பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணி.. புதிய கேப்டனாக ஷாஹீன் ஷா அப்ரிடி நியமனம்!
பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷாஹீன் ஷா அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர்-பேட்டரான முகமது ரிஸ்வான் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் அவரை நீக்கிவிட்டு ஷாஹீன் ஷா அப்ரிடியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேப்டனாக நியமித்துள்ளது. அணியின் பயிற்சியாளர் மைக் ஹசன், தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஷாஹீன் ஷா அப்ரிடி, முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடியின் மருமகன் ஆவார். ரிஸ்வான் பந்தய நிறுவனங்களை ஆதரிக்க மாட்டேன் என்று பிசிபியிடம் தெரிவித்ததே அவரது பதவி நீக்கத்திற்குக் காரணம் என டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், கரீபியன் பிரீமியர் லீக்கில் (CPL) செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக விளையாடியபோது, ரிஸ்வான் ஒரு பந்தய நிறுவனத்தின் லோகோவை அணியவும் அங்கீகரிக்கவும் மறுத்துவிட்டார். அவர் ஒரு பந்தய வலைத்தளத்திற்குச் சொந்தமான பிரதான ஸ்பான்சரின் லோகோ இல்லாத ஜெர்சியை அணிந்து விளையாடினார் என அது தெரிவித்துள்ளது.
தற்போது, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்குப் பிறகு மூன்று 20 ஓவர் ஆட்டத்திலும், 3 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடுகிறது. ஒரு நாள் தொடர் நவம்பர் 4ஆம் தேதி தொடங்க இருக்கிறது. 2023ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, கேப்டன் பதவியில் தொடர்ச்சியான மாற்றங்களைக் கண்டுள்ளது. பல்வேறு பிசிபி நிர்வாகங்களின்கீழ் பல்வேறு வடிவங்களில் பல வீரர்கள் அணியை வழிநடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு கடந்த 2024-இல் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பாகிஸ்தானை அப்ரிடி வழிநடத்தி உள்ளார்.