காஸாவில் பத்திரிகையாளர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்.. 5 பேர் பலி.. வைரலாகும் கடைசிப் பதிவு!
அல் ஜசீரா (al jazeera) பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வரும் நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதல் காரணமாக, அங்கு இன்றுவரை போர் தொடர்கிறது. இதுவரை அங்கு 61,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். மேலும், காஸாவின் 80 சதவீத பகுதி தற்போது இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், மீதமுள்ள 20 சதவீத பகுதிகளிலும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி, தங்கள் வசப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், காஸா நகரின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஐந்து அல் ஜசீரா (al jazeera) செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அல்-ஷிஃபா மருத்துவமனையின் பிரதான வாயிலுக்கு வெளியே பத்திரிகையாளர்களுக்கான கூடாரத்தை குறிவைத்து இஸ்ரேலிய தாக்குதல் நடத்தியதில் அல் ஜசீரா நிருபர்களான அனஸ் அல்-ஷெரிப் மற்றும் முகமது கிரீக், கேமராமேன் இப்ராஹிம் ஜாஹர், மோமன் அலிவா மற்றும் முகமது நௌபால் ஆகியோர் பலியாகினர். இதுகுறித்து, "காஸா நகரில் பத்திரிகையாளர்கள் தங்கியிருந்த கூடாரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அல் ஜசீரா பத்திரிகையாளர் அனஸ் அல்-ஷெரீஃப் நான்கு சக ஊழியர்களுடன் கொல்லப்பட்டார்" என்று கத்தாரை தளமாகக் கொண்ட ஒளிபரப்பாளர் கூறினார்.
தாக்குதலை ஒப்புக்கொண்ட இஸ்ரேல் ராணுவம்
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலிய இராணுவம் ஒரு அறிக்கையில் அனஸ் அல்-ஷெரிப்பை குறிவைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் அல் ஜசீரா நிருபரை ’பயங்கரவாதி’ என்று முத்திரை குத்தியுள்ளது. அவர், ’ஹமாஸ் அமைப்பின் ஒரு பயங்கரவாதப் பிரிவின் தலைவராக பணியாற்றியவர்’ என்று தெரிவித்துள்ளது. "அவர், அல்-ஷெரிப் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பில் ஒரு பயங்கரவாதப் பிரிவின் தலைவராகப் பணியாற்றினார், மேலும் இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினருக்கு எதிராக ராக்கெட் தாக்குதல்களை முன்னெடுப்பதற்குப் பொறுப்பானவர்" என்று அது கூறியுள்ளது.
இந்த தாக்குதலில் அனஸ் அல்-ஷெரிப், தாம் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அது, இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில், ”என்னுடைய இந்த வார்த்தைகள் உங்களைச் சென்றடைந்தால், இஸ்ரேல் என்னைக் கொன்று என் குரலை அடக்குவதில் வெற்றி பெற்றுள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அனஸ் அல்-ஷெரிப் யார்?எச்சரிக்கை விடுத்த பத்திரிகை குழு!
உயிரிழந்த வடக்கு காஸாவைச் சேர்ந்த அல் ஜசீராவின் அரபு நிருபரான அனஸ் அல்-ஷெரிப், அந்தச் செய்தி நிறுவனத்தின் மிகவும் அடையாளம் காணக்கூடிய முகங்களில் ஒருவராக இருந்துள்ளார். வழக்கமான செய்திகளில் தினசரி அறிக்கைகளை வழங்கியுள்ளார். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்தில், காஸாவில் ஒரு புதிய தாக்குதல் நடத்த இருப்பதை படத்துடன் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், அவர் ஹமாஸ் பயங்கரவாதி என்று குற்றம்சாட்டி இஸ்ரேல் ராணுவம் ஆன்லைன் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது. இதையடுத்து, அவரது பாதுகாப்பை அதிகரிக்கக் கோரி பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு, கடந்த ஜூலை மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி இந்த துயரச் சம்பவம் அரங்கேறி உள்ளது.
பத்திரிகையாளர் படுகொலைக்குக் கண்டனம்!
காஸாவில் 22 மாதங்களாக நடைபெற்று வரும் போரில் பத்திரிகையாளர்கள் குறிவைக்கப்பட்ட சமீபத்திய தாக்குதல் இதுவாகும். மோதலின்போது சுமார் 200 ஊடக ஊழியர்கள் கொல்லப்பட்டதாக ஊடக கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது குறித்து CPJ பிராந்திய இயக்குநர் சாரா குடா, "நம்பகமான ஆதாரங்களை வழங்காமல் பத்திரிகையாளர்களை போராளிகள் என்று முத்திரை குத்தும் இஸ்ரேலின் முறை, அதன் நோக்கம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்திற்கான மரியாதை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களை ஒருபோதும் குறிவைக்கப்படக்கூடாது. இந்தக் கொலைகளுக்குப் பொறுப்பானவர்கள் பதிலளிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலும் அல் ஜசீராவும் பல ஆண்டுகளாக சர்ச்சைக்குரிய உறவைக் கொண்டுள்ளன. இஸ்ரேலிய அதிகாரிகள் நாட்டில் சேனலைத் தடை செய்து, காஸாவில் நடைபெற்ற சமீபத்திய போரைத் தொடர்ந்து அதன் அலுவலகங்களைச் சோதனை செய்தனர். அல் ஜசீராவிற்கு ஓரளவு நிதியளிக்கும் கத்தார், பல ஆண்டுகளாக ஹமாஸ் அரசியல் தலைமைக்கான அலுவலகத்தை நடத்தி வருகிறது. மேலும் இஸ்ரேலுக்கும் குழுவிற்கும் இடையே மறைமுக பேச்சுவார்த்தைகளுக்கு அடிக்கடி இடமாக இருந்து வருகிறது.