இஸ்ரேலின் தொடர் தாக்குதல்.. காஸாவில் 66,000 பேர் பலி.. சுகாதார அமைச்சகம் தகவல்!
இஸ்ரேலின் தொடர் தாக்குதலால், காஸாவில் 66,000 பேர் பலியாகி இருப்பதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்னை என்பது 19ஆம் நூற்றாண்டில் இருந்தே இருந்து வருகிறது. இருந்தபோதும், அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 815 பொதுமக்கள் உட்பட 1,195 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். அதோடு, 251 பேர் பிணைக்கைதிகளாகப் கொண்டு செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. அது இன்றுவரை தொடரும் நிலையில், காஸாவை முழுமையாக நிர்மூலமாக்குவதே இஸ்ரேலின் குறிக்கோளாக இருக்கிறது. ஆம், அதற்காக காஸாவில் உள்ள மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையிலும் இஸ்ரேல் ராணுவம் இறங்கியுள்ளது.
இன்றுவரை தொடரும் போரில், பெரிய கட்டடங்கள் மட்டுமின்றி, சிறிய கூடாரங்களைக்கூட விட்டுவைக்காமல் இஸ்ரேல் படைகள் மூர்க்கமாக தாக்கி வருகின்றன. இதிலிருந்து தப்ப வடக்கு, மத்திய காஸாவில் உள்ள மக்கள் தெற்கு நோக்கி கூட்டம்கூட்டமாகப் படையெடுத்துச் செல்கின்றனர். தெற்கில் இஸ்ரேல் ராணுவத்தின் மனிதாபிமான பகுதிகளுக்கு பலரும் இடம்பெயர்ந்து வருகின்றனர். போரினால், இதுவரை அங்கு 66,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஸா சுகாதார அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 66,000ஐத் தாண்டியுள்ளது. இறந்தவர்களில் 79 பேர் கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டவர்கள் என்று அது தெரிவித்துள்ளது. காஸாவில் 66,005 நபர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 168,162 பேர் காயமடைந்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
மேலும், இறந்தவர்களில் பாதிப் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று அது கூறியுள்ளது. அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கையும், காஸாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையுடன் தொடர்ந்து சார்ந்துபோகிறது. இதுதவிர, மேலும் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளதாக நம்பப்படுகிறது. இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து காஸாவில் தாக்குதலைத் தொடர்வதால், அங்கு பரந்த பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால், சுமார் 90% மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் பேரழிவு தரும் மனிதாபிமான நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம், காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உலக நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும், பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கவும் முடிவு செய்துள்ளன. இவ்விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.