தென்கொரியா | ஒரு கரப்பான் பூச்சிக்காக அடுக்குமாடி குடியிருப்பைக் கொளுத்திய 20 வயது பெண்!
கரப்பான் பூச்சிக்கு பயந்து ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பையே கொளுத்திய கதை தென் கொரியாவில் நடந்துள்ளது.
’மூட்டைப்பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவது’ என்ற பழமொழியை கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில் கரப்பான் பூச்சிக்கு பயந்து ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பையே கொளுத்திய கதை தென் கொரியாவில் நடந்துள்ளது. தென் கொரியாவின் ஓசான் நகரில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில் கீழ்தளத்தில் வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. மேல்தளங்களில் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் 20 வயதுடைய பெண் ஒருவர், தன்னுடைய வீட்டு அறையில் கரப்பான் பூச்சியைக் கண்டுள்ளார். இதையடுத்து அதைக் கொல்வதற்காக ஒரு தற்காலிக ஃபிளேம்த்ரோவரை (லைட்டர் மற்றும் எரியக்கூடிய ஸ்ப்ரேயை இணைத்து) பயன்படுத்தியுள்ளார்.
அதன் வழியாக தீப்பிழம்புகள் விரைவாக வீட்டுப் பொருட்களுக்கு பரவி, தீ அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் பரவியுள்ளது. இதில், அந்தக் குடியிருப்பில் வசித்து வந்த 30 வயது மதிக்கத்தக்க சீனப் பெண் ஒருவர் தீ மற்றும் அதிக புகை காரணமாக சிக்கிக் கொண்டார். பின்னர், படுகாயங்களுக்குப் பிறகு அவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த தீ விபத்து காரணமாக, குறைந்தபட்சம் 8 பேர் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்தியதற்காகவும், தீ மூட்டியதற்காகவும் பொறுப்பான அந்த இளம் பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சமூக ஊடகங்களில் உள்ள வீடியோக்கள் ஊதுகுழல்கள் அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட சுடர் எறியும் கருவிகளைப் பயன்படுத்துவது உட்பட கரப்பான் பூச்சிகளைக் கொல்லும் தீவிர முறைகள் பிரபலமாகி வருகின்றன.
இருப்பினும், இந்த முறைகள் ஆபத்தானவை என எச்சரிக்கப்படுகிறது. முன்னதாக, இதேபோன்ற சில சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. 2018ஆம் ஆண்டு, ஆஸ்திரேலிய நபர் ஒருவர், தனது வீட்டில் தயாரிக்கப்பட்ட சுடர் எறியும் கருவியால் தனது சமையலறைக்கு தீ வைத்தார். அடுத்து 2023ஆம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த நபர் ஒருவர், கரப்பான்பூச்சியைக் கொல்ல பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து வீடு முழுதும் தெளித்துள்ளார். இதில், துரதிர்ஷ்டவசமாக மின் இணைப்பின் அருகில் அந்தப் பூச்சிக்கொல்லி மருந்தை அவர் தெளித்ததால், தீவிபத்து ஏற்பட்டது. எனினும் அந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.