சவரனுக்கு ரூ. 1440 குறைந்த தங்கம் விலை.. தொடர்ந்து குறையுமா? விபரம் என்ன?
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,440 குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க வரிவிதிப்பின் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், தற்போது விலை குறைவது பேசுபொருளாகியுள்ளது. வர்த்தகர்கள் இந்த குறைவு தற்காலிகம் எனவும், வட்டிவிகிதம் குறைந்தால் விலை மீண்டும் உயரும் எனவும் கருதுகின்றனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,440 குறைந்திருக்கிறது. ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்திற்கும் ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை சவரனுக்கு ரூ.2 ஆயிரம் வரை விலை உயர்வைக் கண்டிருந்த தங்கத்தின் விலை மாலையில் விலை குறைந்திருக்கிறது.
சமீப காலமாகவே தங்கத்தின் விலை தொடர் உச்சத்தில் இருந்தது. நாள்தோறும் விலை ஏற்றம் இருந்த நிலையில், சில சமயங்களில் ஒரே நாளில் இரண்டு முறைகூட விலையேற்றங்கள் நிகழ்ந்தன. ஆனால், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அவ்வப்போது குறைந்தது.
பொதுவாகவே தங்கத்தின் விலையேற்றத்திற்கு சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல்களே காரணமெனச் சொல்லலாம். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வரிவிதிப்பு கொள்கைகள்தான், கடந்த ஓராண்டாகவே தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்ததற்கு காரணம் என சொல்லலாம். குறிப்பாக, ட்ரம்ப் வரிவிதிப்பின் காரணமாக முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைகளில் அல்லாமல், தங்கம் போன்ற பாதுகாப்பு மிகுந்தவற்றில் முதலீடு செய்ய ஆரம்பித்தனர். இதன் காரணமாக தங்கத்தின் விலை தொடர் ஏற்றத்திலேயே இருந்தது.
சமீப காலமாக ஏற்படக்கூடிய சரிவு என்பது அவ்வப்போது ஏற்படக்கூடிய சரிவுதான் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்த சரிவு நிலை அப்படியே தொடரும் என்றும் வர்த்தகர்கள் சொல்லவில்லை. மாறாக இந்த ஆண்டு முழுவதுமே தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்றுதான் வர்த்தகர்கள் கூறுகின்றனர். அதற்கு மிக முக்கியமான காரணம் அமெரிக்காவின் ரிசர்வ் வங்கி இம்மாதத்தின் இறுதியில் வட்டிவிகிதத்தைக் குறைக்க வாய்ப்புள்ளது. அப்படி வட்டி குறைக்கப்பட்டால் தங்கத்தின் மீதான முதலீடுகள் இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும். அப்படிப்பார்த்தால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம்தான் இருக்கும், இந்தக்குறைவு அவ்வப்போது ஏற்படும் குறைவுதான் என்கின்றனர் வர்த்தகர்கள்.