஒரு விநாடி திகைத்தவர், உண்மையை ஒப்புக்கொள்ளவும் மனமின்றி, அதே நேரம் வாக்குவாதம் செய்யவும் மனமின்றி,

“இல்லைங்க, உடைஞ்சுதான் வந்துச்சு…” என்று சொன்னபடியே வெளியேறிவிட்டார்.

பின்னர் யோசித்தேன். இந்தளவுக்கு கார்னர் செய்து வாக்குவாதம் செய்திருக்க அவசியமில்லை. போகிறது என்று அதை முதலிலேயே மாற்றிக்கொடுத்திருக்கலாம் என்று தோன்றியது.

மற்றொரு நாள். இன்னொரு நபர். நன்கு படித்தவர் போலிருந்தார். ஒரே ஒரு பாத்ரூமுக்காக டைல்ஸ் எடுக்க வருபவர்கள் கூட சமயங்களில் மணிக்கணக்காக என்னைப் பாடாய்ப் படுத்துவதை அனுபவத்திருக்கிறேன். இவர் எடுக்க வந்ததோ, சுமார் 1200 சதுரடிக்கு 2x4 ஜிவிடி டைல்ஸ்!

டிஸ்ப்ளேக்களைப் பார்த்தபடியே நான் சொல்வதைக் காதில் வாங்கிக் கொண்டிருந்தார். பதிலாகவோ, அவர் கருத்தாகவோ ஒரு வார்த்தை பேசவில்லை. பெரிய விற்பனை, விட்டுவிடக்கூடாது. அமைதியான ஆளாகத் தெரிகிறார். அவரை எரிச்சலூட்டிவிடாமல், எப்படியாவது நற்பெயரை வாங்கிவிடவேண்டும், புன்னகையோடு பேச வேண்டும். நமது பொருளின் தரம், குறைவான விலை, அவர் சிட்டிக்கு சென்றால் அவருக்கு ஆகவிருக்கும் இதர செலவினங்கள், சிக்கல்கள்! நமது பொருளின் சிறப்புகள், இது எப்படி ராஜஸ்தான், குஜராத் பகுதிகளிலிருந்து தயாரிக்கப்பட்டு இங்கு வருகிறது, அவர் கேட்காவிட்டாலும் கூட எவ்வளவு அதிகபட்ச தள்ளுபடி தரலாம் என்று வரிசையாக அலையலையாக மனதுக்குள், அடுத்துப் பேச வேண்டிய விஷயங்கள் தயாராகிக் கொண்டிருந்தன.

ஆனால், முழுதாக அரை நிமிடம் கூட ஆகியிருக்காது.

“இந்த டிசைனை 1200 சதுரடி ஏற்றிவிடுங்கள், இப்போது வண்டி வந்துவிடும்.”

என்று சொல்லிவிட்டு, பணத்தைக் கொடுத்துவிட்டு விறுவிறுவென்று சென்றுவிட்டார்.

இன்னொரு நாள் ஒரு இளைஞர் வந்தார்.

சில சமயங்களில் சில முதியவர்கள்தான் டைல்ஸ்களையும், அதன் டிசைனையும் பார்த்து வியப்பார்கள். அவர்கள் அனுபவத்துக்கு, இது ஏதோ அடுத்த கட்ட நகர்வு, என்னவெல்லாம் வந்துவிட்டது பாரேன் என்பதான வியப்பாக இருக்கும். என் வயதுக்கே குடிசை வீடு, சாணி மெழுகிய தரையைப் பார்த்திருக்கும் போது, அவர்கள் வயசுக்கு என்னவெல்லாம் பார்த்திருப்பார்கள். அவர்களுக்கு இப்படியான வண்ணமயமான டைல்கள் வியப்பளிப்பதில் ஆச்சரியமில்லை.

ஆனால், இந்த இளைஞர் வியப்படைந்து கொண்டிருந்தது, எனக்கு சற்று வியப்பாக இருந்தது.

“சார், கடை சூப்பரா வைச்சிருக்கீங்க சார். இவ்வளவு பிரமாண்டமா இருக்கும்னு நான் நினைக்கலை!”

எது? இது பிரம்மாண்டமா? காலையில்தான் ஒரு பெண்மணி வந்து என்ன இவ்வளவு கம்மியா டிசைன்ஸ் வைச்சிருக்கீங்க, எப்படி செலக்ட் பண்றதுனு கேட்டுவிட்டுப் போனது வேறு ஞாபகம் வந்தது. இருப்பினும் ஏற்றுக்கொள்வது போல மையமாக சிரித்துவைத்தேன்.

“இது எவ்வளவு சார்?”

“இந்த இரண்டு போர்ட்ல இருக்கிற எல்லாமே ஒரே விலைதான். ரூ.30, ஒரே அளவுதான். 18x12”

“ஓ, இது பெட்டியில் எத்தனை இருக்கும்?”

“6 டைல்ஸ் இருக்கும், 9 சதுரடி வரும்”

“எத்தனை சதுரடி?”

“9”

கீழே கூழாங்கல், நடுவில் தண்ணீரில் மீன்கள், மேலே வானம் என்பதாக ஒரு டிசைன் இருந்தது. அதைக் காண்பித்துக்கேட்டார்.

“இது?”

“இதுவும் அதேதான்!”

“ரேட் எவ்வளவு சார்?”

“30”

“சதுரடி?”

“9”

“ஒரு பெட்டியில் எத்தனை இருக்கும்?”

“6”

“இதை எப்படி தருவீங்க? இது கேட்டா பூராவும் கூழாங்கல்லா தந்துடுவீங்களா?”

“இல்லைங்க, கீழ ரெண்டு கூழாங்கல், நடுவில ரெண்டு மீன், மேல ரெண்டு வானம்னு தருவேன்”

“எப்படி கணக்குப் பண்ணுவீங்க?”

“நீங்க அளவு சொல்லுங்க! நான் கணக்குப் பண்ணிக்கிறேன்”

“ஓ. இது எவ்வளவு?”

“அதே அளவு, அதே சதுரடி, அதே விலைதான் 30”

“ஒரு பெட்டியில் எத்தனை டைல்ஸ் இருக்கும்?”

“6”

“சதுரடி?”

“9”

”அப்ப, இது?”

அது அவர் முதலில் கைகாட்டிக் கேட்ட அதே டைல்ஸ்!

எனக்கு ஒரு போன் வந்தது. முத்துவைப் பார்த்தேன்.

“முத்து, சாரைக் கவனி, ஒரு போன் பேசிட்டு வந்துடுறேன்”

மனிதர்களை எப்படி தோற்றத்தை வைத்து எடை போட முடியாதோ, அதே போன்றதுதான் கஸ்டமர்களை எடைபோடுவதும்! ஆகிற காரியமில்லை!

ஒரு வணிகனின் கதை 10 | காரியம் நடக்கும் வரை இனிமை... பிறகு கடுமை... எப்படி கையாள்வது இவர்களை?

பணக்காரரா, ஏழையா? படித்தவரா, படிக்காதவரா? தேர்ந்த உடையணிந்தவரா, அப்படி அல்லாதவரா? சிரித்துப் பேசுகிறாரா, உம்மணாம்மூஞ்சியா? இது எதை வைத்தும் அவர் நம்மிடம் பொருளை வாங்கிவிடுவார் என்றோ, இவரால் விற்பனைக்குப் பிறகான பிரச்சினை வராது என்றோ, இவர் கடன் கேட்கமாட்டார், அப்படியே கேட்டாலும் சொன்னபடி திருப்பித் தந்துவிடுவார் என்றோ, பேரம் பேசாதவர் என்றோ உங்களால் முடிவு செய்யமுடியாது/ இயன்றவரை உங்களுக்கு பேசக் கிடைக்கும் அரைமணி நேரத்துக்குள் எடை போட்டாக வேண்டும். அதை வைத்துத்தான் ஒரு விற்பனையை வெற்றிகரமாக, செய்து முடித்தாக வேண்டும். அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com