காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா முன்மொழிந்துள்ள திட்டத்திற்கு உலக நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்னை என்பது 19ஆம் நூற்றாண்டில் இருந்தே இருந்து வருகிறது. இருந்தபோதும், அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 815 பொதுமக்கள் உட்பட 1,195 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். அதோடு, 251 பேர் பிணைக்கைதிகளாகப் கொண்டு செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. அது இன்றுவரை தொடர்கிறது. மறுபுறம், இந்தப் போரிலிருந்து தப்ப வடக்கு, மத்திய காஸாவில் உள்ள மக்கள் தெற்கு நோக்கி கூட்டம்கூட்டமாகப் படையெடுத்துச் செல்கின்றனர். தெற்கில் இஸ்ரேல் ராணுவத்தின் மனிதாபிமான பகுதிகளுக்கு பலரும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
அதேநேரத்தில், இந்தப் போரினால், இதுவரை 66,005 நபர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 168,162 பேர் காயமடைந்து உள்ளதாகவும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உலக நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும், பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கவும் முடிவு செய்துள்ளன. இவ்விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது நெதன்யாகு, கத்தாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குலுக்காக, அந்நாட்டு பிரதமரிடம் தொலைபேசி வாயிலாக வருத்தம் தெரிவித்தார். பின்னர் ட்ரம்பும், நெதன்யாகுவும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இதில் பேசிய ட்ரம்ப், ”அமைதிக்கான ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ளாவிட்டால், அந்த அமைப்பை தோற்கடிக்க இஸ்ரேல் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும்” என எச்சரித்தார். அப்போது நெதன்யாகு, “ஹமாஸ் ட்ரம்பின் திட்டத்தை ஏற்காவிடில், அதனை தாங்களே அழித்தொழிப்போம்” என கூறினார்.
மேலும், ட்ரம்பின் தலைமையில் இடைக்கால அரசு என்பது உள்ளிட்ட 20 அம்ச திட்டத்தை, காஸா போர் நிறுத்தத்திற்காக அமெரிக்கா முன்மொழிந்துள்ளது.
இத்திட்டத்தின்படி, அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்ட 3 நாட்களுக்குள், ஹமாஸ் வசம் இருக்கும் பணயக்கைதிகள் ஒப்படைக்கப்பட வேண்டும்.
பணயக் கைதிகள் ஒப்படைத்தல் தொடங்கியதும், பாலஸ்தீனத்திலிருந்த இஸ்ரேலிய படைகள் பின்வாங்க வேண்டும்.
காஸாவில் அமைதி வாரியம் என்ற பெயரில், ட்ரம்ப் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்படும்.
அன்றாட நிர்வாகத்தினை, தொழில்முறை பாலஸ்தீனிய நிர்வாகம் கவனிக்கும்.
சிறந்த வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்த, காஸாவில மறுகட்டமைப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
காஸாவிலிருந்து ஆயுதக் குழுக்கள் அகற்றப்படும்.
ஆயுதங்களைக் கைவிடும் ஹமாஸ் உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படும்.
ஆயுதக்குறைப்பு நடவடிக்கை முன்னேற்றம் அடையும்போது, உலகளாவிய கூட்டாளிகளுடனான ஒரு கூட்டு கட்டமைப்பின் மூலம், காஸாவின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
அமெரிக்காவின் 20 அம்ச முன்மொழிவுகள், கத்தார் மற்றும் எகிப்து அதிகாரிகள் மூலம் ஹமாஸிடம் அளிக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை வரவேற்றுள்ள பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், "இஸ்ரேல் இந்த அடிப்படையில் உறுதியுடன் ஈடுபடும் என்று நான் எதிர்பார்க்கிறேன். ஹமாஸுக்கு அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக விடுவித்து இந்தத் திட்டத்தைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை“ என தெரிவித்துள்ளார்.
இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, "அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று முன்வைத்த திட்டம் ஒரு திருப்புமுனையைக் குறிக்கும், இது போர்களை நிரந்தரமாக நிறுத்துவதற்கும், அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக விடுவிப்பதற்கும், முழுமையான மற்றும் பாதுகாப்பான மனிதாபிமான அணுகலை வழங்குவதற்கும் வழிவகுக்கும்" எனத் தெரிவித்துள்ளார். இவர்களைத் தவிர பிரிட்டன், ஜெர்மனி, பாகிஸ்தான், ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில், சவூதி அரேபியா, ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, துருக்கி, கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளும் இந்தத் திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.