ஒரு வணிகனின் கதை 10
ஒரு வணிகனின் கதை 10 கோப்புப்படம்

ஒரு வணிகனின் கதை 10 | காரியம் நடக்கும் வரை இனிமை... பிறகு கடுமை... எப்படி கையாள்வது இவர்களை?

ஒரு வணிகனின் கதையின் 10வது அத்தியாயமான இதில், தொழிலில் ஒருவருக்கொருவர் பேசும் சொற்கள் எவ்வளவு நம்பிக்கையினை உண்டாக்கும் என்பதை பார்க்கலாம்

இத்தொடரின், ஒவ்வொரு அத்தியாயமும் தொடக்கநிலை குறுந்தொழில் முனைவோரிடம் இருக்க வேண்டிய ரிஸோர்ஸஸ், குணங்கள் என்னென்ன, அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய நுட்பங்கள் என்னென்ன, அவற்றின் முக்கியத்துவம் எவ்வளவு என்பதையெல்லாம் அனைவருக்குமான வாசிப்புக்கு ஏற்றவகையில் எழுத்தாளரின் நேரடி அனுபவத்திலிருந்து ஒரு நாவலின் சுவாரசியத்தோடு விவரிக்கப்படுகிறது.

ஒரு வணிகனின் கதை
ஒரு வணிகனின் கதை

உற்பத்தி மற்றும் சேவைக்கும் இவற்றைப் பொருத்திப் பார்க்க ஏதுவாக இருக்கும். தொழில் முனைவோர், ஆர்வம் கொண்டோர் இவற்றை ஒரு செக்லிஸ்ட்டாக போட்டுப் பார்த்துக்கொண்டு, தம்மிடமிருக்கும் நிறை, குறைகளை அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து குறைகளைக் களையும் வழியறிந்துகொண்டு, நிறைகள் தரும் உற்சாகத்தோடு தொழிலில் முனைப்போடு அவர்கள் களமிறங்க வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம்!

தொடரின் முந்தைய அத்தியாயங்களை இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்!

ஒரு வணிகனின் கதை 10
ஒரு வணிகனின் கதை 9 | தொழிலில் சொல்லின் முக்கியத்துவம் என்ன?

அத்தியாயம் 10 - சொல் (பகுதி 2)

அன்று மாலையே அக்ரிகல்ச்சர் பார்ட்டியின் வீட்டுக்கு, உட்பக்கச் சுவர்களை அளந்துபார்க்கப் போனேன். அரை மணி நேரத்துக்கும் அதிகமாய் ஆனது. அது மட்டுமே சுமார் 300 சதுரடி வந்தது. பின்னர் வாட்சப் புகைப்படங்களைக் காண்பித்து டைல்ஸை தேர்ந்தெடுக்க வைத்தேன்.

“நீங்க சொன்ன எல்லா ஐட்டத்தையும் எப்ப வேணா எடுத்துக்கலாம் சார், இப்ப கடைசியா சொன்ன வீட்டுக்குள்ளே சுவர் தவிர. என்கிட்ட பாத்ரூம், எலிவேஷன் கான்செப்ட்ஸ்தான் இருக்கு. அதையே வீட்டுக்குள்ளே போட்டா நல்லாயிருக்காது.”

“உங்ககிட்ட இருக்கிறதிலேயே ஏதாச்சும் லைட் கலர் மட்டும் கொடுங்களேன், அதில் என்ன இருக்கு?”

“இல்லை சார், நல்லாயிருக்காது சார். அப்படிலாம் வித்தாப் போதும்னு நான் நினைக்கமாட்டேன் சார். வீட்டுள்ளே சுவருக்குப் பொருத்தமா சிட்டியில ஏதாச்சும் நல்ல ஸ்டாக்கிஸ்ட்கிட்டயிருந்து நல்ல டிசைனா எடுத்துத் தர்றேன் சார்”

“ரொம்ப நல்லதாப் போச்சு”

“அதனால மற்றதை இப்ப எடுத்துடுங்க, அந்த ஐட்டத்தை மட்டும் நானே டெலிவரி கொடுத்துடுறேன்”

”சரி, எவ்வளவு ஆச்சு?”

மேலும் 5 நிமிடங்கள் எடுத்துக்கொண்டு, கவனமாகக் கணக்கிட்டுச் சொன்னேன்.

“சிட்டியில் எடுக்க வேண்டிய, வீட்டுக்குட்புற சுவர் தவிர்த்து மற்றதெல்லாம் 87600 ஆகும் சார்! அந்த ஐட்டத்துக்குத் தனியா 9600 வருது”

“டிஸ்கவுண்ட்லாம் போட்டுட்டீங்களா?”

“ஏற்கனவே நிறைய குவாண்டிட்டி என்பதால் குறைச்சுதான் சார் போட்டிருக்கேன். இருந்தாலும் ரவுண்டாக 85 ஆயிரம்+ 9600 கொடுத்துடுங்க சார்”

“அப்ப சரி, நாளை மறுநாள் வண்டி அனுப்பறேன். எல்லாம் நோட் பண்ணிக்கிட்டீங்கள்ல, அனுப்பிடுங்க” என்றபடி எழுந்தார்.

“பேமண்ட்…”

என்றபடி இழுத்தேன்.

“எடுக்கும் போது முழுசா கொடுத்துடுறேன்” என்றவர், என்ன நினைத்தாரோ பைக்குள்ளிருந்து பணத்தை எடுத்து சரசரவென்று எண்ணி ஒரு 10000 ரூபாயை என்னிடம் நீட்டினார்.

“இதை அட்வான்ஸாக வைத்துக்கொள்ளுங்கள், அவ்வளவுதானே!”

எனக்கு இப்போது நிஜமாகவே கண்ணு கசங்கியது.

மறுநாள், அவர் தந்த அட்வான்ஸையே கொடுத்து நெல்லையிலிருந்து உட்புறச்சுவர்களுக்கான டைல்களை வரவழைத்தேன். வண்டி செலவை மிச்சம் பிடிக்க டைல்களை நேரடியாக அவரது வீட்டுக்கே அனுப்பி வைத்தேன். அதன் பிறகு 3 நாட்களாகியும் மற்ற டைல்களை அவர் எடுக்கவில்லை. நான்காம் நாள் போன் செய்து, அவற்றில் முன்முகப்பு, பாத்ரூம், கிச்சன் சுவர்களுக்கான டைல்களை மட்டும் முதலில் அனுப்பச்சொன்னார். வண்டியும் அனுப்பி வைத்தார். அவர் கேட்டவற்றை அனுப்பி வைத்தேன், முக்கியமான பகுதியான தரை டைல்களைத் தவிர. எங்கோ இடிப்பது போலிருந்தது.

அதற்கடுத்த நாள் நேரில் வந்தார்.

ஒரு வணிகனின் கதை 10
ஒரு வணிகனின் கதை 5 | மறதியான, கவனக்குறைவான, புரிதலற்ற நபரை எப்படி கையாள்வது?

“தம்பி, வீட்ல திடீர்னு தரைக்கு டைல்ஸ் வேண்டாம், கிரானைட்தான் வேணும்னு சொல்லிட்டாங்க. அதான் மொத்தத்துக்கும் கிரானைட்டே எடுத்துட்டு வந்துட்டோம்.”

லேசாக ஜெர்க் ஆனேன்.

“அது மாதிரி வீட்டுக்குள்ள சுவத்துக்கும் இப்பத்திக்கு போட வேண்டாம், அப்புறம் பாத்துக்கலாம்னுட்டாங்க, வீட்டம்மா பேச்சை எப்படி மீற முடியும் இல்லையா? அதனால, அதை மட்டும் ரிட்டர்ன் எடுத்துக்குங்க! மற்ற சுவர் டைல்ஸுக்கு மட்டும் கணக்குப் பாத்துட்டு மிச்சம் எவ்வளவு ஆகுதுனு சொல்லுங்க, செட்டில் பண்ணிடுறேன்”

“சார், தரை டைல்ஸ் எடுக்கலைன்னாலும் பரவாயில்லை. நெல்லையிலிருந்து வரவழைச்ச சுவர் டைல்ஸை எப்படி சார் ரிட்டர்ன் எடுக்குறது?”

“நீங்கதானே 2 பெட்டியானாலும் ரிட்டர்ன் எடுத்துப்பீங்கனு சொன்னீங்க?”

குரலில் கடுமை ஏறியிருந்தது.

ஒரு வணிகனின் கதை 10
ஒரு வணிகனின் கதை 7 | ‘லோன் வேணுமா? உங்களுக்குதான் இந்த செய்தி!’

“சொன்னேன், அது என்னோட ஐட்டம் எதுவானாலும் எடுத்துப்பேன், ஆனா, பாத்ரூமுக்கோ, கிச்சனுக்கோ பயன்படாத பிளைன் கலர் ஐட்டத்தை நான் எப்படி சார் எடுத்துக்குறது? ஸ்டாக்கிஸ்ட் ரிட்டர்ன் எடுக்க மாட்டாங்க!”

“அதுக்கு நான் என்ன பண்றது? இதை நீங்க முதலிலேயே சொல்லியிருக்கணும்!”

“என்ன சார் இப்படிச் சொல்றீங்க?”

“அதை வைச்சு நான் என்ன பண்றது? வேணும்னா எந்தக் கடைனு சொல்லுங்க நான் பேசறேன்”

கடுப்பில்,

“சரி சார், அதை எடுத்துக்குறேன். மற்ற சுவர் டைல்களுக்கு மட்டும் 28000 வருது, நீங்க கொடுத்த 10000 போக மிச்சம் 18000 கொடுங்க சார் போதும்”

“மூவாயிரம் டிஸ்கவுண்ட் சொல்லியிருந்தீங்களே?”

“சார் அது நீங்க 85 ஆயிரம் பர்ச்சேஸ் பண்றப்ப சொன்ன டிஸ்கவுண்ட் சார். அதை எப்படி 28000க்கு தரமுடியும்?”

“என்ன தம்பி, இவ்வளவு கறாரா பேசறீங்க? உங்களை நம்பிதானே வந்தேன். நீங்க தர்றேனு சொன்ன டிஸ்கவுண்டைத்தானே கேக்குறேன். நானா ஏதாச்சும் பேரம் பேசினேனா? இப்படி வார்த்தை தவறலாமா?”

“வார்த்தை? யாரு? நானு?”

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட பார்வை கொஞ்சமும் சரியில்லாதது. தொழிலில் விரோதம் சரியானதல்ல! எத்தனையோ சிக்கல்களைச் சந்திக்கிறோம், தொலைகிறது!

“சரி, மேலும் ஆயிரம் ரூபா குறைச்சிகிட்டு தந்துடுங்க!”

“அதெப்படி?”

ஒரு வணிகனின் கதை 10
ஒரு வணிகனின் கதை 8 | நினைக்காத நேரத்தில் கிடைக்கும் நம்பிக்கை உணர்வும் ஒரு அற்புதம்தானே?

“சார் பர்சண்டேஜ் படி 85க்கு 3.5% டிஸ்கவுண்ட் தந்தேன். அதே %ஐ 28க்கு கேட்குறதே தப்பு. ஆனாலும் 28க்கு 3.5% 1000 ரூபா குறைச்சிட்டேன். இதுதான் நான் சொன்னது, அதுபடி 17000 கொடுத்துடுங்க”

முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு,

”கார்ட் ஸ்வைப்பிங் இருக்கா?”

ஏற்கனவே, பெரிய சேல்ஸ் பறிபோன கடுப்பு, மொத்த பர்ச்சேஸுக்காக இவரை நம்பிக் கொடுத்த டிஸ்கவுண்டை, இந்தக் குறைவான பர்ச்சேஸுக்கும் அவர் கேட்ட எரிச்சல், நெல்லை ரிட்டர்ன் மெட்டீரியலில் எனக்கேற்பட்ட நஷ்டம் எல்லாம் உள்ளுக்குள் கொதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த லட்சணத்தில் ஸ்வைப்பிங் மெஷின் ஒன்றுதான் கேடு. இந்த மாதிரி ஆட்களை வைத்துக்கொண்டு ஸ்வைபிங் மெஷின், அதுக்கு மாதக்கட்டணம் வேற அழணுமா?

“QR கோடு இருக்குப் பாருங்க”

“இதில் வேற பேங்க் போட்டுருக்கு! நான் கூகுள் பேதான் வைச்சிருக்கேன்!”

“எல்லாம் அக்சப்ட் ஆகும், போடுங்க”

ஸ்கேன் பண்ணிவிட்டு, “16500 ரவுண்டா போட்டுறவா?”

கொதிப்பை அடக்கிக்கொண்டு, போட்டுத் தொலைங்க என்பதை,

“போடுங்க” என்பதாகச் சொன்னேன்.

அதன் பின்பு எழுந்து வெளியேறி, காரில் ஏறும் போது கேட்டார்,

“அந்த ரிட்டர்ன் மெட்டீரியலை நீங்களே வந்து எடுத்துப்பீங்கள்ல?”

இப்போதும் எனக்கு கண்ணு கசங்கியது. ஆனால், காரணம்தான் வேறு.

ஒரு வணிகனின் கதை 10
ஒரு வணிகனின் கதை 9 | தொழிலில் சொல்லின் முக்கியத்துவம் என்ன?

இந்த கிருஷ்ணன் மாதிரியான, காரியம் நடக்கும் வரை மிக இனிமையாகப் பேசுவதும், பிறகு கடுமையாகவும், அடுத்தவருக்கு நம்மால் ஏற்பட்ட நஷ்டத்தைப் பற்றி துளியும் கவனத்தில் கொள்ளாத நபர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இவர்களை எப்படிக் கையாளுவீர்கள்? பதில் தாருங்கள். அடுத்த அத்தியாயத்தில் மேலும் சில கஸ்டமர்களைப் பற்றிப் பார்க்கலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com